கோவை மாவட்டம் அவிநாசி சாலையில் உப்பிலிபாளையம் முதல் கோல்டுவின்ஸ் வரை 10.1 கிலோ மீட்டர் தூரத்திற்கு உயர்மட்ட மேம்பாலம் கட்டப்பட்டது. இது தமிழ்நாட்டின் மிகப்பெரிய உயர்மட்ட மேம்பாலம் ஆகும். இந்த மேம்பாலத்திற்குக் கோவையைச் சேர்ந்த பொறியியல் அறிஞர் ஜி.டி. நாயுடுவின் பெயரைச் சூட்டுவதாகத் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் தெரிவித்திருந்தார். அதனைத் தொடர்ந்து முதல்வர் மு.க. ஸ்டாலின் கடந்த 9ஆம் தேதி (09.10.2025) இந்த மேம்பாலத்தை மக்களின் பயன்பாட்டிற்காகத் தொடங்கி வைத்தார். அப்போது ஜி.டி. நாயுடுவின் மகன் ஜி.டி. கோபால், அமைச்சர்கள் எ.வ. வேலு, சு.முத்துசாமி, மு.பெ. சாமிநாதன் எனப் பலரும் கலந்துகொண்டனர்.
அதே சமயம் இந்த பாலத்திற்கு நாயுடு என்ற சமூக பெயர் இடம் பெற்றுள்ளதாக அரசியல் கட்சியினர் பலரும் விமர்சனத்தை முன்வைத்து வந்தனர். இந்நிலையில் இது தொடர்பாக அமைச்சர் தங்கம் தென்னரசு செய்தியாளர்களைச் சந்தித்து விளக்கம் அளித்தார். அப்போது அவர் பேசுகையில், “முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கடந்த ஒரு சில நாட்களுக்கு முன்பாக கோவையில் திறந்து வைத்த தமிழ்நாட்டிலேயே மிக நீளமான 10 கிலோமீட்டருக்கு மேலே உள்ள உயர்மட்ட பாலத்திற்குப் புகழ் பெற்ற விஞ்ஞானி ஜி.டி. நாயுடுவின் பெயரை வைத்திருப்பதையும் குறையாகச் சொல்கிறார்கள். ஜி.டி . நாயுடு யார்?. அவர் ஒரு மிகப்பெரிய விஞ்ஞானி.
அந்த பகுதியிலேயே அவர் குடியிருந்தவர். எனவே அந்த சாலைக்கு அவருடைய பெயரைக் கோவை மாவட்ட மக்கள் மட்டுமல்ல ஒட்டுமொத்த தமிழ்நாட்டு மக்களுக்கும் ஒரு மாபெரும் அடையாளமாக விஞ்ஞானியாக விளங்கியவர். அவருடைய பெயரைச் சூட்டுவது என்பது சாலப் பொருத்தமாக இருக்கும் என்கின்ற வகையில்தான் அவருடைய பெயரை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் சூட்டி அது பல தரப்பட்ட மக்களால் அங்கே வரவேற்கப்பட்டிருக்கிறது. இப்போது ஜி.டி. நாயடு பெயரிலேயே நாயுடு என்று இருக்கிறது என்று சொன்னால் அவருக்கு வெறும் ஜி.டி. பாலம் என்றா பெயர் வைக்க முடியும். அந்த பாலத்தில் ஜி.டி. நாயுடு பாலம் என்று வைக்கிற போதுதான் அவர் இன்னார் என்று அறியப்படுகிறார்.
அந்த காலத்திலே கூட திராவிட இயக்கத்தினுடைய தலைவர்களில் ஒருவராக இருந்த டி.எம். நாயருடைய பெயரிலே நாயர் என்கின்ற சமுதாய பின்னொட்டு பெயர் இருக்கிறது. இதில் நாயர் என்பதை எடுத்துவிட்டால் வெறும் டி.எம். என்ற பெயர் இருந்தால் அது எவ்வாறு சரியாக இருக்கும். எனவே அவற்றைக் குறிக்கப்படும்போது எவ்வாறு அறியப்பட்டார்களோ அந்த தலைவர்களைக் குறித்து வரக்கூடிய சந்ததியினர் அறிந்து கொள்ளக்கூடிய வகையில் தான் அது இருக்க வேண்டும். அவை விதி விலக்குகளாகக் கருதப்பட்டு வர வேண்டும் என்பதுதான் நடைமுறை. இது குறித்து எடப்பாடி பழனிச்சாமிக்கும், இன்னும் சிலரும் கூட என்னவென்று தெரியாமல் இவர் பேரை வைக்கக் கூடாது.
வேறு பேரை வைக்க வேண்டும் என்று இவற்றுக்கு ஊடே நின்று குறுக்குச்சால் ஓட்டி இதிலே அரசியல் லாபமும் பார்க்க முயல்வது என்பது மெத்தமும் கண்டிக்கத்தக்க ஒன்று. எனவே எத்தைத் தின்றால் பித்தம் தெளியும் என்கின்ற நிலையில் இருக்கக்கூடிய எதிர்க்கட்சி தலைவரும், அந்த நிலையைப் பின்பற்றி இருக்கக்கூடிய வேறு சில அரசியல் கட்சித் தலைவர்களும் இதனுடைய உண்மை நிலையை உணர்ந்து தமிழ்நாடு அரசு எந்த நோக்கத்திற்காக இந்த அரசாணையை வெளியிட்டு இருக்கிறது என்பதை உணர வேண்டும்” எனப் பேசினார்.