மகளிர் முன்னேற்றத்திற்காக நிதி, சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு முன்னெடுப்பில், திருச்சுழி சட்டமன்றத் தொகுதி முழுவதும் பகுதி வாரியாக பெண்களுக்கான இலவச தொழிற்பயிற்சி முகாம்கள் நடைபெறுகின்றன. அதன் ஒரு பகுதியாக, விருதுநகர் மாவட்டம், திருச்சுழி ஒன்றியத்திற்கு உட்பட்ட ம. ரெட்டியாபட்டி ஊராட்சியில் மூன்று நாள் இலவச தொழிற்பயிற்சி முகாம் நடைபெறுகிறது. இந்நிலையில், சோப் தயாரித்தல் பயிற்சியை அமைச்சர் தங்கம் தென்னரசு நேரில் பார்வையிட்டார்.

Advertisment

அப்போது, 7 மாத கைக்குழந்தையை கையில் ஏந்தியவாறு காத்திருந்த நபரைக் கவனித்த அமைச்சர், அவரை அழைத்துப் பேசினார். தனது மனைவி பயிற்சியில் கலந்துகொள்ள, மூன்று நாட்களும் குழந்தையைக் கவனித்துக்கொள்வதைக் கேட்ட அமைச்சர் மனதாரப் பாராட்டினார். இது குறித்து பேசிய அமைச்சர், “தனது இணையரின் முன்னேற்றத்தில் பொன் இருளன் கொண்டுள்ள அக்கறை அனைத்து ஆண்களுக்கும் முன்மாதிரியாக உள்ளது. ஏனெனில், ஆண்கள் பெண்களுக்கு உறுதுணையாக இருந்தால், பெண்களின் சக்தி பன்மடங்கு அதிகரிக்கும். 7 மாத குழந்தையைத் தூக்கிக்கொண்டு மூன்று நாட்கள் இணையரின் கனவுக்காகக் காத்திருக்கும் அன்பும் அக்கறையும் நாம் அனைவரும் கற்றுக்கொள்ளவேண்டிய பாடம். இவரது இணையர் புவனேஸ்வரி மிகவும் அதிர்ஷ்டசாலி. உங்கள் வளர்ச்சிக்கு உறுதுணையாக இணையர் இருப்பதை பார்க்கையில் உள்ளபடியே மிகவும் மகிழ்ச்சியாகவும் பெருமையாகவும் இருக்கிறது” என்று பாராட்டினார். 

Advertisment

தொடர்ந்து பேசிய பொன் இருளன், இந்த முகாம் குறித்து பேஸ்புக்கில் பார்த்ததும் என் மனைவியிடம் தெரிவித்தேன். ஏற்கெனவே தையல், ஆரி ஒர்க் பயிற்சி பெற்றிருக்கும் அவருக்கு சுயதொழில் தொடங்கவேண்டும் என்பது நீண்ட நாள் கனவு. நம் ஊரில் இதுபோல் இலவச பயிற்சி நடப்பது இதுவே முதல் முறை. இது போன்ற பயிற்சிகளைப் பயிலவேண்டும் என்றால் மதுரை, திருச்சி சென்றுதான் பயில வேண்டும். அப்படியான சூழலில் நமது பகுதியில் இது நடைபெறும்போது கண்டிப்பாகப் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் எனத் தோன்றியது. அதனால், முதலில் காரியாபட்டி பகுதியில் நடந்த பயிற்சி முகாமில் கலந்துகொள்ள திட்டமிட்டோம். ஆனால் சில காரணங்களினால் கலந்துகொள்ள இயலவில்லை. 

vdu-thangam-thennarasu-hus-wife-baby-1

இதையடுத்து, எங்கள் பகுதிக்கு அருகிலேயே நடைபெறுவதை அறிந்து இங்கு கலந்துகொண்டோம். அதனால், கடையை மூன்று நாள் மூடிவிட்டு குழந்தையைப் பார்த்துக்கொண்டேன். தொடர்ந்து, என் மனைவி  தையல் கடை வைக்கவும், சோப் தயாரித்து விற்கவும் தேவையான அனைத்து உதவிகளையும் செய்வேன். என்னுடைய ஒரு நாள் வருமானத்தைவிட, என் மனைவி யாரையும் சாராமல் தன்னம்பிக்கையோடு நிற்கப் பழகுவதும், பொருளாதார ரீதியாக வளர்வதும் முக்கியம் என நினைக்கிறேன். இனி தையல் கடை தொடங்குவதற்கும், சோப் தயாரித்து விற்பனை  செய்வதற்கும் தேவையான அனைத்து உதவிகளையும் செய்வேன்” என்றார்.

Advertisment

இது குறித்துப் பேசிய புவனேஸ்வரி, “இந்தப் பயிற்சியில் கலந்துகொள்ள என் கணவர் மிகவும் ஊக்கமளித்தார். அவர் குழந்தையை இங்கேயே பார்த்துக்கொண்டதால் நானும் ஒருமனதாகப் பயில முடிந்தது. இல்லையென்றால், குழந்தை சாப்பிட்டதோ இல்லையோ என்ற குழப்பத்தில் முழு கவனம் செலுத்தி இருக்க முடியாது. இந்த மூன்று நாள் பயிற்சிகள் அனைத்திலும் நான் கலந்துகொண்டேன். அவை மிகவும் தெளிவாகவும், புரியும்படியும் இருந்தது. இது போன்ற பயிற்சி இலவசமாக வழங்குவது பலருக்கு உதவிகரமாக இருக்கும். இதன் மூலமாக நானே சோப் தயாரித்து எங்கள் பகுதியில் விற்பனை செய்யலாம் எனத் திட்டமிட்டுள்ளேன். இந்தப் பயிற்சி வகுப்புகள் என் போல பல பெண்கள் தொழில்முனைவோராக வழி செய்யும் என நம்புகிறேன்”  என்றார்.