ஒன்றிய அரசின் அடாவடியே புதிய டிஜிபி நியமனத்திற்குத் தாமதம். எத்தனையோ ஆண்டுகள் டிஜிபி இல்லாமல் அதிமுக ஆட்சி நடத்தியதை மறந்து, மாநில உரிமைகளுக்காகப் போராடும் திராவிட மாடல் அரசின் முதலமைச்சர் மு.க. ஸ்டாலினைக் குறை கூறுவதா? என எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமிக்கு  அமைச்சர் ரகுபதி  கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “புதிய டி.ஜி.பி. நியமனம் தொடர்பாகக் கருத்து வெளியிட்டுள்ள  எதிர்கட்சித் தலைவர் பழனிசாமி, முன்னாள் டி.ஜி.பி.யின் பதவிக்காலம் கடந்த ஆகஸ்ட் மாதம் நிறைவடைந்தும், இதுவரை புதிதாக டி.ஜி.பி. நியமிக்கப்படவில்லை என்றும், தங்களுக்கு ஏற்ற நபரைத தேர்தல் நோக்கத்திற்காக நியமிக்க வேண்டும் என்பதற்காகவே இவ்வாறு காலதாமதம் செய்யப்படுகின்றது என்றும் வழக்கம்போல் அடிப்படையில்லாமல் பேசியிருக்கிறார்.

Advertisment

உச்சநீதிமன்றத்தில் வழக்கு இருந்த காரணத்தால்தான், புதிய டி.ஜி.பி. நியமனத்திற்கான பட்டியல் ஒன்றிய அரசுப் பணியாளர் தேர்வாணையத்திற்கு (UPSC) உரிய காலத்தில், அனுப்பி வைக்க இயலவில்லை என்ற அடிப்படை உண்மையைக் கூட அவர் தெரிந்து கொள்ள முற்படவில்லை. வழக்கு முடிந்தபின்னர் எந்தவிதக் காலதாமதமும் இன்றி அந்தப் பட்டியல் அனுப்பி வைக்கப்பட்டது என்று ஏற்கெனவே தெளிவுபடுத்தியிருந்ததையும் அவர் புரிந்து கொள்ளவில்லை. அதன்பிறகு டிஜிபி நியமனப் பட்டியல் தொடர்பாக ஒன்றிய அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்திய கூட்டத்தில், விதிகளுக்குப் புறம்பாக சில பெயர்கள் முன்மொழியப்பட்டது குறித்து, தமிழ்நாடு அரசு தனது கடும் எதிர்ப்பைப் பதிவு செய்தது. மாநில உரிமைகளை மதிக்கும் ஒரு அரசு பழனிசாமி போல அமைதி காக்க முடியாது. இருப்பினும், மாநில சட்டம் - ஒழுங்குக்குப் பொறுப்பான தமிழ்நாடு அரசின் கருத்துகளை ஏற்காமல், தாங்கள் விரும்பியவர்களையே முன்மொழிந்து ஒன்றிய அரசுப் பணியாளர் தேர்வாணையம் பட்டியலை அனுப்பி வைத்தது.

Advertisment

eps-mic-1

இந்தப் பட்டியல் தமிழ்நாடு அரசால் ஏற்கத்தக்கதாக இல்லாத நிலையில், அதற்கான காரணங்களை முழுமையாக விளக்கி, தலைமைச் செயலாளர் நா. முருகானந்தம் ஒன்றிய அரசுப் பணியாளர் தேர்வாணையத்திற்குக் கடிதம் எழுதியுள்ளார். அதற்கான பதில் இன்னும் பெறப்படாத நிலையில், ‘ஆடு நனைகிறதே என்று ஓநாய் அழுததாம்’ என்ற கதையாக மாநிலச் சட்டம் - ஒழுங்கைக் காப்பாற்ற வேண்டுமென்று எதிர்க்கட்சித் தலைவர் அறிக்கை வெளியிட்டுள்ளார். தனது ஆட்சிக்காலத்தில் ஒவ்வொரு மாநில உரிமையாக விட்டுக் கொடுத்து, பதவியில் ஒட்டிக் கொண்டிருந்த பழனிச்சாமியிடமிருந்து வேறு எதை எதிர்பார்க்க முடியும்?

தமிழ்நாடு அரசு தனக்கு வேண்டப்பட்ட நபரை புதிய டி.ஜி.பியாக அமர்த்த வேண்டும் என்பதல்ல இங்கே உள்ள பிரச்சினை. சட்டம் - ஒழுங்கு தொடர்பாக மாநில அரசின் கருத்துக்களைப் புறக்கணித்து தனக்கு வேண்டப்பட்ட நபர்களைத் தமிழ்நாட்டில் டி.ஜி.பி. ஆக அமர்த்துவதற்கு ஒன்றிய அரசு முயலும் அடாவடிதான் புதிய டிஜிபி நியமனத்தில் தமிழ்நாடு அரசு சந்திக்கும் பிரச்சினை. ஏற்கனவே இதுபோன்ற பல பிரச்சினைகளில், மாநில அரசின் உரிமைகளை திராவிட மாடல் அரசு நிலைநாட்டியதைப் போன்று டி.ஜி.பி. நியமனத்திலும் மாநில உரிமைகளை நிலைநாட்ட  முழு முயற்சிகளையும் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையிலான அரசு எடுத்து வருகிறது. அதைப் பொறுத்துக் கொள்ள முடியாத எதிர்கட்சித் தலைவர் ஏதேதோ சொல்லிப் புலம்புகிறார்.

Advertisment

mks-4

தற்போது புதிய டி.ஜி.பி. நியமனத்தைக் குறை கூறும் பழனிசாமி, தாம் வணங்குவதாகக் கூறும் ஜெயலலிதாவின் ஆட்சிக் காலத்தில் எந்த சட்டப் பிரச்சினையும் இல்லாத போதே, எத்தனை மாதங்கள், எத்தனை ஆண்டுகள் டி.ஜி.பி. இல்லாமல் அரசை நடத்தினார் என்பதை விரல் விட்டு எண்ணிப் பார்க்க வேண்டுமே தவிர மாநில உரிமைகளுக்காகப் போராடும் திராவிட மாடல் நாயகர் முதலமைச்சர் மு.க. ஸ்டாலினைக் குறை கூறுவதா? எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.