தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், அரசியல் கட்சிகள் கூட்டணி பேச்சுவார்த்தை, விருப்ப மனு, தொகுதி பங்கீடு, தேர்தல் பிரச்சாரம் என தீவிரமாக தேர்தல் பணியில் ஈடுபட்டு வருகின்றன. குறிப்பாக ஒவ்வொரு கட்சிகளும், தங்களது கட்சிக்குள் குழு ஒன்றை அமைத்து தேர்தல் அறிக்கையையும், தேர்தல் பிரச்சாரப் பணிகளை மேற்கொண்டு வருகின்றன.
இதில், முதற்கட்ட தேர்தல் வாக்குறுதிகளை தமிழக எதிர்க்கட்சித் தலைவரும், அதிமுக பொதுச் செயலாளருமான எடப்பாடி பழனிசாமி நேற்று (17-01-26) அறிவித்தார். அந்த அறிவிப்பில், குலவிளக்கு திட்டம் மூலம் குடும்ப தலைவிகளுக்கு மாதம் ரூ.2,000, ஆண்களுக்கும் இலவசப் பேருந்து பயணம், அனைவருக்கும் வீடு, மகளிருக்கு இருசக்கர வாகனங்கள் வழங்கும் திட்டம் போன்ற வாக்குறுதிகளை அறிவித்தார்.
இந்த நிலையில், எடப்பாடி பழனிசாமி அறிவித்த தேர்தல் வாக்குறுதிகளை கனிமவளத்துறை அமைச்சர் ரகுபதி விமர்சனம் செய்துள்ளார். புதுக்கோட்டையில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்த அவர், “பந்தியே போடவில்லை, அதற்குள் எடப்பாடி பழனிசாமி முந்திக்கொண்டு இலை போட்டுள்ளார். தேர்தல் தேதியே அறிவிக்கவில்லை, அதற்குள் அவசரமாக தேர்தல் அறிக்கையை வெளியிட்டுள்ளார். திமுக அரசின் திட்டங்களை எடப்பாடி பழனிசாமி காபி பேஸ்ட் (Copy past) செய்துள்ளார். திமுக வாக்குறுதிகளை நிறைவேற்றியுள்ளது என்பதை அவர் அறிவித்த திட்டங்களால் ஒப்புக்கொண்டுள்ளார். திராவிட மாடல் ஆட்சி 2.0வுக்கு வரவேற்பை தரும் அறிவிப்பாக திமுக தேர்தல் அறிக்கை இருக்கும். எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள தேர்தல் அறிக்கையால் எங்களுக்கு எந்த பின்னடைவும் இல்லை” என்று தெரிவித்தார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/media_files/2026/01/18/raguthirup-2026-01-18-12-15-37.jpg)