கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே  தச்சகாடு கிராமத்தில் தனியாருக்கு சொந்தமான சவுடு மணல் குவாரியில் தேங்கியிருந்த தண்ணீரில் கடந்த ஆகஸ்ட் 30ஆம் தேதி பி. முட்லூர் கிராமத்தைச் சேர்ந்த 12ஆம் வகுப்பு மாணவர்கள் ஷேக்சுல்தான், இலியாஸ் ஆகிய 2  மாணவர்கள் பள்ளி முடிந்து குளிக்க சென்றனர். அப்போது மணல் குவாரி சேற்றில் சிக்கி உயிரிழந்தனர்.

Advertisment

இதனையடுத்து உயிரிழந்த மாணவர்களின் குடும்பத்திற்கு நிவாரணம் வழங்க வேண்டும், சட்டத்திற்கு புறம்பாக செயல்படும் மணல் குவாரிகளை தடை செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி பரங்கிப்பேட்டை ஒன்றிய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் கடந்த வாரம் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இத்தகைய சூழ்லில் தான் உயிரிழந்த குடும்பத்திற்கு திமுக, விசிக சார்பில் ஆறுதல் கூறி நிதி உதவி அளிக்கப்பட்டது. 

இதனையொட்டி தமிழக அரசு மணல் குவாரியில் உயிரிழந்த மாணவர்களின் குடும்பத்திற்கு தலா ரூ 3 லட்சம் நிவாரணம் அறிவித்தது. இதனை இன்று (18.09.2025 - வியாழக்கிழமை) சிதம்பரம் சார் ஆட்சியர் அலுவலகத்தில் தமிழக வேளாண் மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் உயிரிழந்த மாணவர்களின் குடும்பத்திற்கு காசோலைகளை வழங்கினார். இந்நிகழ்ச்சியில் சிதம்பரம் சார் ஆட்சியர் மாலதி, நகராட்சி ஆணையர் மல்லிகா, வட்டாட்சியர் கீதா உள்ளிட்டவர்கள் உடன் இருந்தனர்.