கார்த்திகை திருநாளை முன்னிட்டு திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத்தூணில் தீபம் ஏற்ற வேண்டும் என்று உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் கடந்த சில தினங்களுக்கு முன்பு உத்தரவிட்டிருந்தார்.
அந்த உத்தரவைத் தொடர்ந்து, கார்த்திகை தீபத் திருநாளான நேற்று (04-12-25), திருப்பரங்குன்றம் மலையின் உச்சியின் மீதுள்ள தீபத்தூணில் ஏற்றாமல் பிள்ளையார் கோயிலில் அருகில் கார்த்திகை தீபம் ஏற்றியதால் இந்து அமைப்பினர், காவல்துறையினருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு போராட்டம் செய்தனர். இதல் இருதரப்பினருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டதால் பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டது. அதனை தொடர்ந்து, திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவை அம்மாவட்ட நிர்வாகம் அமல்படுத்தியது.
இந்த சூழ்நிலையில், மலை உச்சியில் தீபம் ஏற்ற வேண்டும் என்ற நீதிமன்ற உத்தரவை அமல்படுத்தாத மதுரை மாவட்ட ஆட்சியர் மற்றும் மதுரை மாநகர காவல் ஆணையர் மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ராம ரவிக்குமார் நேற்று மாலை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்குத் தொடுத்திருந்தார். அந்த வழக்கு மீதான விசாரணை இன்று (04-12-25) மாலை நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் முன்பு வந்தது. அப்போது அரசு தரப்பு வாதத்தை கேட்ட நீதிபதி, மதுரை ஆட்சியரின் 144 தடை உத்தரவை ரத்து செய்து உத்தரவிட்டார். மேலும், இன்று திருப்பரங்குன்றம் தர்கா அருகே உள்ள தீபத்தூணில் தீபம் ஏற்ற வேண்டும் என்றும், உத்தரவை நிறைவேற்றிய நகலை நாளை காலை தாக்கல் செய்ய வேண்டும் என்றும் உத்தரவு பிறப்பித்து இந்த வழக்கு விசாரணையை நாளை காலை 10:30 மணிக்கு ஒத்திவைத்தார்.
நீதிமன்ற உத்தரவுப்படி திருப்பரங்குன்றம் தீபத்தூணில் இன்று (04-12-25) தீபமேற்ற ஏற்பாடு செய்யப்பட்டது. இதற்காக பா.ஜ.க மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் மற்றும் பா.ஜ.க தொண்டர்கள் ஏராளாமானோர் திருப்பரங்குன்றத்துக்கு குவிந்து மலை ஏறி தீபம் ஏற்ற முயன்றனர். அப்போது, 144 ரத்து உத்தரவுக்கு எதிராக தமிழக அரசு மேல்முறையீடு செய்ய உள்ளது, அதனால் அங்கிருந்து அனைவரும் கலைந்து செல்ல வேண்டும் என்று அவர்களுக்கு எச்சரிக்கை விடுத்து போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தினர். ஆனாலும், பா.ஜ.க தொண்டர்கள் அங்கிருந்து கலைந்து செல்லாமல் மலை உச்சியில் தீபம் ஏற்ற வேண்டும் என்று கூறி போராட்டத்தில் ஈடுபட்டனர். அனுமதியின்றி போராட்டம் நடத்தியதால் பா.ஜ.க மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் மற்றும் பா.ஜ.க மூத்த தலைவர் ஹெச்.ராஜா ஆகியோரை அதிரடியாக கைது செய்தனர். மேலும், இந்து அமைப்பினர் மற்றும் பா.ஜ.க தொண்டர்களை குண்டுக்கட்டாக தூக்கி போலீசார் கைது செய்தனர். இதனால் திருப்பரங்குன்றத்தில் 2வது நாளாக மீண்டும் பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக சட்டத்துறை அமைச்சர் ரகுபதி இன்று செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது அவர், “மதவாத சக்திகள், இந்துத்துவ அமைப்புகள் எப்படியாவது தமிழ்நாட்டில் காலை ஊன்ற வேண்டும் என்கிற நோக்கத்துடன் செயல்பட்டு கொண்டிருக்கிறார்கள். இந்துத்துவ அமைப்புகள் எதை கையிலே எடுப்பது என்று தெரியாமல் முழித்துக் கொண்டிருக்கிறார்கள். கார்த்திகை தீபம் பண்டிகை இந்துக்களுடைய பண்டிகை அல்ல, தமிழர்களுடைய பண்டிகை. இதில் இந்துத்துவாவுக்கு எந்த வேலையும் கிடையாது. ஆனால், இப்போது திடீரென்று திருப்பரங்குன்றத்தில் கார்த்திகை தீபத்தை ஒட்டி பிரச்சனையை கிளப்பி இருக்கிறார்கள். நீதிமன்றத்தை அணுகு ஒரு உத்தரவை வாங்கியிருக்கிறார்கள்.
