Advertisment

“எடப்பாடி பழனிசாமி பொறாமையில் குமுறுகிறார்” - அமைச்சர் சிவசங்கர் பதிலடி!

epssiva

Minister Sivashankar's response to Edappadi Palaniswami for Laptop scheme

தமிழக கல்லூரி மாணவ - மாணவிகளுக்கு 10 லட்சம் இலவச மடிக்கணினி வழங்கும் திட்டத்தை இன்று மாலை முதல்வர் ஸ்டாலின் துவக்கி வைக்கிறார். இத்திட்டத்தை எடப்பாடி பழனிச்சாமி விமர்சித்துள்ள நிலையில், எடப்பாடிக்கு பதிலடி தரும் வகையில் அவரை அமைச்சர் சிவசங்கர் விமர்சித்திருக்கிறார்.

Advertisment

இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில்,  “நாளொரு மேடை பொழுதொரு நடிப்பு அவன் பேர் மனிதனல்ல. நாவில் ஒன்று நினைவில் ஒன்று அதன் பேர் உள்ளமல்ல’ என எம்.ஜி.ஆர் பாடிய பாடல் அப்படியே எடப்பாடி பழனிசாமிக்கு பொருந்தும். சேலத்து மேடையில் அரசியல் நடிப்பை அரங்கேற்றியிருக்கிறார் எடப்பாடி பழனிசாமி, ‘திமுக ஒரு கார்ப்பரேட் கம்பெனி’ எனச் சொல்லும் பழனிசாமியின் அதிமுக, அடிமை கம்பெனியாக மாறி பல வருடங்கள் ஆகிவிட்டது. 2016-ஆம் ஆண்டிலிருந்து 2024-ஆம் வரை தொடர்ந்து 10 தேர்தல்களில் தோற்ற பழனிசாமி ‘வரும் சட்டமன்றத் தேர்தலில் அதிமுக ஆட்சி அமைப்பதை எந்தக் கொம்பனாலும் தடுக்க முடியாது’ என்று சொல்வதைக் கேட்டு சின்னக் குழந்தையும் கெக்க பெக்க என சிரிக்கும்.

Advertisment

‘2021ல் சேலம் மாவட்டத்தில் உள்ள 11 இடங்களில் 10 இடங்களில் அதிமுக வெற்றி பெற்றது. இது அதிமுகவின் கோட்டை என்று எடப்பாடி பழனிசாமி பேசியிருக்கிறார். 2024 நாடாளுமன்றத் தேர்தலில் 39 தொகுதிகளை திமுக கூட்டணி கைப்பற்றியது. அந்த 39 நாடாளுமன்றத் தொகுதிகளில் அடங்கியிருக்கும் 234 சட்டமன்றத் தொகுதிகளில் 221 தொகுதிகளில் திமுக கூட்டணி முதலிடம் பெற்றது பழனிசாமிக்கு தெரியாதா? அதிமுகவின் கோட்டையான சேலத்திலேயே 2024 நாடாளுமன்றத் தேர்தலில் ஓட்டை விழுந்ததை எல்லாம் மறந்துவிட்டாரா? எடப்பாடி பழனிசாமி ஆட்சியில் 2019-ஆம் ஆண்டிலேயே லேப்டாப் வழங்கும் திட்டத்தை நிறுத்திவிட்டு ‘கல்விக்கான ஆயுதமாக மடிக்கணினியை, தொடர்ந்து வழங்கி வந்தது எனது அரசு’ எனப் பச்சைப் பொய் சொல்கிறார் பழனிசாமி. 

அதிமுக ஆட்சியில் 68 கோடி ரூபாயில் வாங்கிய 55 ஆயிரம் லேப்டாப்கள் வீணடிக்கப்பட்டதை சிஏஜி (CAG) என்ற இந்தியத் தலைமைக் கணக்குத் தணிக்கை அறிக்கை வெளிச்சம் போட்டுக் காட்டியது. எடப்பாடி பழனிசாமி ஆட்சியில் நடந்த லேப்டாப் முறைகேட்டை அம்பலப்படுத்திய சிஏஜி அறிக்கை 2023 ஏப்ரலில் சட்டமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. 2017-2018-ஆம் ஆண்டு போட்டித் தேர்வுக்குத் தயாரான 12ஆம் மாணவர்களுக்கு லேப்டாப்புகள் வழங்க எல்காட் நிறுவனம் மூலம் 60 ஆயிரத்திற்கும் மேற்பட்ட லேப்டாப்புகள் கொள்முதல் செய்யப்பட்டன. அதில், 8 ஆயிரத்து 79 லேப்டாப்புகள் மட்டுமே மாணவர்களுக்கு வழங்கப்பட்டன. 55 ஆயிரம் லேப்டாப்புகளை தேவைப்படும் மாணவர்களுக்கு வழங்க எந்த நடவடிக்கையும் எடுக்காததால், அந்த லேப்டாப்புகளின் பேட்டரிகள் வாரண்டி காலாவதி ஆகிவிட்டது. இதனால், 68 கோடியே 71 லட்சம் ரூபாய் நட்டம் ஏற்பட்டது என சிஏஜி அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

