ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சி காவல் நிலையத்தில் நடைபெற்ற விழாவில் மூன்றாம் கண் எனப்படும் ( சிசிடிவி) கண்காணிப்பு கேமராக்களின் செயல்பாட்டினை பொதுமக்களின் பயன்பாட்டிற்காக வீட்டுவசதி, மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் சு. முத்துசாமி திறந்துவைத்தார். இந்நிகழ்ச்சியில்,வீட்டுவசதி, மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் சு.முத்துசாமி பேசும்போது தெரிவித்தாவது, “குற்றச்செயல்களைத் தடுத்து மக்களைக் காத்திடும் வகையில் மூன்றாம் கண் எனப்படும் (சிசிடிவி) கண்காணிப்பு கேமராக்கள் அமைக்கப்பட்டுக் கண்காணிக்கப்பட்டு வருகிறது.ஒரு விழாவோ, நிகழ்ச்சியோ நடைபெறுகிறது என்றால் காவல்துறையினரின் பங்கு முக்கிய பங்காகும்.
நம்முடைய மாவட்டத்தைப் பொருத்தவரை நம்முடைய காவல்துறை மிகச்சிறப்பாக பணியாற்றிக் கொண்டிருக்கிறது. பொதுமக்களும் சட்டவிதி முறைகளைப் பின்பற்றி நடக்க வேண்டும். இந்த கேமரா போடுவது ஒரு பாதுகாப்பை ஏற்படுத்துகிற ஒரு நிகழ்வாக அமைந்திருக்கிறது. இது எல்லாமே வந்து பொதுமக்களுக்கு உண்டான பாதுகாப்பை அளிக்கக்கூடியதாகும். எனவே நம் மாவட்டம் சிறந்த மாவட்டமாக விளங்கிடப் பொதுமக்களும் காவல்துறையினருக்கு ஒத்துழைப்பு வழங்கி அவர்கள் சிறப்புடன் பணியாற்ற வேண்டுமாய் கேட்டுக்கொள்கிறேன்” எனத் தெரிவித்தார்.
அதோடு வீட்டுவசதி, மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர், ஈரோடு நாடாளுமன்ற உறுப்பினர் கே. இ. பிரகாஷ் தொகுதி மேம்பாட்டு நிதியிருந்து மொடக்குறிச்சி காவல் நிலைய சரகத்திற்கு உட்பட்ட 20 இடங்களில் ரூ.15,57,600 மதிப்பீட்டில் அமைக்கப்பட்ட 60 கண்காணிப்பு கேமாராக்களை பொதுமக்களின் பயன்பாட்டிற்காக இன்றைய தினம் திறந்துவைத்தார். தொடர்ந்து மொடக்குறிச்சி பேரூராட்சி நுழைவுவாயில்அருகில் அமைக்கப்பட்ட”நம்ம மொடக்குறிச்சி” பெயர்ப் பலகையினை திறந்துவைத்தார்.
இந்த விழாவில் மாவட்ட ஆட்சித்தலைவர் ச. கந்தசாமி, மாநிலங்களவை உறுப்பினர் அந்தியூர் செல்வராஜ், நாடாளுமன்ற உறுப்பினர் கே.இ.பிரகாஷ், கிழக்கு சட்டமன்ற உறுப்பினர் வி.சி.சந்திரகுமார், மாநகராட்சி மேயர் நாகரத்தினம் சுப்பிரமணியம், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அ.சுஜாதா, உட்பட துறைசார்ந்த அலுவலர்கள் கலந்துகொண்டனர்.