பிரதமர் மோதியால் வெளிநாட்டு முதலீடுகள் தமிழகத்திற்கு வருகின்றன என்று பாஜக முன்னாள் மாநிலத் தலைவர் மற்றும் முன்னாள் ஆந்திரப் பிரதேச ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் கூறியதற்கு, வீட்டு வசதி அமைச்சர் முத்துசாமி மறுப்பு தெரிவித்தார். ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தூய்மை இயக்கம் 2.0 திட்டத்தைத் தொடங்கி வைத்த பின்னர், செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:
அரசு அலுவலகங்கள் தூய்மையாக இருக்க வேண்டும் என்பதற்காக இத்திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. மதுக்கடைகளில் ரூபாய் 10 கூடுதலாக வசூலிப்பது, மது பாட்டில்களை மது அருந்துவோர் திருப்பித் தந்தால் அந்தப் பணத்தை திருப்பி வழங்குவதற்காகவே ஆகும். இதைத் தவறாகப் புரிந்துகொண்டு, கூடுதலாக வசூலிக்கப்படுவதாக சிலர் கூறுகின்றனர். கண்ணாடி பாட்டில்களை பொது இடங்களில் மக்கள் உடைப்பதால், பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படுகிறது. எனவே, சென்னை உயர்நீதிமன்றம் மது பாட்டில்களைத் திருப்பிப் பெறும் திட்டத்தை அமல்படுத்த உத்தரவிட்டது. அதன்படி, நீலகிரி மாவட்டத்தில் முதலில் இத்திட்டம் அமல்படுத்தப்பட்டு, சிறப்பாக செயல்படுகிறது. இதேபோல், அனைத்து மாவட்டங்களிலும் இத்திட்டம் அமல்படுத்தப்படுகிறது. மதுக்கடைகளில் காலி பாட்டில்களை வைக்க இடமில்லை என்று ஊழியர்கள் கூறினால், அவற்றைப் பெற வாகனங்கள் அனுப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. வெளியே மது பாட்டில்களை விற்கும்போது, அவை 50 பைசாவிற்கு மட்டுமே வாங்கப்படுகின்றன. அதற்குப் பதிலாக, 10 ரூபாய் டெபாசிட் செய்து, பாட்டிலைத் திருப்பித் தந்தால் அந்தத் தொகையைப் பெற்றுக்கொள்ளலாம். டெட்ராபேக் மூலம் மதுவை விற்பது குறித்து, பல்வேறு அரசுத் துறைகள் மற்றும் உயர்நீதிமன்றத்தின் ஆலோசனைகள் பெறப்படுகின்றன.
பிளாஸ்டிக் பாட்டில்களில் மது விற்பனை செய்ய முடியாது. பெருந்துறை சிப்காட்டில் 40 கோடி ரூபாய் மதிப்பில் நிலத்தடி நீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கப்படவுள்ளது. அங்கு பல ஆண்டுகளாக கழிவுநீர் வெளியேற்றப்பட்டு, அது நிலத்தில் படிந்துள்ளது. எனவே, நீரைச் சுத்திகரிக்க ஒரு பொது சுத்திகரிப்பு நிலையம் அமைக்கும் பணி தொடங்கப்பட்டுள்ளது. மேலும், ஓடைகளில் வரும் நீரின் உப்புத் தன்மையை ஆராய, இரண்டு இடங்களில் கண்காணிப்பு கருவிகள் பொருத்தப்பட்டுள்ளன. பெருந்துறை சிப்காட்டில், கடந்த பல ஆண்டுகளுக்கு முன்பு ஆதிதிராவிட மக்களுக்காக தாட்கோ மூலம் 200 தொழிற்கூடங்கள் அமைக்கப்பட்டன. அவை பயன்பாடு இல்லாமல் உள்ளன. இதற்கு முக்கிய காரணம், மக்களுக்கு உரிய கடன் வசதிகள் வழங்கி, தொழில் தொடங்க ஏற்பாடு செய்யப்படாததே ஆகும். இதைக் கவனத்தில் கொண்டு, அவற்றைப் புதுப்பிக்கவும், மக்கள் தொழில் தொடங்கவும் அரசு உரிய நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
பெருந்துறை சிப்காட்டில் உள்ள கழிவுகள் மற்றும் சுற்றுச்சூழல் மாசு குறித்து, தேசிய புவியியல் ஆராய்ச்சி மையம் ஏற்கெனவே ஆய்வு நடத்தி, அதன் அறிக்கையை அரசிடம் சமர்ப்பித்துள்ளது. அந்த அறிக்கையின் மீது உரிய கவனம் செலுத்தப்படும். ஈரோடு சிக்கையா அரசு கல்லூரியில் முதற்கட்டமாக ஐஏஎஸ் பயிற்சி மையம் அமைக்கப்படவுள்ளது. இதற்காக, வரும் 29-ம் தேதி டெண்டர் கோரப்பட உள்ளது. தரைத்தளம் மற்றும் முதல் தளம் கட்டுவதற்கு முடிவு செய்யப்பட்டுள்ளது. இருப்பினும், மையத்தைப் பயன்படுத்த விரும்புவோரின் எண்ணிக்கையை அறிய, சிஇஓ மூலம் ஒரு கணக்கெடுப்பு நடத்தப்படும். அதிகளவு மாணவர்கள் மையத்தைப் பயன்படுத்த விரும்பினால், கூடுதலாக இரண்டாவது தளமும் கட்டப்படும்.
தமிழக முதலமைச்சர் வெளிநாடுகளுக்குச் சென்று தொழில் முதலீடுகளைப் பெற்று, தொழில் வளர்ச்சிக்கு ஊக்கமளிக்கிறார். பாஜகவின் தமிழிசை சௌந்தரராஜன் போன்றவர்கள், மோதியால் தொழில் முதலீடு வந்ததாகக் கூறுவது தவறு. அப்படி இருந்தால், முதலமைச்சர் வெளிநாடு செல்வதற்கு முன்பே அந்த முதலீடுகள் தமிழகத்திற்கு வந்திருக்க வேண்டும். வெளிநாடுகளில் வசிக்கும் தமிழர்களின் முதலீடுகளும் தற்போது பெறப்பட்டுள்ளன. பாஜக முன்னாள் தலைவர் கூறியபடி, 263 திமுக தேர்தல் வாக்குறுதிகள் அரசால் கைவிடப்படவில்லை. அவற்றை அடுத்த ஆறு மாதங்களில் நிறைவேற்றுவோம். இவ்வாறு அவர் கூறினார்.
நிகழ்ச்சியில் ஈரோடு எம்பி பிரகாஷ், எம்எல்ஏ சந்திரகுமார், மேயர் நாகரத்தினம், மாவட்ட வருவாய் அலுவலர் சாந்தகுமார் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.