சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூர் வட்டத்தில், கும்மங்குடி கிராமம் அமைந்துள்ளது. இந்த கிராமத்தில் அமைந்துள்ள காரைக்குடி திருப்பத்தூர் சாலையில் நேற்று (30.11.2025) பிற்பகல் அறந்தாங்கியில் இருந்து திண்டுக்கல் நோக்கி அரசுப் பேருந்து சென்று கொண்டிருந்தது. அதே சமயம் திருப்பூரிலிருந்து காரைக்குடி நோக்கி மற்றொரு அரசுப் பேருந்தும் சென்று கொண்டிருந்தது. இத்தகைய சூழலில் தான் இந்த இரு பேருந்துகளும் எதிர்பாராதவிதமாக நேருக்குநேர் மோதிக்கொண்டன. இந்த விபத்தில், பேருந்துகளில் பயணம் செய்த 9 பெண்கள், 2 ஆண்கள் என மொத்தம் 11 நபர்கள் உயிரிழந்தனர். மேலும், 54 நபர்கள் காயம் அடைந்தனர்.
இந்நிலையில் இந்த விபத்து குறித்து தமிழக போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கர், மதுரையில் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேட்டியளித்தார். அப்போது அவர் பேசுகையில், “சிவகங்கை மாவட்டத்தில் நேற்றைக்கு நடந்த எதிர்பாராத இந்த கோர விபத்தில் 2 அரசு பேருந்துகள் நேருக்கு நேர் மோதிக் கொண்டன. இதில் 11 பேர் உயிரிழந்த வருந்தத்தக்கச் சம்பவம் நடந்துள்ளது. இந்த சம்பவம் குறித்து அறிந்தவுடன் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் சிவகங்கை மாவட்ட அமைச்சரான பெரியகருப்பனையும், என்னையும் சம்பவ இடத்திற்குச் சென்று பாதிக்கப்பட்டவர்களுக்குத் தேவையான உதவிகளைச் செய்வதற்கு உத்தரவிட்டிருந்தார்.
அதன்படி நேற்று இரவே அமைச்சர் பெரியகருப்பனும், நானும் சிவகங்கை, திருப்பத்தூர் மற்றும் காரைக்குடி ஆகிய மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டவர்களைப் பார்த்து தேவையான மருத்துவச் சிகிச்சை அளிப்பதற்கான நடவடிக்கையை மேற்கொண்டோம். மாவட்ட ஆட்சித் தலைவர் சம்பவம் நடந்த உடனே மருத்துவமனைகளுக்குச் சென்று அனைத்து பணிகளையும் பார்த்துக் கொண்டார். அதே சமயம் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவித்திருந்த நிவாரண தொகையை இரவே வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வழங்கப்பட்டது. மேலும் இந்த விபத்தில் பாதிக்கப்பட்டு மதுரையில் அனுமதி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நடத்துநர் சுதாகர் என்பவரையும், அதேபோன்று வடமலையான் மருத்துவமனையில் ஒருவரும் மீனாட்சி மருத்துவமனையில் ஒருவரும் அனுமதிக்கப்படுகிறார்கள். அவர்களைப் பார்ப்பதற்காக வந்துள்ளேன்.
/filters:format(webp)/nakkheeran/media/media_files/2025/12/01/svg-bus-hos-min-1-2025-12-01-12-39-13.jpg)
இந்த விபத்தில் சிக்கிய இரு பேருந்துகளையும் அரசு ஓட்டுநர்கள் தான் ஓட்டியுள்ளனர். ஓட்டுநர், நடத்துநர்களை பணிக்கு எடுப்பதற்கான இன்டர்வியூ எல்லாம் நடைபெற்று அதற்கான செயல்முறை நடைபெற்றுக் கொண்டுள்ளது. 3000 பேரை பணிக்கு எடுக்க உள்ளோம். இதற்கிடையே ஓய்வுபெறப் பெற அந்த இடங்களைப் பூர்த்தி செய்கின்ற பணிகளுக்கான நடவடிக்கை எடுக்கும் போதே பேர்ந்துகளை ஓட்டாமல் இருக்க முடியாது என்ற அடிப்படையில் ஒப்பந்த வடிவமைப்பில் அவர்களை ஏற்கிறோம். அவர்களை அரசு நேரடியாக எடுக்கின்ற ஓட்டுநர், நடத்துநர் பணிக்கு வந்தவர்கள் அவர்கள் விடுவிக்க விடுவார்கள். இது வழக்கமான ஒரு நடைமுறைதான்.
தென்காசியில் நடந்தது தனியார் பேருந்து விபத்து. இது அரசு பேருந்து விபத்து. இதுவரை இந்த 3 ஆண்டுகளில் அதிகபட்ச ஒரு கோரச் சம்பவமாக நடைபெற்றுள்ள விபத்துதான் இது. அது குறித்து துறை ரீதியாகவும் ஆய்வு செய்கிறார்கள். காவல் துறையும் வழக்குப்பதிவு செய்து ஆய்வு செய்கிறார்கள். என்ன பிரச்சனை அதில் என்ன குற்றம் நடந்திருக்கிறது என்பதைப் பார்த்து அதைச் சரி செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்” எனத் தெரிவித்தார்.
Follow Us