2014 ஆம் ஆண்டு நீதியரசர்கள் பவானி சுப்பராயனும், கல்யாணசுந்தரமும் ஒரு தீர்ப்பை தந்திருக்கிறார்கள். எந்த இடத்தில் கார்த்திகை தீபத்தை வழக்கப்படி ஏற்றிக் கொண்டிருக்கிறோமோ அதே இடத்திலே தான் ஏற்ற வேண்டும் என்று 2014லேயே தீர்ப்பு வந்திருக்கிறது. ஆனால் அதை புரிந்து கொள்ளாதவர்கள், நீதிமன்றத்தை அணுகி எங்களுக்கு கார்த்திகை தீபத்தை விளக்கேற்றுவதற்கு அனுமதி வேண்டும் என்று கேட்டு ஒரு இடத்தை குறிப்பிட்டு கேட்டிருக்கிறார்கள். அதற்கு அந்த நீதிபதியும் தீர்ப்பை தந்திருக்கிறார். நாங்கள் சட்டத்தை மதிப்பவர்கள். நீதித்துறையை வணங்குபவர்கள். எங்களுடைய தமிழ்நாடு முதலமைச்சரை போல் சட்டத்தை மதிக்கக்கூடிய ஒருவர் இந்தியாவிலேயே கிடையாது. 2014இல் கொடுத்திருக்கக்கூடிய அந்த தீர்ப்பின் மீது மேல்முறையீடு செய்யாமல், ஒரு தனி நீதிபதியை வைத்து ஒரு தீர்ப்பை வாங்கிக் கொண்டு நாங்கள் நிறைவேற்ற வேண்டும் என்றால் எப்படி அனுமதிக்க முடியும். அப்படி அனுமதித்தால், தமிழக அரசின் மீது என்ன குற்றச்சாட்டு வரும் என்பது உங்களுக்கு தெரியும். எனவே 2014 தீர்ப்பின்படி நாங்கள் நடந்துக் கொண்டிருக்கிறோம்.
தமிழ்நாட்டு மக்கள் இழிச்சவாயர்கள் அல்ல, ஏமாளிகள் அல்ல. அவர்களுக்கு அடிமை பழனிச்சாமி கிடைக்க முடியுமே, தவிர வேறு எந்த அடிமைகளும் தமிழ்நாட்டில் கிடைக்கமாட்டான். தமிழ்நாடு என்பது இங்கே மத ஒற்றுமை, மத நல்லிணக்கம் இவற்றுக்கு எடுத்துக்காட்டான பூமி. அதை இன்றைக்கும் நாம் நிரூபித்துக் கொண்டிருக்கின்றோம். எடப்பாடி பழனிசாமிக்கு வேற வேலையே கிடையாது. தமிழ்நாடு அரசு மீது ஏதாவது குற்றச்சாட்டை சொல்ல வேண்டும் என்பது தான் அவருடைய வேலை, பணி. சட்டம் ஒழுங்கை பாதுகாப்பதற்கு நாங்கள் என்ன செய்ய வேண்டுமோ அந்த நடவடிக்கைகளை நாங்கள் எடுத்துக் கொண்டிருக்கின்றோம். அதை மீறி எந்த சக்தி வந்தாலும் அந்த சக்தியை எதிர்கொள்கிற சக்தி எங்களுக்கு இருக்கிறது” என்று கூறினார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/media_files/2025/12/04/mi-2025-12-04-21-40-42.jpg)