தமிழக சட்டமன்ற தேர்தல் இன்னும் சில வாரங்களில் நடைபெறவுள்ள நிலையில் அனைத்து கட்சிகளும் தேர்தல் கூட்டணியை இறுதி செய்து வருகின்றன. இருப்பினும், தேமுதிக எந்த கூட்டணியில் இடம் பெரும் என்பதை அறிவிக்காமல் பொறுமை காத்து வருகிறது. மேலும் அக்கட்சி திமுக, அதிமுக என இரு கட்சிகளுடனும் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக கூறப்படுகிறது.
தேமுதிகவுக்கு 20 சட்டமன்றத் தொகுதிகள் மற்றும் 1 ராஜ்யசபா இடங்கள் கொடுக்க வேண்டும் என்று அக்கட்சி விடாப்பிடியாக இருப்பதாலும் அதற்கு இரு கட்சிகளும் சம்மதம் தெரிவிக்காததாலும் கூட்டணி தொடர்பான பேச்சுவார்த்தையில் இன்னும் இழுபறி நீடித்து வருவதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
இந்த நிலையில், தேமுதிக ஒரு கட்சியே இல்லை என்று அமைச்சர் ராஜகண்ணப்பன் விமர்சனம் செய்துள்ளார். சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு மதுரை மேலூரில் திமுக சார்பில் பொதுக்கூட்டம் ஒன்று நேற்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் வனத்துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர், “விஜயகாந்த் எதிர்க்கட்சித் தலைவராக வந்தார். இல்லை என்று சொல்ல முடியாது. ஆனால் அவருடைய கட்சி இரு கட்சிகளிடம் பேசக்கூடாது. ஏதாவது ஒரு கட்சியில் ஸ்ட்ராங்கா பேசணும். திமுக என்றால் எங்களுக்கு இவ்வளவு சீட்டு கொடுங்கள் என்று கேட்க வேண்டும். ஆனால் அவர்கள் இரு கட்சிகளிடம் பேசுகிறார்கள். இது சரியாகாது. இது நியாமமும் இல்லை. விஸ்வாசமாக இருந்தால் ஒரு பக்கத்தில் விஸ்வாசமாக இருக்க வேண்டும்” என்று விமர்சித்தார்.
அதனை தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய அவரிடம், தேமுதிக குறித்து கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், “அதெல்லாம் ஒரு கட்சியா? பெரிய கட்சிகளை பற்றி பேசுங்க” என்று கூறிச் சென்றார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/media_files/2026/02/11/rajakanna-2026-02-11-17-26-51.jpg)