Minister Sakkarapani inspects paddy procurement centers thanjavur
வடகிழக்கு பருவமழை தொடங்கியிருக்கும் நிலையில், தஞ்சாவூர் உள்ளிட்ட டெல்டா மாவட்டங்கள் கடந்த 1 வாரமாக தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இதனால், அறுவடை செய்த நெல்மணிகளை கொள்முதல் செய்ய முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. மேலும், கொள்முதல் செய்த நெல்மணிகள் ஒவ்வொரு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் 500 மூட்டைக்கு மேலாக தேங்கியுள்ளதால் புதிதாக நெல்களை கொள்முதல் செய்ய முடியாத சூழலும் ஏற்பட்டுள்ளது.
இதன் காரணமாக ஒவ்வொரு விவசாயிகளும் தாங்கள் அறுவடை செய்த நெல்மணிகளை கொட்டி 10 முதல் 15 நாட்களுக்கு மேலாக கொள்முதல் நிலையங்களியே காத்திருக்கின்றனர். இந்த சூழலில், தற்போது பெய்து வரும் தொடர் மழையால் ஒவ்வொரு நெல்மணிகளும் முழைக்க தொடங்கியுள்ளது. இதனால் கடுமையாக பாதிக்கப்பட்டு இழப்பை சந்தித்து வருவதாக விவசாயிகள் கவலை தெரிவித்து வருகின்றனர்.
இதனிடையே, அதிமுக பொதுச் செயலாளரும் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி இன்று (22-10-25) தஞ்சாவூர், திருவாரூர் மாவட்டம் உள்ளிட்ட பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டு பாதிக்கப்பட்ட விவசாயிகளை சந்தித்து வருகிறார். அதன் ஒரு பகுதியாக முதல் கட்டமாக தஞ்சாவூர் மாவட்டம் காட்டூர் பகுதியில் கொள்முதல் நிலையத்தில் இன்று காலை ஆய்வு மேற்கொண்டார். அதன் பின், விவசாயிகளிடம் நேரடியாகச் சந்தித்து சாகுபடி செய்த பயிர்களின் நிலைமையை கேட்டறிந்தார்.
இந்த நிலையில், தஞ்சாவூர் நெல் கொள்முதல் நிலையத்தில் அமைச்சர் சக்கரபாணி ஆய்வு செய்தார். அதனை தொடர்ந்து அவர் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது அவர், “இந்த ஆண்டு 1.6 லட்சம் மெட்ரிக் டன் இதுவரை நெல்கொள்முதல் செய்யப்பட்டிருக்கிறது. சென்ற ஆண்டு 1.28 லட்சம் மெட்ரிக் டன் கொள்முதல் செய்யப்பட்டது. இந்த ஆண்டு சாகுபடி பரப்பு சுமார் 79,800 ஹெக்டர், சென்ற ஆண்டு இதே காலகட்டத்தில் 61,000 ஹெக்டரில் நெல் பயிரிடப்பட்டது. இன்றைக்கு 1250 லாரிகளில் வெளி மாவட்டங்களுக்கு நெல் மூட்டைகளை தினந்தோறும் அனுப்பிக் கொண்டிருக்கிறோம். அதோடு நான்கு ரயில்கள் மூலமாக 8,000 மூட்டைகள் தினந்தோறும் அனுப்பப்பட்டு வருகிறது. இன்னும், 8,600 ஹெக்டர் அறுவடை செய்ய வேண்டியுள்ளது. சுமார் 50,000 மெட்ரிக் டன் கொள்முதல் செய்ய வேண்டியுள்ளது. தற்போது 14 லட்சம் சாக்குகுகள் கையில் உள்ளது. 61 லட்சம் சாக்குகள் வந்து கொண்டிருக்கிறது. 100 பேல் சணல் இருப்பில் உள்ளது. தினமும் நெல்வரத்து 5,000 மெட்ரிக் டன் வந்து கொண்டிருக்கிறது. திறந்தவெளி சேமிப்பு கிடங்கில் 1 லட்சம் மெட்ரிக் டன் வைக்கப்பட்டிருக்கிறது.
முதல்வர் அரசு பொறுப்பேற்ற பின்பு தான் பிள்ளையார்ப்பட்டியில் இந்த குடோன் கட்டப்பட்டது. அதோடு நடுவூரில் ஒரு லட்சம் மெட்ரிக் டன் கொள்ளளவு கொண்ட சேமிப்பு கிடங்கு கட்டுவதற்காக டெண்டர் இந்த ஆண்டு விடப்பட்டிருக்கிறது. 2020இல் 800 மூட்டையில் இருந்து 1000 மூட்டை ஒரே ஆண்டு தான் வாங்குவதற்கு அனுமதி தந்தார்கள். ஆனால், முதல்வர் பொறுப்பேற்ற பின்பு 800 மூட்டையில் இருந்து 1000 மூட்டை என்பதை அரசாங்க உத்தரவாகவும், அதோடு ஒரு ஏக்கருக்கு 60 மூட்டையில் இருந்து 70 மூட்டை வாங்குவதற்கான விவசாயினுடைய கோரிக்கையை ஏற்று அரசாணை வெளியிடப்பட்டிருக்கிறது.
கடந்த காலங்களில் அக்டோபர் 1ஆம் தேதியில் இருந்து தான் ஒன்றிய அரசு உயர்த்தப்படுகின்ற வேலையில் நெல் கொள்முதல் செய்யப்படும். ஆனால், மழைக்காலம் என்பதால் முதல்வர் பிரதமருக்கு கடிதம் எழுது கடந்த நான்கு ஆண்டுகளாக அக்டோபர் 1ஆம் தேதிக்கு பதிலாக செப்டம்பர்1ஆம் தேதியில் இருந்து கொள்முதல் செய்யப்படுகிறது. அந்த எண்ணத்தில் கடந்த நான்கு ஆண்டுகளாக ஒன்றிய அரசு அறிவிக்கின்ற விலையோடு அரசின் ஊக்கத்தொகையை சேர்த்து செப்டம்பர் 1ஆம் தேதி கொள்முதல் செய்து வருகிறோம்” என்று கூறினார்.