‘அதிமுக ஆட்சியில் கொண்டு வரப்பட்ட லேப்டாப் திட்டம் மாணவர்களுக்கு அறிவுப்பூர்வமான கல்வி கிடைப்பதை உறுதி செய்த திட்டம்’ எனச் சொல்கிறார் பழனிசாமி. வாங்கிய லேப்டாப்புகளையே விநியோகம் செய்யாமல் வீணடித்த பழனிசாமி அறிவுடன்தான் பேசுகிறாரா? சிஏஜி அறிக்கையில் 53ஆம் பக்கத்தில் மடிக்கணினிகளின் தேவை, கொள்முதல் மற்றும் விநியோகம் தொடர்பாக அட்டவணை ஒன்று வெளியிடப்பட்டிருக்கிறது. அதில், எடப்பாடி பழனிசாமி ஆட்சியில் 2017 -2018 முதல் 2020 - 2021 வரை 11 மற்றும் 12-ம் வகுப்பில் 18.60 லட்சம் தகுதியான மாணவர்கள் இருந்தார்கள். ஆனால், 20 சதவிகித மாணவர்களுக்கு வழங்காமல் புறக்கணித்தார்கள். 2017-2018 ஆம் ஆண்டில் 12 ஆம் வகுப்புத் தேர்வில் தேர்ச்சி பெற்ற 2.32 லட்சம் மாணவர்கள், பள்ளிப் படிப்பை முடிக்கும் வரை லேப்டாப்புகளை பெறவில்லை.

55 ஆயிரம் மடிக்கணினிகளை மாணவர்களுக்கு வழங்காமல் வீணடித்த எடப்பாடி பழனிசாமி, லேப்டாப் பற்றி எல்லாம் பேசுவதற்கு அருகதை இருக்கிறதா? 20 லட்சம் கல்லூரி மாணாக்கருக்கு லேப்டாப் வழங்கும் ‘உலகம் உங்கள் கையில்’ திட்டத்தை முதலமைச்சர் இன்று தொடங்கி வைக்கிறார். தொழில்நுட்ப அறிவியலை வலுப்படுத்த Dell, Acer, HP போன்ற உலகத் தரமான நிறுவனங்களின் மடிக்கணினிகள் வழங்கப்படுகின்றன. மாணவர்களுக்கு வழங்கப்படும், இந்த மடிக்கணினிகளில் Intel i3 / AMD Ryzen 3 Processor, 8 GB RAM, 256 GB SSD, Windows 11 Home Strategic மற்றும் BOSS Linux OS ஆகிய மென்பொருள்கள் முன்னதாக நிறுவப்பட்டுள்ள நிலையில், நடைமுறையில் உள்ள கல்வி மற்றும் திட்டப் பணிகளுக்காக MS Office 365, மேலும் செயற்கை நுண்ணறிவு மென்பொருளான Perplexity Pro-வின் ஆறு மாத சந்தாவும் கட்டணமில்லாமல் வழங்கப்படுகிறது. தமிழ்நாட்டு மாணவர்கள் உலகத்தோடு போட்டியிடும் வகையில் ஒவ்வொரு திட்டமாக வகுத்து வருகிறது திமுக அரசு. மகளிர், அரசு ஊழியர், மாணாக்கர் என ஒவ்வொரு பிரிவினரும்  முதலமைச்சரின் திட்டங்களால் பயன்பெறுவதைப் பார்த்து பொறுத்துக் கொள்ள முடியாமல் குமைகிறார் பழனிசாமி.

