விருதுநகர் மாவட்டம், திருச்சுழி சட்டமன்றத்திற்கு உட்பட்ட நரிக்குடி ஒன்றியத்தைச் சார்ந்த வீரசோழன் அரசு மேல்நிலைப் பள்ளியில் 636 மாணவ - மாணவியர் பயின்று வருகின்றனர். தற்போது கூடுதலாக 13 புதிய வகுப்பறை கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த கட்டுமானப் பணிகளை அமைச்சர் தங்கம் தென்னரசு நேரில் ஆய்வு செய்தார். இந்த ஆய்வின் போது, பள்ளி மாணவ-மாணவிகளுடன் உரையாடினார். அப்போது, 11ஆம் வகுப்பு மாணவியான வெயில் கனி, நெகிழியால் (பிளாஸ்டிக்) இயற்கைக்கு ஏற்படும் பாதிப்புகள் குறித்து கேள்வி ஒன்றை எழுப்பினார்.
இந்தக் கேள்விக்குப் பதிலளித்த அமைச்சர் “நெகிழியின் பயன்பாடு அதன் தன்மை மற்றும் அடர்த்தியைப் பொறுத்து இரு வகைகளாக உள்ளன. இதற்கு மைக்ரான் அளவு அடிப்படையில் ஒரு வரையறை உள்ளது. அதன்படி, குறிப்பிட்ட அளவு மைக்ரான் கொண்ட நெகிழிப் பைகள் மட்டுமே பயன்பாட்டில் அனுமதிக்கப்படுகின்றன. இருப்பினும், சுற்றுச்சூழலுக்குப் பெரும் தீங்கு விளைவிக்கும் ஒருமுறை பயன்படுத்தப்படும் நெகிழிப் பைகள் மற்றும் பொருள்களை அரசு தடை செய்துள்ளது. இவற்றுக்கு மாற்றாக துணிப்பைகள், மஞ்சப்பைகள் மற்றும் விரைவில் மக்கும் பொருட்களைப் பயன்படுத்த மக்களை ஊக்குவிக்கிறோம். மேலும், நெகிழி பல துறைகளில், குறிப்பாக அறிவியல் துறையில் முக்கியப் பங்கு வகிக்கிறது. ஆனால், அனுமதிக்கப்பட்ட மைக்ரான் அளவு கொண்ட நெகிழிப் பொருள்களை மட்டுமே பயன்படுத்தவேண்டும்” என்று விளக்கினார்.
அங்கு 11ஆம் வகுப்பு மாணவியான பவானி, தங்கள் பகுதிக்கு மாலை நேரங்களில் பேருந்து வரவில்லை. இதனால் வீடு திரும்ப சிரமமாக உள்ளது எனத் தெரிவித்தார். இதையடுத்து அப்பகுதிக்கு மாலை நேரங்களில் பேருந்து இயக்க வகை செய்வதாக அமைச்சர் தங்கம் தென்னரசு உறுதியளித்தார். தமிழ்நாடு அரசின் நல்லாசிரியர் விருது பெற்ற தலைமை ஆசிரியர் ராஜாராமுக்கு கைபேசி வாயிலாக தனது வாழ்த்துகளைத் தெரிவித்த அமைச்சரிடம் மாணவர்கள், தங்கள் பள்ளிக்கு விளையாட்டு ஆசிரியர் வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர். அப்போது நீங்கள் விளையாட்டில் ஆர்வமாக இருப்பது எனக்கு மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. கண்டிப்பாக புதிய ஆசிரியர் நியமிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தார்.
மேலும், தன்னிடம் பேசத் தயங்கிய மாணவ - மாணவிகளிடம் காலாண்டு பரீட்சை நாளைக்கு தான். இன்னைக்கு நான் உங்களைக் கேள்வி கேட்கமாட்டேன் எனச் சிரித்தபோது, மாணவர்களும் சேர்ந்து சிரித்தனர். அனைத்து மாணவ - மாணவிகளும் காலாண்டுத் தேர்வில் சிறப்பாகத் தேர்ச்சி பெற வேண்டும் என வாழ்த்தும் தெரிவித்தார், அமைச்சர் தங்கம் தென்னரசு. தங்கம் தென்னரசுவின் தாயார் ராஜாமணி மற்றும் தந்தை வே. தங்கபாண்டியன் ஆகிய இருவருமே ஆசிரியர்களாகப் பணியாற்றியவர்கள். அவர்களின் வழியில், அமைச்சரும் ஒரு ஆசிரியர் பாடம் நடத்துவது போலவே, மாணவியின் கேள்விக்கு விரிவாகவும், சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்து புரிந்துகொள்ள உதவும் வகையிலும் பதிலளித்தார்.