அரசுப் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு ஆங்கிலம் பலவீனமான  பாடம் என்ற ஒரு பொதுப் பார்வை சமூகத்தில் நீண்ட காலமாக இருந்து வருகிறது. உச்சரிப்பில் தயக்கம், பேசும்போது தடுமாற்றம், எழுதும்போது நம்பிக்கையின்மை இவை எல்லாம் அரசுப் பள்ளி மாணவர்களுடன் இணைத்து பேசப்படும் வழக்கமான அடையாளங்களாகிவிட்டன.  தனியார் மெட்ரிக் மற்றும் சிபிஎஸ்இ பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுடன் ஒப்பிடும்போது இந்த இடைவெளி தெளிவாகத் தெரிகிறது என்ற கருத்தும் பெற்றோரிடையே பரவலாக உள்ளது.

Advertisment

இந்த நிலையை மாற்ற வேண்டும் என்ற நோக்கில் தமிழக அரசு, அரசுப் பள்ளி மாணவர்களின் ஆங்கிலத் திறனை மேம்படுத்த திட்டமிட்ட முறையில் பல நடவடிக்கைகளைச் செயல்படுத்தி வருகிறது. குறிப்பாக நடுநிலைப் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களை இலக்கு வைத்து, வாசிப்பு, எழுதுதல், பேசுதல் ஆகிய மூன்று திறன்களையும் ஒரே நேரத்தில் வளர்க்கும் பயிற்சிகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. வகுப்பறைச் செயல்பாடுகள் வழியாக ஆங்கிலத்தை பயிற்சி மொழியாக மாற்றும் முயற்சிகள் முன்னெடுக்கப்படுகின்றன. வாசிப்புப் பழக்கத்தை உருவாக்க நூலக நேரம் ஒதுக்கப்படுவது முதல், ஆசிரியர்கள் தங்களுக்குள் கற்பித்தல் முறைகளைப் பகிர்ந்து கொள்ளும் அமைப்புகள் வரை பல கட்டமைப்பு மாற்றங்களும் அமைதியாக நடைமுறைக்கு வந்துள்ளன.

Advertisment

இந்த மாற்றங்களின் விளைவு நடைமுறையில் எப்படி இருக்கிறது என்பதற்கு விருதுநகர் மாவட்டத்தில் நடந்த ஒரு நிகழ்வு சிறிய உதாரணமாக அமைந்தது. திருச்சுழி தொகுதிக்குட்பட்ட நரிக்குடி ஒன்றியத்தின் வரிசையூர் பகுதியில் நடைபெற்ற நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் கலந்து கொண்ட நிதி, சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, அருகிலிருந்த அரசு நடுநிலைப் பள்ளிக்குச் திடீரெனச் சென்றார். அப்போது உணவு இடைவேளையில் இருந்த மாணவர்களுடன் சிரித்துப் பேசிய அவர், பின்னர் எட்டாம் வகுப்பறைக்குள் சென்று பாடப்பயிற்சி குறித்து தலைமை ஆசிரியரிடம் நேரடியாகக் கேட்டறிந்தார்.

அதன் பின்னர், ஒரு மாணவியை எழுந்து வாசிக்கச் சொல்லி, அவளுடன் சேர்ந்து ஆங்கிலப் பாடத்தை கவனித்தார். புவனேஸ்வரி என்ற அந்த மாணவி எந்தத் தயக்கமும் இல்லாமல் தெளிவான உச்சரிப்புடன் சரளமாகப் பாடத்தை வாசித்தார். சொற்களைத் தள்ளிப்போடாமல், அர்த்தம் புரியும் வகையில் வாசித்த அந்த நம்பிக்கை அமைச்சரின் கவனத்தை ஈர்த்தது. அவளது முயற்சியை அங்கிருந்தவர்களின் முன் பாராட்டிய அவர், தொடர்ந்து இவ்வாறே படித்து, இன்னும் புத்திசாலியாக (intelligent) சிறந்து விளங்க வேண்டும் என்று ஊக்குவித்தார்.  ஒரு அரசுப் பள்ளி வகுப்பறையில் நடந்த அந்த நிகழ்வு,  ஆங்கிலம் என்பது சிலருக்கே சொந்தமான திறன் அல்ல; வாய்ப்பும் பயிற்சியும் கிடைத்தால் அரசுப் பள்ளி மாணவர்களும் அதே நம்பிக்கையுடன் முன்னேற முடியும் என்பதை அமைதியாக நினைவூட்டியது.   

Advertisment