நடப்பாண்டின் முதல் சட்டப்பேரவை கூட்டத்தொடர் இன்று காலை 9:30 மணிக்கு தமிழக சட்டப்பேரவையில் தொடங்கியது. தமிழ்த்தாய் வாழ்த்துடன் சட்டப்பேரவைக் கூட்டத்தொடர் தொடங்கிய போது, பேரவையில் முதலில் தேசிய கீதம் தான் பாட வேண்டும் என்று ஆளுநர் ஆர்.என்.ரவி வலியுறுத்தியதாக கூறப்படுகிறது. அப்போது சபாநாயகர் அப்பாவு பேரவையின் மரபை எடுத்து கூறிய போது அதனை ஏற்க மறுத்த ஆளுநர் பேரவையில் இருந்து வெளியேறினார். இதற்குகடும் கண்டனம் தெரிவித்த தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், ஆளுநர் உரையுடன் கூட்டத்தொடர் தொடங்கும் என்ற விதியை மாற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என்று திட்டவட்டமாக தெரிவித்தார்.

Advertisment

சட்டப்பேரவையில் இருந்து வெளிநடப்பு செய்த ஆளுநர் ஆர்.என்.ரவி, மைக் மீண்டும் அணைக்கப்பட்டு பேச அனுமதிக்கவில்லை என்றும், உரையில் தவறான கூற்றுகள் இருந்தது என்றும் தேசிய கீதம் மீண்டும் அவமதிக்கப்படுகிறது என்றும் குற்றம் சாட்டினார். இதற்கிடையே, ஆளுநர் வாசிக்கவிருந்த தமிழ்நாடு அரசு தயாரித்த உரையை அவருக்கு பதிலாக சபாநாயகர் அப்பாவு பேரவையில் வாசித்தார். அதன் பிறகு பேரவை கூட்டம் இன்று ஒத்திவைக்கப்பட்டது.

Advertisment

அதனை தொடர்ந்து தலைமைச் செயலக வளாகத்தில் கனிமவளத்துறை அமைச்சர் ரகுபதி செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது அவர், “ஒன்றிய அரசினுடைய பிரதிநிதியாக இருக்க வேண்டிய ஆளுநர், இன்றைக்கு பா.ஜ.கவின் பிரதிந்தியாக நம்முடைய சட்டமன்றத்திற்கு வந்து சென்றிருக்கிறார். சட்டமன்றத்தில் தொடர்ந்து மூன்று ஆண்டுகளாக அவரிடம் நாங்கள் எடுத்து சொல்லி வருகிறோம். தமிழ்நாடு சட்டமன்றத்தினுடைய மரபு முதலில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடுவது, நிகழ்ச்சி முடிந்தவுடன் இறுதியில் தேசிய கீதம் பாடுவது இது தான் தமிழ்நாட்டின் மரபு. இதை நாங்கள் அவரிடம் பலமுறை சொல்லி வந்தாலும் கூட இன்றைக்கு அவர் பேசத் தொடங்கும் போதே தேசிய கீதம் பாடவில்லை என்று சொன்னார். அது மரபு அல்ல, நாங்கள் இன்றைக்கு உரை நிகழ்த்த வேண்டும், உரையை நிகழ்த்துங்கள் என்று சொல்லும் போது தமிழக அரசால் தயாரிக்கப்பட்ட உரையை வாசிக்காமல் ஏதாவது வார்த்தைகளை சொல்லி சட்டமன்றத்தில் பிரச்சனைகளை கிளப்ப முடியுமா என்று பார்த்தார்.

ஆனால், எல்லோரும் அமைதியாக இருந்தனர். தொடர்ந்து அவர் வேறு எதையோ பேசிக் கொண்டிருந்ததால் தயவு செய்து நீங்கள் அறிக்கையை படியுங்கள் என்று வேண்டுகோளை சபாநாயகர் வைத்தார். எவ்வளவு எளிமையாக தாழ்ந்து போய் கேட்க முடியுமோ அந்த அளவுக்கு சபாநாயகர் கேட்டார். சட்டமன்றத்தினுடைய தலைவர் சபாநாயகர் தான். ஆனாலும் அவர் அப்படி கேட்ட போதிலும் அதை வாசிக்காமல் ஆளுநர் வெளியேறிவிட்டார். அதன் பிறகு தன்னுடைய ஆளுநர் மாளிகையில் இருந்து கொண்டு ஒரு அறிக்கையை தந்திருக்கிறார். அவருடைய மைக் அணைக்கப்பட்டது என்று சொல்லி இருக்கிறார். நாங்கள் அத்தனை பேரும் அங்கே தான் இருக்கிறோம். எந்த மைக் ஆஃப் செய்யப்பட்டது?

Advertisment

நம்முடைய அமைச்சரவையினுடைய தலைவராக இருக்கக்கூடிய ஆளுநர் இங்கே வந்து அந்த உரையை வாசித்துவிட்டு சென்றிருக்க வேண்டும். ஆனால், திரும்ப திரும்ப வேறு வேறு கேள்விகளை கேட்டுவிட்டு இப்போது மைக்கை ஆஃப் செய்தார்கள் என்கிறார். மைக் ஆஃப் செய்யப்படவில்லை. அது சுத்தமான புழுகு. ஆளுநர் ஏதோ தான் சொல்லிவிட்டால் அதை உண்மை என்று மக்கள் எண்ணிவிடுவார்கள் என்று நினைக்கிறார். அப்படி ஆளுநருடைய மைக் அணைக்கப்படவில்லை. அணைக்கப்பட வேண்டிய அவசியமும் எங்களுக்கு கிடையாது. அவரை நாங்கள் பேசத்தான் விட்டோமே தவிர மைக்கை ஆஃப் செய்ய அழைக்கவில்லை. எதிர்க்கட்சிகள் கூட சொல்லாத குற்றச்சாட்டுக்களை எல்லாம் இன்று வரிந்து கொண்டு எல்லோருக்கும் வக்காலத்து வாங்குகிற ஒரு வக்கீலாக ஆளுநர் இருக்கிறார். அரசுக்கு எதிராக என்னென்ன குற்றச்சாட்டுகள் சொல்ல முடியுமோ அதையெல்லாம் பொய்யாக சொல்லி இருக்கிறார். ஆளுநர் இங்கிருந்து வெளியேறுகிறார். வெளியேறிய உடனேயே அந்த அறிக்கை ஆளுநர் மாளிகையில் இருந்து வருகிறார். இது திட்டமிடப்பட்ட வேலைகள் தான். அவர்கள் முன்னாலே தயாரித்து வைத்திருக்கலாம். எங்களுக்கு அதைப் பற்றி கவலை இல்லை. தமிழ்நாட்டை குறை சொல்ல வேண்டும் என்பதற்காக கனவு கண்டு கொண்டிருக்கிறார்” என்று கூறினார்.