புதுக்கோட்டை தெற்கு மாவட்ட திமுக சார்பில் கீரமங்கலத்தில் தமிழ்நாட்டைத் தலைகுனிய விடமாட்டோம்! ஓரணியில் தமிழ்நாடு தீர்மான ஏற்பு பொதுக்கூட்டம் கனிமவளத்துறை அமைச்சர் ரகுபதி தலைமையில் நடந்தது. இந்த கூட்டத்தில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் மெய்யநாதன், தலைமைக் கழகப் பேச்சாளர் சபாபதி மோகன் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புறையற்றினர்.
இந்த கூட்டத்தில் அமைச்சர் ரகுபதி பேசும் போது, “கீழடி நாகரீகம் தமிழர் நாகரீகம். இதனை மறைக்கப் பார்க்கிறது ஒன்றிய அரசு. மூத்த மொழி தமிழுக்கு உரிய மரியாதை கொடுங்கள். ஒரு கண்ணில் சுண்ணாம்பும் மற்றொரு கண்ணில் வெண்ணெய்யும் வைக்காதீர்கள். சமஸ்கிருதத்திற்கு அதிக நிதியும் தமிழுக்குக் குறைந்த நிதியும் கொடுத்து தமிழன் கண்ணில் சுண்ணாம்பு வைப்பதால் எங்களுக்கு எரிகிறது. எரிச்சல் தெரிந்தவன் தமிழன். அதனால் தான் தமிழன் வெகுண்டெழுகிறான்.
வீரபாண்டிய கட்டப்பொம்மனைக் காட்டிக் கொடுத்த அடிமைகள் இங்கே இன்னும் இருக்கிறார்கள். டெல்லி போய் வந்த எடப்பாடி பழனிசாமி பாஜகவினர் தான் எங்கள் ஆட்சியைக் காப்பாற்றினார்கள் என்கிறார்கள். அப்படி என்றால் நாடாளுமன்றத் தேர்தலில் ஏன் ஒதுக்கிவிட்டீர்கள். எடப்பாடி பழனிச்சாமி திண்டுக்கல் சீனிவாசனிடம் திண்டுக்கல் பூட்டு வாங்கி அதிமுக பூட்டுப்போட்டுப் பூட்டிவிடுவார்.
கலைஞரின் தொலைக்காட்சி பெட்டி இன்னும் இருக்கிறது. ஆனால் அதிமுகவினர் கொடுத்த எந்தப் பொருளும் இல்லை. நாங்கள் தரமான பொருளைக் கொடுத்தோம். ஆனால் அதிமுக கொடுத்தது தரமற்றது. ஒன்றிய அரசுக்கு ஜிஎஸ்டியை அள்ளி அள்ளி கொடுக்கிறோம். ஆனால் ஒரு ரூபாய்க்கு 27 காசு தான் நமக்குத் திருப்பி தருவார்கள். 50 பைசா கொடுங்கன்னு கேட்கிறோம் தரவில்லை. இப்போது ஜிஎஸ்டி குறைப்பால் நமக்கும் நிதியைக் குறைப்பார்கள்” என்றார்.