கோப்புப்படம்
ஈரோடு நந்தா கலை அறிவியல் கல்லூரியில் உங்க கனவ சொல்லுங்க என்ற முதலமைச்சரின் புதிய திட்டத்தை வீட்டு வசதித்துறை அமைச்சர் முத்துசாமி இன்று (09.01.2026) துவக்கி வைத்தார். அதன்பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், “இந்த புதிய திட்டத்தின் கீழ் ஒவ்வொரு வீட்டிற்கும் 2 நாள் தன்னார்வலர்கள் வருவார்கள். அப்போது வழங்கப்படும் படிவத்தில் பொதுமக்கள் கோரிக்கைகளை எழுதித் தரலாம். அதற்காக தனியாக ஒரு அடையாள எண் கொடுக்கப்பட்டு அட்டை வழங்கப்படும்.
உங்களுடன் ஸ்டாலின் திட்டத்தின் கீழ் ஈரோடு மாவட்டத்தில் 85 ஆயிரம் மனுக்கள் பெறப்பட்டன. அவைகளில் 90% நிறைவேற்றப்பட்டு விட்டது. பெரும்பாலான மக்கள் பட்டா கோரி விண்ணப்பித்தனர். தமிழக முதலமைச்சர் பேரூராட்சி, நகராட்சி, மாநகராட்சி சுற்றியுள்ள 8 கிலோமீட்டர் பகுதிகளில் பட்டா வழங்க இருந்த தடையை நீக்கி உள்ளார். அதனால் பல இடங்களில் மக்களுக்கு பட்டா கிடைக்கிறது. மேலும் ஏற்கனவே அரசு நிலத்தை உபயோகித்து வருபவர்களுக்கு அந்த இடத்தில் 2 சென்ட் நிலத்தை இலவசமாக வழங்கவும் எஞ்சிய நிலத்தை விலை கொடுத்து வாங்கிக் கொள்ளவும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இதன் மூலமும் பல மனுக்கள் வந்துள்ளன.
சமீபத்தில் ஈரோடு வந்த மத்திய வேளாண் துறை அமைச்சர் விவசாயிகளுக்கு அரசு ஒன்றும் செய்யவில்லை என கூறுவது தவறு. அந்தியூர் மற்றும் நம்பியூர் வட்டாரங்களில் பலர் அரசு நிலத்தை உபயோகித்து வந்தனர். அதற்காக கண்டிஷன் பட்டா வழங்கப்பட்டிருந்தது. நிபந்தனைகளை நீக்கி முழுமையாக அவர்களுக்கு பட்டா வழங்கப்படுகிறது. இதுபோன்று விவசாயிகளுக்கு பல நன்மைகளை இந்த அரசு செய்து வருகிறது. அரசு ஊழியர்களுக்கு வழங்கப்பட்டுள்ள புதிய பென்ஷன் திட்டத்தை முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி விமர்சிப்பதில் அர்த்தமில்லை.
/filters:format(webp)/nakkheeran/media/media_files/2026/01/09/eps-sad-2026-01-09-19-37-09.jpg)
ஏனென்றால் அரசு உழியர் சங்கங்கள் அதை வரவேற்று பாராட்டி உள்ளன. கடந்த 10 ஆண்டுகள் அதிமுக ஆட்சி இந்த விஷயத்தில் என்ன செய்தது?” எனக் கேள்வி எழுப்பினார். அதே சமயம் ஜனநாயகன் திரைப்படத்திற்கு சான்றிதழ் வழங்க உள்ள சர்ச்சை பற்றிய கேள்விக்கு திரைப்படத்தை பற்றி எனக்கு எதுவும் தெரியாது என்று கூறிவிட்டார். இந்நிகழ்ச்சியில் ஈரோடு எம்.பி. கே.இ. பிரகாஷ்,எம்.எல்.ஏ. வி.சி. சந்திரகுமார், கலெக்டர் எஸ். கந்தசாமி உட்பட பலர் கலந்து கொண்டனர்.
Follow Us