Minister Thangam Tennarasu presents prizes Dravidian Pongal Festival Cricket Tournament
சமத்துவம், சமூகநீதி மற்றும் திராவிடக் கொள்கைகளை போற்றும் திராவிடப் பொங்கல் விழாவை முன்னிட்டு, விருதுநகர் மாவட்டம் திருச்சுழியில் மாபெரும் கிரிக்கெட் திருவிழாவாக ‘திருச்சுழி பிரீமியர் லீக் (TPL)’ போட்டி வெகு விமர்சையாக நடைபெற்றது. தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 2026 புத்தாண்டை முன்னிட்டு திராவிடப் பொங்கலை மக்களுடன் இணைந்து, குறிப்பாக இளைஞர்களை ஊக்குவிக்கும் வகையில் விளையாட்டுப் போட்டிகளுடன் கொண்டாட வேண்டும் என அறிவுறுத்தியிருந்தார். அந்த அறிவிப்பைத் தொடர்ந்து, முதல் கட்டமாக விருதுநகர் மாவட்டம், திருச்சுழி தொகுதியில் இந்த மாபெரும் கிரிக்கெட் போட்டி ஏற்பாடு செய்யப்பட்டது.
துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள் மற்றும் திராவிடப் பொங்கல் விழாவை முன்னிட்டு, நிதி, சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு முன்னெடுப்பில் இந்தப் போட்டி ஜனவரி 3ஆம் தேதி துவக்கி வைக்கப்பட்டது. காரியாபட்டியில் நடைபெற்ற இந்தத் திருச்சுழி பிரீமியர் லீக் கிரிக்கெட் போட்டியில், திருச்சுழி தொகுதியைச் சேர்ந்த 66 அணிகள் ஆர்வமுடன் கலந்து கொண்டு விளையாடின. இளைஞர்கள், பொதுமக்கள் என அனைவரின் பங்கேற்புடன் போட்டிகள் மிகுந்த உற்சாகத்துடன் நடைபெற்றன.
/filters:format(webp)/nakkheeran/media/media_files/2026/01/09/ama2-2026-01-09-07-44-04.jpg)
இறுதிப் போட்டியில், டால்பின் கிரிக்கெட் கிளப் மற்றும் திருச்சுழி ரைசிங் யங் ஸ்டார் அணிகள் மோதின. டாஸ் வென்ற டால்பின் கிரிக்கெட் கிளப் முதலில் பீல்டிங் தேர்வு செய்தது. முதலில் பேட்டிங் செய்த திருச்சுழி ரைசிங் யங் ஸ்டார் அணி 8 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை இழந்து 60 ரன்கள் எடுத்தது. பின்னர் பேட்டிங் செய்த டால்பின் கிரிக்கெட் கிளப்பும் 8 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து 60 ரன்களே எடுத்ததால் போட்டி டையாக முடிந்தது.
இதனைத் தொடர்ந்து நடைபெற்ற சூப்பர் ஓவரில், முதலில் பேட்டிங் செய்த டால்பின் கிரிக்கெட் கிளப் 1 ஓவரில் 13 ரன்கள் எடுத்து 1 விக்கெட் இழந்தது. அதன்பின் பேட்டிங் செய்த திருச்சுழி ரைசிங் யங் ஸ்டார் அணி 4 பந்துகளிலேயே 14 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது. போட்டியின் முடிவில், வெற்றி பெற்ற வீரர்களை அமைச்சர் தங்கம் தென்னரசு நேரில் பாராட்டி, திருச்சுழி ரைசிங் யங் ஸ்டார் அணிக்கு வெற்றிக் கோப்பை, பதக்கங்கள் மற்றும் பரிசுத்தொகையை வழங்கி சிறப்பித்தார். இந்தப் போட்டியில் முதல் இடத்தில் வெற்றி பெற்ற திருச்சுழி ரைசிங் யாங் ஸ்டார் அணிக்கு ரூ.1,00,000 இரண்டாம் இடத்தில் உள்ள கல்குறிச்சி டால்பின் கிரிக்கெட் கிளப் ரூ. 75,000 மூன்றாம் இடத்தில் உள்ள மீனாட்சிபுரம் எம்.எம்.பி சூப்பர் கிங்ஸ் ரூ.50,000, நான்காம் இடத்தில் உள்ள ஆவியூர் கிரிக்கெட் கிளப் ரூ. 25,000 என பரிசுத் தொகைகள் வழங்கப்பட்டன.
/filters:format(webp)/nakkheeran/media/media_files/2026/01/09/ama3-2026-01-09-07-44-15.jpg)
திராவிடப் பொங்கல் கொண்டாட்டத்தின் ஒரு அங்கமாக நடைபெற்ற இந்த விளையாட்டு விழா, இளைஞர்கள் மத்தியில் பெரும் உற்சாகத்தையும் மகிழ்ச்சியையும் ஏற்படுத்தியதுடன், சமூக ஒற்றுமையையும் விளையாட்டு ஆர்வத்தையும் வளர்க்கும் ஒரு சிறந்த நிகழ்வாக அமைந்தது.
Follow Us