ஈரோடு மாவட்டம் விஜயமங்கலத்தில் தவெக தலைவர் விஜய் தலைமையில் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சி கடந்த 18ஆம் தேதி நடைபெற்றது. கரூர் கூட்டநெரிசல் சம்பவத்திற்குப் பிறகு, தமிழகத்தில் விஜய் மேற்கொண்ட இந்த பரப்புரையில், ஏராளமான தொண்டர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட தவெக தலைவர் விஜய் பேசிய போது, திமுகவை கடுமையாக விமர்சித்துப் பேசியிருந்தார். அதில் அவர், “எம்.ஜி.ஆரும், ஜெயலலிதாவும் ஒரே வார்த்தையில் சொல்லி இந்த திமுகவை காலி செய்தார்கள். ஏன் இவ்வளவு கோபத்தோடு திமுகவை அவர்கள் இருவரும் திட்டுகிறார்கள் என நான் கூட யோசிப்பேன். அவர்கள் இரண்டு பேர் சொன்னதை இப்போது நானும் திருப்பி சொல்றேன், திமுக ஒரு தீய சக்தி, திமுக ஒரு தீய சக்தி, திமுக ஒரு தீய சக்தி, தீய சக்தி. தவெக ஒரு தூய சக்தி. தூய சக்தி தவெகவுக்கும், தீய சக்தி திமுகவுக்கும் இடையில் தான் போட்டியே. மக்கள் விரோத சக்தி திமுக அரசை வீழ்த்த மக்கள் சக்தியான நம்மால் தான் முடியும்” என்று காட்டமாக விமர்சித்துப் பேசினார்.
விஜய் பேசியது குறித்து பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் இயற்கை வளங்கள் துறை அமைச்சர் ரகுபதி, விஜய்யை விமர்சித்துப் பேசியுள்ளார். புதுக்கோட்டையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றப் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் ரகுபதியிடம், தவெக தலைவர் விஜய் பேசியது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், “நாங்கள் தீய சக்தி, தூய சக்தி பற்றியெல்லாம் கவலைப்பட மாட்டோம். ஏனென்றால், எங்களிடம் மக்கள் சக்தி இருக்கிறது. அவருக்கு மக்கள் சக்தியைப் பற்றி தெரியாது. சினிமா வசனத்தில் தீய சக்தி, தூய சக்தி என்று பேசியிருக்கிறார். நாங்கள் மக்கள் சக்தியை நம்புகிறோம். எங்களிடம் மக்கள் சக்தி இருக்கிறது.
அவருக்கு சிலப்பதிகாரமும் தெரியாது, ஒன்றும் தெரியாது. எழுதி கொடுத்ததை வாசிக்க மட்டும் தான் அவருக்கு தெரியும். திராவிட மாடல் ஆட்சியையோ, திராவிட கலாச்சாரத்தையோ தமிழ்நாட்டில் இருந்து பிரிக்க முடியாது. அவர், பகுத்தறிவு தந்தை பெரியாரை ஏற்றுக்கொண்டிருக்கும் போது திராவிடத்தை ஏற்றுக்கொண்டிருக்கிறார் என்றுதான் அர்த்தம். மறைமுகமாக பா.ஜ.கவின் சி-டீமாக அவர் இருப்பதால், அவர் மறைத்துப் பேசுகிறார். ஆனால், அவர் நினைத்தது எந்த காலத்திலும் நடக்காது. சும்மா 6 மாதத்தில் நடித்துவிட்டு ஒருவர் முதலமைச்சராக வருவது, ஆட்சியை பிடிப்பது என்றெல்லாம் சினிமாவில் மட்டும் தான் நடக்கும். அரசியலிலும் உண்மையிலும் நடக்காது.
எம்.ஜி.ஆர் 1972இல் கட்சியை ஆரம்பித்தார். திண்டுக்கல் இடைத்தேர்தலில் ஜெயித்ததுக்கு பிறகு தான் அந்த கட்சி உறுதியாக இருந்தது. இவர் ஈரோடு, விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் நின்று தனது பலத்தை காண்பித்து பேசியிருந்தார் என்றால் அவர் பேசுவதற்கு யோகிதம் உண்டு. இரண்டு தேர்தலிலும் புறம் தள்ளிட்டு ஓடிட்டார். எம்.ஜி.ஆரையும், இவரையும் ஒப்பிடவே முடியாது. அதனால், விஜய் ஒரு காலத்திலும் எம்.ஜி.ஆர் ஆக முடியாது. அவர் இன்னும் சினிமா பாணியில் தான் பேசுகிறார். சினிமாவில் சண்டையிடும் போது அவர் 100 பேரை அடிப்பார். அதே போல் தான், அவர் தரம் தாழ்ந்து பேசுகிறார். நாங்கள் தரம் தாழ்ந்து பேசவில்லை” என்று கூறினார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/media_files/2025/12/20/vijayragu-2025-12-20-11-28-14.jpg)