விருதுநகர் மாவட்டம் திருச்சுழியில், துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள் மற்றும் சமத்துவம் போற்றும் திராவிடப் பொங்கல் விழாவை முன்னிட்டு மாபெரும் கிரிக்கெட் போட்டி இன்று (04.01.2025) தொடங்கியது. இதனை அமைச்சர் தங்கம் தென்னரசு தொடங்கி வைத்தார். 2026 புத்தாண்டை முன்னிட்டு, திராவிடப் பொங்கல் விழாவைச் சமத்துவம், சமூகநீதி மற்றும் திராவிட கொள்கைகளைப் பிரதிபலிக்கும் கொண்டாட்டமாக நடத்த வேண்டும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தியிருந்தார்.
அதன்படி, கலை - இலக்கிய நிகழ்வுகள், விளையாட்டுப் போட்டிகள் மூலம் இளைஞர்களை ஈர்க்கும் வகையில் விழா ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. அதன் முதல் நிகழ்வாக, திருச்சுழி ஒன்றியத்துக்குட்பட்ட காரியாபட்டியில் இந்த கிரிக்கெட் போட்டி நடைபெறுகிறது. ஜனவரி 3 முதல் 9 வரை நடைபெறும் இப்போட்டியில் 66 அணிகள் பங்கேற்கின்றன. வெற்றி பெறும் அணிக்கு முதல் பரிசாக ரூ.1 லட்சம், இரண்டாம் பரிசாக ரூ.75 ஆயிரம், மூன்றாம் பரிசாக ரூ.50 ஆயிரம் வழங்கப்பட உள்ளது.
/filters:format(webp)/nakkheeran/media/media_files/2026/01/04/dravida-pongal-thangam-thennarasu-2026-01-04-18-03-07.jpg)
இந்த கிரிக்கெட் போட்டியின் தொடக்க விழாவில் பேசிய அமைச்சர் தங்கம் தென்னரசு, “விளையாட்டு என்பது சமூகத்தில் ஒற்றுமையை விதைப்பதும், மனிதர்களுக்கிடையேயான பிணைப்பை வலுப்படுத்துவதும் ஆகும். பகிர்ந்து கொள்ளுதல், சகிப்புத்தன்மை போன்ற சமூகப் மாண்புகளை மக்களுக்கு நடைமுறையில் எடுத்துக்காட்டும் சிறந்த ஊடகமாக விளையாட்டு திகழ்கிறது. இந்தப் போட்டிகளின் நோக்கம் வெறும் பரிசுத் தொகைக்காக மட்டுமல்ல; திருச்சுழி தொகுதியிலுள்ள இளைஞர்களின் விளையாட்டு ஆர்வத்தைக் கண்டறிந்து, அவர்களை ஊக்குவித்து, உயர்ந்த நிலைக்கு அழைத்துச் செல்லும் தொடக்கமாக அமைய வேண்டும்.
/filters:format(webp)/nakkheeran/media/media_files/2026/01/04/dravida-pongal-thangam-thennarasu-1-2026-01-04-18-03-32.jpg)
இப்பகுதியில் பங்கேற்கும் அணிகளுக்கு விளையாட்டு உபகரணங்கள் வழங்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. விளையாட்டு வீரர்களுடன் இணைந்து அனைவரும் கைகோர்த்து, விளையாட்டின் வழியாக ஒரு புதிய சகாப்தத்தை உருவாக்க வேண்டும்” எனப் பேசினார். மேலும் இந்தப் போட்டி குறித்து முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் சேகர் கூறுகையில், இதற்கு முன் இவ்வளவு பெரிய கிரிக்கெட் போட்டி இந்தப் பகுதியில் நடந்ததில்லை. திராவிடப் பொங்கல் விழாவுக்காகவே இரண்டு புதிய கிரிக்கெட் மைதானங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. முன்பு பெரிய போட்டிகளில் விளையாட மதுரை உள்ளிட்ட மாவட்டங்களுக்குச் செல்லவேண்டிய நிலை இருந்தது. இப்போது சொந்த ஊரிலேயே இந்த மாபெரும் விளையாட்டு திருவிழா நடப்பது மகிழ்ச்சியளிக்கிறது என்றார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/media_files/2026/01/04/dravida-pongal-thangam-thennarasu2-2026-01-04-18-00-27.jpg)