 டீ கடையில் காசு இல்லாமல், ‘டேய் ஒரு டீ குடிக்க எவ்ளோ நடிக்க வேண்டியது இருக்கு உங்க முன்னாடி’ என வடிவேலு பேசும் காமெடிதான் பழனிசாமி பேசுவதைக் கேட்கும் போது நினைவுக்கு வருகிறது. டீ கடையில் இரண்டு பேப்பர் படிக்கும் போது அதில் உள்ள செய்திகளில் தனக்கு எல்லாம் தெரிந்தவர் போல வடிவேலு தலையிட்டு உதார் விடுவார். அப்படிதான் திராவிட மாடல் அரசின் திட்டங்கள் எல்லாம் தன்னால்தான் வந்தது என பழனிசாமி நடிக்க வேண்டியிருக்கிறது. மகளிர் உரிமத் தொகை, லேப்டாப், போன்றவற்றை அதிமுக குரல் கொடுத்ததால்தான் திமுக அரசு கொண்டு வந்தது என பழனிசாமி சொல்லிக் கொள்ளும் வரிசையில் இப்போது பொங்கல் பரிசுத் தொகுப்பிலும் பழனிசாமி தலையை நுழைத்திருக்கிறார். அடுத்து நாம் ஓர் திட்டம் கொண்டு வர முடிவு செய்தாலே, உடனே முந்திக் கொண்டு அதற்கு ஒரு கருத்தைச் சொல்லி, அது தன்னால்தான் வந்தது எனப் பெருமைப்பட்டு அரசியல் செய்வது எல்லாம் எதிர்க கட்சித் தலைவர் செய்யும் செயலா? ‘எல்லாமே என்னால்தான் நடந்தது’ என்று ஒரு மைண்ட்செட் (Mindset) ஃபோபியா சிலருக்கு உண்டு. அதில், பழனிசாமியும் சேர்ந்து கொண்டார். ‘நான்தான் எல்லாம் செய்பவன்’ என்ற ‘God Complex’ அதாவது கடவுள் மனப்பான்மையில் பழனிசாமி வாழ்ந்து கொண்டிருக்கிறார்.

நம்முடைய திட்டங்கள் மக்களிடம் ஏற்பட்டிருக்கும் ஆதரவை எதிர்க்கட்சித் தலைவரே உணர்ந்ததால்தான் இப்படியெல்லாம் பேசி வருகிறார். பழனிசாமி அரசியல் செய்வதற்கும் நம்முடைய சாதனை திட்டங்கள் காரணமாக அமைந்திருக்கிறது. தேர்தல் கண்துடைப்புக்காக லேப்டாப் கொடுகிறார் என சொல்கிறார் பழனிசாமி. அவருடைய God Complex-ஐ என்ன சொல்ல? சேலத்தில் எடப்பாடி பழனிசாமி பேசிக் கொண்டிருந்த அதே நேரத்தில்தான் புதுக்கோட்டையில் உரையாற்றி கொண்டிருந்த ஒன்றிய அமைச்சர் அமித்ஷா, ‘ஏப்ரலில் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி மலரும். பிரதமர் மோடியின் தலைமையின் கீழ் வளர்ச்சி பாதையில் பங்கேற்போம்’ என்றார். ‘கூட்டணி ஆட்சி’ என ஆட்சியில் பங்கு என்றதோடு பழனிசாமியின் பெயரைக்கூட அமித்ஷா உச்சரிக்கவில்லை. ‘கூட்டணிக்கு தலைமை எடப்பாடி பழனிசாமிதான்’ என அடிமைகள் வீராவேசம் காட்டினாலும் எஜமானர் அமித்ஷா, பழனிசாமி பெயரைக்கூட சொல்ல மறுக்கிறார். ‘கூட்டணிக்கு தலைமை’ என்ற பதவியிலேயே தடுமாறிக் கொண்டிருக்கும் பழனிசாமிதான் முதல்வர் பதவிக்கு வரப் போகிறாரா? ‘இந்த அவமானம் உனக்கு தேவையா?’ என்ற நடிகர் வடிவேலுவின் காமெடிக்கு பொருத்தமான கேரக்டர் பழனிசாமிதான். அவமானங்களை தாங்கி கொள்வது ஆயக்கலைகளிலும் அடக்காத ஒன்றுதான் போல” என்று சுட்டிக்காட்டியுள்ளார்.

edappadi palanisami govt laptops Sivasankar
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe