2026 - 2027ஆம் நிதியாண்டுக்கான இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்வதற்காகத் தமிழ்நாடு சட்டப்பேரவை இன்று (17.02.2026) காலை 09:30 மணிக்குக் கூடியது. அப்போது இடைக்கால நிதிநிலை அறிக்கையை நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்து உரையாற்றினார். அந்த உரையில், “கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டம் இந்தியாவில் முன்னோடி திட்டமாக உள்ளது. இதனைப் பிற மாநிலங்கள் பின்பற்றுவதுதான் இந்த திட்டத்தின் மிகப் பெரிய வெற்றி ஆகும். 5 ஆயிரம் ரூபாயைக் கலைஞர் மகளிர் உரிமைத் தொகையாகத் தமிழக மகளிரின் வங்கிக் கணக்கில் செலுத்தியபோது தமிழ்நாடே இன்ப அதிர்ச்சியில் உறைந்துபோனது. சுமார் 3 மணி நேரத்திற்குள் 1.31 கோடி மகளிரின் வங்கிக் கணக்கில் வரவு வைத்தபோது நாடே திரும்பிப் பார்த்தது.

Advertisment

நாடு முழுவதும் தொழிற்சாலைகளில் பணிபுரியும் பெண்களில் 41 சதவீத பெண்கள் தமிழ்நாட்டில் பணிபுரிகின்றனர். முதலமைச்சரின் காலை உணவுத் திட்டத்தால், பள்ளிக்கு வரும் மாணவர்களின் வருகை அதிகரித்துள்ளது. சுமார் 19.34 லட்சம் பேர் பயன் பெறும் இந்தத் திட்டத்திற்கு ரூ.1889 கோடி செலவு செய்யப்பட்டுள்ளது. 10 ஆயிரத்து 637 குழந்தைகள் அன்புக் கரங்கள் திட்டம் மூலம் பயனடைந்துள்ளனர். மூத்த குடிமக்களுக்கு 25 அன்பு சோலைகள் அமைக்கப்பட்டுள்ளன. திருநங்கைகள் சுயமாகத் தொழில் மேற்கொள்ளத் தமிழக அரசு அரசு மானியம் வழங்கி வருகிறது. தாயுமானவர் திட்டத்தின் கீழ் 27 லட்சம் மூத்த குடிமக்கள் பயன் பெற்றுள்ளனர். 

Advertisment

புதுமைப் பெண் திட்டத்தில் 6.95 லட்சம் மாணவிகளும், தமிழ்ப் புதல்வன் திட்டத்தில் 5.40 லட்சம் மாணவர்களும் பயன் பெற்று மாதம் தோறும் 1000 ஆயிரம் ரூபாய் பெற்று  வருகின்றனர். காவிரி, வைகை, நொய்யல், தாமிரபரணி ஆகிய ஆறுகளில் கழிவுநீர் கலப்பதைத் தடுத்து, கரையோரம் பூங்கா ஆகியவை அமைத்து நதிக்கரை மேம்பாட்டுப் பணிகளை மேற்கொள்ள ரூ. 374 கோடி ஒதுக்கீடு செய்யப்படுகிறது. வடசென்னை வளர்ச்சி திட்டம், இலட்சிய திட்டமாகச் சிறப்பாகச் செயல்பட்டு வருகிறது.  இந்த திட்டத்தின் கீழ் பேருந்து நிலையம், உடற்பயிற்சி நிலையம், பூங்காக்கள், தொழில்நுட்ப கல்லூரி அமைப்பது என ரூ. 6 ஆயிரத்து 48 கோடி மதிப்பில் பணிகள் செயல்படுத்தப்பட்டு வருகிறது

nalam-kakkum-stalin
கோப்புப்படம்

நலன் காக்கும் ஸ்டாலின் முகாம் மூலம் 17 லட்சம் பேர் பயன் பெற்றுள்ளனர். இன்னுயிர் காப்போம் திட்டத்தில் 5.11 லட்சம் பேரின் உயிர்கள் காப்பாற்றப்பட்டுள்ளன. இதற்காக ரூ. 413 கோடி செலவிடப்பட்டுள்ளது. இடைக்கால பட்ஜெட்டில் உயர்கல்வித் துறைக்கு ரூ. 8 ஆயிரத்து 505 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. பள்ளிக் கல்வித்துறைக்கு ரூ. 48 ஆயிரத்து 534 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறைக்கு ரூ. 718 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மருத்துவத்துறைக்கு ரூ. 22 ஆயிரத்து 90 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது”எனத் தெரிவித்தார்.  

Advertisment