கோப்புப்படம்
சென்னை எழும்பூரில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு இன்று (06.12.2025) செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது அவர் திருப்பரங்குன்றத்தில் தீபம் விவகாரம் தொடர்பாகப் பேசுகையில், “சட்டத்தை மதிக்கின்ற தமிழக அரசை பொறுத்தளவில் பக்தர்கள் நலன் காக்கின்ற அரசு. இந்த அரசு அனைவரும் சமம். அனைவரும் ஒருதாய் மக்களாக வாழ வேண்டும் என்று நினைக்கின்ற அரசு. அந்த வகையில்தான் நீதிமன்ற தீர்ப்பு ஏற்கனவே இரு நீதிபதிகள் கொண்ட அமர்வு என்ன உத்தரவிட்டிருக்கின்றதோ அந்த உத்தரவைச் செயல்படுத்துகின்ற சட்டத்தின் ஆட்சி நடத்துகின்ற சட்டத்திற்குச் சிறிதும் களங்கம் ஏற்படாமல் சட்ட பாதுகாப்பு தருகின்றவர் முதல்வர் மு.க. ஸ்டாலின் ஆவார்.
அவர் மேற்கொண்டிருக்கின்ற நடவடிக்கை இன்றைக்கு சங்கிகளைத் தவிர்த்து, உலகத்திற்கே நாள் குறித்துக் கொடுக்கின்ற ராஜா பட்டர், குடமுழுக்கிற்கு நாள் குறித்துக் கொடுக்கின்ற பிச்சை குருக்கள் மற்றும் செல்வப்பட்டர் ஆகியோர் இதனை ஆதரித்துள்ளனர். ஆன்மீகவாதிகள் மற்றும் இறையன்பர்கள் என ஒட்டுமொத்தமாக இதற்கு முழு அளவு ஆதரவு தந்துள்ளனர். ஆகவே இது மக்களாட்சி. மக்களுக்கான ஆட்சி. மக்களுடைய எண்ணங்கள், சிந்தனைகளுக்குச் செயல்வடிவம் கொடுப்பார் முதல்வர் மு.க. ஸ்டாலின். அதிமுகவின் ஜெயலலிதா முதல்வராக இருந்த போது எடுக்கின்ற நிலைப்பாடுகள் அனைத்தும் அந்த கட்சி சுய சிந்தனையோடு எடுத்து வந்தது. இப்போது எடுக்கின்ற நிலைப்பாடுகள் அத்தனையும் டெல்லியிலே இருந்து உள்துறை அமைச்சர் அமித்ஷா என்ன சொல்லுகிறார்களோ அதற்கேற்ற நிலைப்பாடுகளைத்தான் எடுத்துக் கொண்டிருக்கின்றார்கள்.
ஆகவே அவர்கள் கொண்ட கொள்கைகள் அவர்கள் கொண்ட லட்சியங்கள், அனைத்தும் காற்றில் பறக்கவிட்டுக் கொண்டிருக்கின்றார்கள் என்பதற்குத் திருப்பரங்குன்றம் தீபம் ஏற்றும் நிகழ்ச்சியிலேயே பார்த்தால் 2014, 2017 என இரு காலகட்டங்களிலும் அதிமுக ஆட்சிதான் இருந்தது. அந்த ஆட்சியிலே தீபத்தை இன்னொரு இடத்தில் ஏற்றுவதற்கு அனுமதி மறுத்து இவர்கள் நீதிமன்றத்தில் அபிடவிட் (உறுதிமொழி) தாக்கல் செய்தவர்கள். ஆனால் இன்றைக்கு அதை மறந்துவிட்டு 2ஆம் இடத்திலும் தீபம் ஏற்ற அரசு முன்வர வேண்டும் என்று அறிக்கை விடுவது போலித்தனமானது. அவருடைய கொள்கைகள் கோட்பாடுகள், லட்சியங்களை பா.ஜ.க.விடம் அடிமை சாசனம் எழுதித் தந்துவிட்டார்கள் என்பது இந்த கண்டனை அறிக்கையிலிருந்து புலப்படுகிறது” எனத் தெரிவித்தார்.
Follow Us