தமிழக அரசு மகளிருக்குக் கலைஞர் உரிமைத்தொகை திட்டத்தின் மாதந்தோறும் 1000 ரூபாயை வழங்கிவருகிறது. ஆனால், இந்த மாதம் அந்த உரிமைத்தொகை 5000 ரூபாயாக மகளிரின் வங்கிக் கணக்கில் வரவுவைக்கப்பட்டுள்ளது. இது, பிப்ரவரி, மார்ச், ஏப்ரல் மற்றும் மே (கோடை தொகுப்பு உட்பட) மாதங்களுக்கும் சேர்த்து வழங்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பு பெண்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. அதன் காரணமாக, பெண்கள் அண்ணா அறிவாலயத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலினைச் சந்தித்து நன்றி தெரிவித்தனர். இந்த உரிமை தொகை மொத்தமாகச் சேர்த்து வழங்குவது பற்றி, எந்தவித அறிவிப்பும் முன்னதாக அறிவிக்கப்படாமல் திடீரென்று இந்த தொகை வழங்கப்பட்டுள்ளது.
இது குறித்து திமுக வின் அமைச்சர் ரகுபதி செய்தியாளர்களைச் சந்தித்து விளக்கமளித்தார். அதில் அவர் கூறியதாவது, “இந்த அறிவிப்பு பற்றி முன்கூட்டியே தெரிவிக்கப்படாமல், திடீரென்று திமுக அரசு வழங்கியுள்ளது. காரணம், இது பற்றி முன் கூட்டியே தெரிவிக்கப்பட்டிருந்தால் எதிர்க்கட்சிகள் நீதிமன்றத்திற்குச் சென்று இந்த தொகையை வழங்கவிடாமல் தடை செய்திருப்பார்கள். அதற்கு வாய்ப்பளிக்கக் கூடாது என்பதால் தான் திமுக அரசு யாருக்கும் சொல்லாமல் இப்படி மகளிருக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளது. இதிலிருந்து, முதல்வர் மு.க.ஸ்டாலின் சொன்னதையும் செய்வார், சொல்லாததையும் செய்வார் என்பது எல்லோருக்கும் புரிந்திருக்கும்.
இன்று, நமது முதல்வர் இந்தியாவே வியந்து பார்க்கின்ற அளவிற்கு அதிரடியாகப் பல திட்டங்களை மக்களுக்குத் தந்துள்ளார். அதே நேரத்தில், ஒன்றிய அரசு கொண்டுவரும் மக்கள் விரோத திட்டங்கள் மற்றும் தமிழகத்திற்கு எதிராக ஒன்றிய அரசு செய்யும் வஞ்சனையான செயல்பாடுகளுக்கும் முதலில் எதிர்ப்புக்குரல் கொடுப்பவர் நமது முதல்வர். வறுமையை ஒழித்து வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நலத்திட்டங்களை ரவுடி கல்ச்சர் என்று கூறி கொச்சைப்படுத்தியவர் மோடி. இலவசத் திட்டங்களை வழங்குவது நாட்டிற்கு ஆபத்தானது என்று பாஜகவினர் சொல்கிறார்கள். ஆனால், இந்த சமூக நலத் திட்டங்கள் என்பது மக்களை வாழவைக்கும் திட்டங்கள் என்று எங்கள் தலைவர் சொல்கிறார்” என்று தெரிவித்துள்ளார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/media_files/2026/02/13/ragu-2026-02-13-19-07-08.jpg)