தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாளை திமுகவினர் வெகு விமரிசையாகக் கொண்டாடினர். தமிழகம் முழுவதும் கட்சி சார்பில் நலத்திட்ட உதவிகள், அன்னதானம், கலை நிகழ்ச்சிகள் என்று பல்வேறு முன்னெடுப்புகளை செய்திருந்தனர். அந்த வகையில் சிவகங்கையில் மாவட்ட சுற்றுச்சூழல் அணி சார்பில் கரகாட்டம், ஒயிலாட்டம், மயிலாட்டம், அசைவ உணவு விருந்து ஆகியவை கொண்டு வெகு விமரிசையாகக் கொண்டாடப்பட்டது.

Advertisment

இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக தமிழக கூட்டுறவுத் துறை அமைச்சர் பெரியகருப்பன் கலந்து கொண்டு தொண்டர்கள் மத்தியில் பேசினார். அதன்பின்னர் ஏற்கனவே ஆடி முடித்து அமர்ந்திருந்த கரகாட்டக் குழுவினர் மீண்டும் மேடைக்கு வரவழைக்கப்பட்டனர். அரைகுறை ஆடைகளுடன் ஆபாசமாக ஆடிய அவர்களை அமைச்சர் பெரியகருப்பன் புன்சிரிப்புடன் கண்டு ரசித்தார்.

Advertisment

பின்னர் அமைச்சர் மேடையைவிட்டு இறங்கி நிர்வாகிகளுடன் சேர்ந்து அவர்களருகே சென்று, இன்னும் நெருக்கமாக ஆடச் சொல்லி கண்டுகளித்தார். இதை யாரும் வீடியோ எடுக்கக் கூடாது என்று ஒரு “உடன்பிறப்பு” மிரட்டல் தொனியில் மைக் மூலம் அறிவிப்பு செய்தார். இது தொடர்பான வீடியோ தற்போது சமூக வலைதளங்களிலும் வெளியாகி பேசுபொருளாக மாறியிருக்கிறது.

இந்த சூழலில் தமிழகத்தில் கடந்த சில நாட்களாக தூத்துக்குடி, டெல்டா மாவட்டங்களில் பெய்த கனமழையால் பயிர்கள் சேதமடைந்தும், வீடுகள் இடிந்தும், குடியிருப்புப் பகுதிகளில் மழைநீர் தேங்கியும் விவசாயிகளும் பொதுமக்களும் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். இவை அனைத்தையும் வேடிக்கை பார்த்துக் கொண்டு உதயநிதியின் பிறந்தநாளில் குத்தாட்டம் ரசிப்பதற்கு மட்டும்  அமைச்சர்களுக்கு எப்படி நேரம் கிடைக்கிறது என்று எதிர்க்கட்சியினர் கேள்வி எழுப்பியுள்ளனர்.

Advertisment

இந்த வீடியோவைப் பகிர்ந்த தமிழக பாஜக, “அரைகுறை ஆடையுடன் பெண்களை அருகில் அழைத்து நடனமாட வைத்து கைதட்டி ரசிக்கும் தலைவர்களை நம்பி, தமிழகப் பெண்கள் எப்படி தங்கள் குறைகளைக் கூறுவார்கள்? சட்டம் ஒழுங்கு சீர்கேடு, சுகாதாரக் குறைபாடு, ஊழல் முறைகேடு எனத் தமிழகத்தின் அரசு இயந்திரமே பழுதடைந்து கிடக்கையில் முதல்வர் முதல் மூத்த அமைச்சர்கள் வரை அனைவரும் இப்படி கேளிக்கைகளில் மட்டுமே கவனம் செலுத்திக் கொண்டிருப்பது வெட்கக்கேடு” என்று கடுமையாகச் சாடியுள்ளது.