Minister Ragupathi said Congress can enter the Assembly only if it joins DMK
தமிழக சட்டமன்றத் தேர்தலையொட்டி, திமுக பொருளாளர் டி.ஆர். பாலு தலைமையிலான 7 பேர் கொண்ட குழு கூட்டணி கட்சிகளுடன் தொகுதி பங்கீடு தொடர்பாக தீவிர பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில், ஆட்சி அதிகாரத்தில் பங்கு, கூடுதல் தொகுதி போன்ற விவகாரத்தால் திமுக - காங்கிரஸ் கூட்டணிக்குள் பல்வேறு சலசலப்புகள் ஏற்பட்டிருந்த நிலையில் கூட்டணிக்குள் தொகுதி பங்கீடு குறித்தான பேச்சுவார்த்தை இறுதி கட்டத்தை எட்டியுள்ளது.
இந்த பேச்சுவார்த்தையின் தொடக்கத்தில் காங்கிரஸ் திமுகவிடன் 40+ இடங்களும், 2 ராஜ்யசபா சீட்டும் கேட்டதாகக் கூறப்படுகிறது. ஆனால் தேமுதிக, மக்கள் நீதி மய்யம் போன்ற புதிய கட்சிகள் இணைந்துள்ளதால் கடந்த சட்டமன்றத் தேர்தலில் ஒதுக்கியது போலவே காங்கிரஸ் கட்சிக்கு 25 சட்டமன்றத் தொகுதிகள் மற்றும் 1 மாநிலங்களவை சீட்டு மட்டுமே கொடுக்க முடியும் என திமுக கரார் காட்டி வருகிறது. அதற்கு இசைவு காட்டாத காங்கிரஸ், குறைந்தபட்சம் 35 முதல் 48 இடங்களாவது வேண்டும் என திமுகவிடம் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. இதற்கிடையில் மாநிலங்களவை உறுப்பினர்களான என்.ஆர். இளங்கோ, பி. செல்வராசு, எம். தம்பிதுரை, திருச்சி சிவா, கனிமொழி என்.வி.என். சோமு மற்றும் ஜி.கே. வாசன் ஆகியோரின் பதவிக்காலம் ஏப்ரல் 2ஆம் தேதியுடன் முடிவடைய உள்ளது. எனவே இந்த காலி இடங்களுக்கான தேர்தல் மார்ச் 16ஆம் தேதி நடைபெறவுள்ளது. இந்த தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் செய்ய கடைசி நாள் நாளை மறுநாள் (05-03-26) நிறைவடையவுள்ள நிலையில் திமுக தங்களது வேட்பாளர்களை அறிவிக்காமல் உள்ளது. தொகுதி பங்கீட்டு உடன்படிக்கைக்கு ஒத்துழைத்தால் 1 மாநிலங்களவை சீட்டு தரப்படும் என்ற ரீதியில் காங்கிரஸ் கட்சிக்கு இன்று வரை திமுக கெடு விதித்துள்ளதாகக் கூறப்படுகிறது.
இருப்பினும், காங்கிரஸ் தனது நிலைப்பாட்டில் உள்ளதால் தொகுதி பங்கீடு தொடர்பாக பேச்சுவார்த்தை தற்போது வரை இழுபறி நீடித்து வருகிறது. இதற்கிடையில், காங்கிரஸ் கட்சியின் முக்கிய நிர்வாகிகள் தவெக தலைவர் விஜய்யுடன் ரகசியப் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகி வருகின்றன. இத்தகைய பரபரப்பான அரசியல் சூழலில், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய நிதியமைச்சருமான ப. சிதம்பரம், முதலமைச்சர் மு.க. ஸ்டாலினை இன்று சந்தித்து தொகுதிப் பங்கீடு குறித்து பேசியதாகக் கூறப்படுகிறது.
இந்த நிலையில், திமுகவுடன் சேர்ந்தால் தான் சட்டப்பேரவைக்குள் காங்கிரஸ் வர முடியும் என கனிமவளத்துறை அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார். புதுக்கோட்டையில் இன்று (03-03-26) செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய அமைச்சர் ரகுபதியிடம், தவெகவுடன் காங்கிரஸ் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக வெளியாகும் தகவல் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், “திரைமறைவில் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக வெளியாகும் தகவல் எல்லாம் யாரோ கிளப்பிவிட்ட கப்சா தான். எங்களை பொறுத்தவரைக்கும் தெளிவாக இருக்கிறோம். இது அரசியல் கட்சி, இங்கே வந்தால் அரசியல் அந்தஸ்து கிடைக்கும் என்பது காங்கிரஸ் தலைமைக்குத் தெரியும். அதனால் அவர்கள் அரசியல் அந்தஸ்தை இழக்க விரும்ப மாட்டார்கள். தமிழ்நாட்டில் திமுகவுடன் கூட்டணி வைத்தால் தான் சட்டமன்றத்துக்குள் அவர்கள் வர முடியும் என்று அவர்களுக்கு நன்றாக தெரியும்” என்று கூறினார்.
Follow Us