கண்மாய் புனரமைப்புப் பணிகள் மிகவும் அவசியமானது. நீர் நிலைகளைப் பாதுகாக்கவும், நீர் வளத்தை மேம்படுத்தவும், விவசாயத்திற்குத் தேவையான நீரைச் சேகரிக்கவும், நிலத்தடி நீரை அதிகரிக்கவும், சுற்றுச்சூழலை மேம்படுத்தவும், கண்மாய் புனரமைப்புப் பணிகள் விவசாயத்தின் அடிப்படைத் தேவையாக உள்ளன. விருதுநகர் மாவட்டம் நரிக்குடி ஒன்றியத்தில் ரூ.3.61 கோடி மதிப்பீட்டிலான கண்மாய் புனரமைப்புப் பணிகளை, திருச்சுழி தொகுதி சட்டமன்ற உறுப்பினரும் அமைச்சருமான தங்கம் தென்னரசு தொடங்கி வைத்தார்.
விருதுநகர் மாவட்டம், திருச்சுழி சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட நரிக்குடி ஒன்றியத்தில் உள்ள கட்டனூர் கண்மாய்க்கு ரூ. 2.96 கோடி மதிப்பீட்டில் புனரமைக்கும் பணிகளும், ரூ.65 இலட்சம் மதிப்பீட்டில் நரிக்குடி கண்மாய்க்கான புனரமைக்கும் பணிகளும் தொடங்கிவைக்கப்பட்டுள்ளன.
இதன்முலம் கட்டனூர் கண்மாய்க் கரையில் 6200 மீட்டர் நீளத்திற்குப் பலப்படுத்தும் பணி, வரத்துக்கால்வாயில் 5400 மீட்டர் நீளத்திற்குத் தூர்வாரும் பணி, கட்டனூர் அணைக்கட்டினை மேம்படுத்தும் பணி, 7 மடைகளின் மறுகட்டுமானப் பணிகள், கண்மாய்க் கரையில் 3100 மீட்டர் நீளத்திற்கு பலப்படுத்தும் பணி, 3 மடைகளில் சீரமைக்கும் பணிகள், கலுங்கு சீரமைக்கும் பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளன.
கட்டனூர் கண்மாய்ப் புனரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவதன் மூலமாக, 1335 ஹெக்டேர் (3300ஏக்கர்) பாசன விளைநிலங்கள் பயன்பெறும். அதேபோல், நரிக்குடி கண்மாய் புனரமைப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதன் மூலமாக 65.08 ஹெக்டேர் (160 ஏக்கர்) பாசன விளைநிலங்கள் பயன்பெறும்.
மேலும், கண்மாயின் முழு கொள்ளளவிற்குத் தண்ணீர் சேமிக்கப்பட்டு, கட்டனூர் கிராமத்தைச் சுற்றியுள்ள கிராமங்களின் நிலத்தடி நீர் மட்டம் உயர்ந்திடும். கோடைகாலங்களில் ஏற்படும் குடிநீர்த் தட்டுப்பாடு பிரச்சனை தீர்வதுடன், இப்பகுதி கிராம மக்களின் வாழ்வாதாரமும், கால்நடை வளர்ப்பும் மேம்படும்.
கட்டனூர் மற்றும் நரிக்குடி கண்மாய்களின் புனரமைப்புப் பணிகளின் மூலம் நரிக்குடி ஒன்றியத்தில் உள்ள கிராம மக்களின் நீண்ட காலக் கனவு நனவாகவுள்ளது.