சட்டப்பேரவையின் கூட்டத்தொடரில் கலந்துகொண்ட எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள், உருட்டுக் கடை அல்வா பாக்கெட்டுகளைக் கொண்டு வந்து செய்தியாளர்களை சந்தித்து பேசினர். இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் போக்குவரத்துத் துறை அமைச்சர். எஸ்.எஸ். சிவசங்கர் தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், “ எதிர்க்கட்சித் தலைவரும், அதிமுகவின் பொதுச் செயலாளருமான எடப்பாடி பழனிசாமி, திராவிட முன்னேற்றக் கழகம் குறித்து ஒரு பேட்டி அளித்திருக்கிறார். அவருடைய நிலைமை இவ்வளவு மோசமாக போகும் என்று யாரும் எதிர்பார்க்க முடியாத நிலைக்கு சென்றுவிட்டார். சட்டமன்றத்தில் பேச வேண்டியவர்; மக்கள் மன்றத்தில் பேச வேண்டியவர்; சட்டமன்ற அரசியல் மக்கள் மன்ற அரசியலைத் தாண்டி தற்போது கடைசியாக இன்ஸ்டாகிராம் ரீல்ஸ்க்கும் அரசியல் செய்ய வேண்டிய சூழலில் தள்ளப்பட்டுவிட்டார் என்பதுதான் பாவமாக இருக்கிறது.
ஒரு அல்வா பாக்கெட்டை வைத்துக்கொண்டு உருட்டுக்கடை அல்வா என்றெல்லாம் கதை விட்டிருக்கிறார். அவர்தான் இன்று திருட்டுக்கடை பழனிசாமியாக இருக்கிறார். அதிமுக மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் மறைவிற்குப் பிறகு எப்படி இவர் கைக்கு வந்தது என்பது எல்லோருக்கும் தெரியும். அந்த அதிமுக என்ற கம்பெனியை சசிகலாவிடமிருந்து லீசுக்கு எடுத்து நடத்த ஆரம்பித்தவர் பாஜகவுடன் சேர்ந்து கொண்டு சசிகலாவை சிறைக்கு அனுப்பிவிட்டு திருட்டு கடை தனக்கு கைப்பற்றினார். அதற்குப் பிறகு டிடிவி தினகரனை ஏமாற்றினார். அவரிடம் இருந்து கைப்பற்றினார். அதற்கு பிறகு முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்துடன் ஒரு கூட்டணி வைத்துக்கொண்டு நீ பாதி நான் பாதி கண்ணே... என்று ஒரு பார்ட்னர்ஷிப் ஆரம்பித்து ஐந்து வருடம் கழித்தார். அதற்கு பிறகு அவரையும் ஏமாற்றினார். அவரிடம் இருந்தும் தட்டி தூக்கினார். திருட்டு கடை.
இதெல்லாம் முடிந்தது. எதிர்க்கட்சியானார். ஒரு ஐவர் அணியை உடன் வைத்துக்கொண்டு சுற்றினார். அதற்கு பிறகு இருவரணி ஆகிவிட்டது. அந்த ஐவரணியையும் ஏமாற்றி திருட்டு கடையை வேலுமணி, தங்கமணி என்ற இருவரை மட்டுமே தன் உடன் வைத்துக்கொண்டு இருவர் அணியாக வைத்துக் கொண்டிருந்தார். தற்போது கடைசியாக டெல்லிக்கு சென்ற பிறகு என்ன ஆனார்? அந்த இருவர் அணியையும் கழற்றிவிட்டு தன்னுடைய மகன் மிதுன் பழனிசாமியை மட்டும் வைத்துக்கொண்டு இன்றைக்கு அவர் செல்கிறார். இப்படி அதிமுகவை ஒரு திருட்டுக்கடை போல எல்லோரிடமும் கைப்பற்றி இருக்கின்றவர் திமுகவை பார்த்து உருட்டுக்கடை என்று சொல்வது எவ்வளவு வேதனையாக இருக்கிறது” எனப் பேசினார்.
Follow Us