தமிழகத்தில் மிக நீண்டகால கூட்டணி அமைத்துள்ள கட்சிகள் என்றால் அது திமுகவும் காங்கிரசும் தான்.இந்த கூட்டணி வலுவான கூட்டணியாக இதுவரை இருந்து வந்துள்ளது. குறிப்பாக, கடந்த சில தேர்தல்களில் இந்த கூட்டணி மிகப் பெரிய அளவிலான வெற்றியைப் பதிவு செய்துள்ளது. இத்தனை ஆண்டுகாலமாக இந்த கூட்டணி வலுவான நிலையில் இருந்து வருவதாக இருதரப்பு நிர்வாகிகளும் வெளிப்படையாகக் கூறி வந்தனர்.

Advertisment

இந்நிலையில், வருகின்ற சட்டமன்ற தேர்தலையொட்டி இந்த இருகட்சிகளும் கூட்டணி மற்றும் தொகுதிப் பங்கீடு குறித்து பேச்சுவார்த்தை நடத்தும் என்று அனைவரும் எதிர்பார்த்து வந்தனர். ஆனால், கடந்த சில வாரங்களாக இரு கட்சிகளிடையே பெரிய அளவிலான கருத்து முரண்பாடுகள் இருந்து வருகின்றது. ஆனால், இது சாதாரண முரண்கள் தான், பின்னாளில் இது சரி செய்யப்படும் என்று இரு தரப்பினரும் தெரிவித்து வந்தனர். ஆனால், இன்னும் கொஞ்ச நாட்களில் தேர்தல் தேதிகள் அறிவிக்கப்பட இருக்கும் நிலையில் இந்த முரண்பாடுகள் மேலும் அதிகரித்த வண்ணம் உள்ளன. அதே நேரத்தில், இரு கட்சிகளுக்கிடையில் கூட்டணி தொகுதிப் பங்கீடு குறித்த பேச்சுவார்த்தை முடிவிற்கு வந்ததாகத் தெரியவில்லை. 

Advertisment

இந்த நிலையில், கூட்டணி விவகாரம் குறித்த கேள்விகளுக்குப் பதிலளித்த காங்கிரஸ் மேலிடப் பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர், கூட்டணி குறித்து திமுகவுடன் பேச்சுவார்த்தை நடத்தி வரும் அதே வேளையில், தவெகவுடனும் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகச் செய்தியாளர்களிடம் தெரிவித்திருந்தார். இது அரசியல் வட்டாரத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. மேலும், இந்த கூட்டணி முறிய வாய்ப்பிருப்பதாகவும் பலர் கருத்து தெரிவித்து வருகின்றனர். 

இந்நிலையில் இதற்குப் பதிலளித்த திமுக அமைச்சர் ரகுபதி, “சோடங்கர் கூறும் கருத்துக்களை திமுக பொருட்படுத்துவதில்லை. எங்கள் தலைவரும் (முதல்வர் மு.க.ஸ்டாலின்) ராகுல் காந்தியும் பேசி ஒரு நல்ல முடிவெடுப்பார்கள். முதல்வர் மு.க.ஸ்டாலின் அனைத்து கட்சிகளையும் அனுசரித்துச் செல்லும் குணம் கொண்டவர். இந்திய அரசியலிலே அப்படி ஒரு தலைவர் யாரும் இருக்க மாட்டார்கள். எனவே, முதல்வரும் ராகுல் காந்தியும் பேசி தான் தொகுதிப் பங்கீடு குறித்து முடிவெடுப்பார்கள். அது தான் இறுதி முடிவு. இதற்கிடையில் வேறு யார் சொல்வதையும் பொருட்படுத்தத் தேவையில்லை” என்று செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

Advertisment