அரியலூர் மாவட்டத்தில் உள்ள கங்கைகொண்ட சோழபுரத்தைத் தலைநகரமாகக் கொண்டு ஆட்சி செய்த மாமன்னன் ராஜேந்திர சோழனின் பிறந்த நாளான ஆடி திருவாதிரை நாளான 23ஆம் தேதி முதல் முப்பெரும் அரசு விழாவாக ராஜேந்திர சோழனால் வடிவமைக்கப்பட்ட சோழேஸ்வரர் ஆலய வளாகத்தில் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு ராஜேந்திர சோழனின் 1000வது பிறந்த நாளான முப்பெரும் விழாவின் கடைசி நாளான இன்று (27.07.2025) பிரதமர் நரேந்திர மோடி கலந்துகொள்ள உள்ளார். இதற்காகத் தமிழக அரசு மற்றும் பா.ஜ.க. சார்பில் செய்யப்பட வேண்டிய முன்னேற்பாடு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் பிரதமர் மோடி 2 நாள் பயணமாக நேற்று (26.07.2025) தமிழகம் வருகை தந்து உள்ளார். அதன்படி இந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்ளத் திருச்சியில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் நன்பகல் 12 மணிக்குக் கங்கைகொண்ட சோழபுரம் செல்கிறார். அங்கு ராஜேந்திர சோழனின் பிறந்தநாள் விழாவில் பிரதமர் மோடி பங்கேற்க உள்ளார். அதனைத் தொடர்ந்து கங்கைகொண்ட சோழபுரம் கோவிலில் வழிபாடு செய்கிறார். இந்தியத் தொல்லியல் துறை சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் பிரதமர் மோடி, ராஜேந்திர சோழனின் நினைவு நாணயத்தையும் வெளியிட உள்ளார்.
அதே சமயம் பிரதமர் மோடி முன்னிலையில் இசையமைப்பாளர் இளையராஜா இசை நிகழ்ச்சியை நடத்த உள்ளார். இந்நிலையில் பிரதமர் மோடி கலந்து கொள்ளும் நிகழ்ச்சியில் பங்கேற்காதது ஏன் என்பது குறித்து அமைச்சர் சேகர்பாபு விளக்கம் அளித்துள்ளார். இது தொடர்பாக அவர் சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசுகையில், “முதல்வர் மு.க. ஸ்டாலின் உத்தரவின் பெயரில் நிதியமைச்சர் தங்கம் தென்னரசும், அமைச்சர் சிவசங்கர் போன்றவர்கள் பங்கேற்றிருக்கின்றார்கள். அதேபோல் நேற்றைக்குத் தூத்துக்குடியில் நடைபெற்ற விழாவிலே தூத்துக்குடி மாவட்டத்தினுடைய இரு அமைச்சர்களான அனிதா ராதாகிருஷ்ணன், கீதா ஜீவன் பங்கேற்றிருக்கின்றார்கள்.
ஆகவே நான் பங்கேற்காதது ஒரு பிரச்சனை அல்ல. அழைப்பிதழ் என்பது புரோட்டோகால் படி தமிழக அரசு முடிவு செய்து என்னிடமும் செல்கிறீர்களா? என்று கேட்டார்கள். உடல்நிலை சரியில்லாத காரணத்தால் உடல்நிலை சரியில்லை என்று சொன்னேன். ஆனால் பெருவாரியாக அரசின் சார்பில் பிரதமரை வரவேற்பதற்குப் பிரதமருக்கு உண்டான மதிப்பும் மரியாதையும் கொண்ட தமிழக அரசு அமைச்சர்கள் பெரும்பாலோனோர் பங்கேற்றிருக்கின்றார்கள்” எனத் தெரிவித்தார்.