தமிழக வெற்றிக் கழகத்தின் 2வது மாநில மாநாடு நேற்று (21.08.2025) மதுரை மாவட்டம் பாரபத்தி கிராமத்தில் பிரமாண்டமாக நடைபெற்றது. சுமார் 2.5 லட்சத்திற்கும் மேற்பட்ட தொண்டர்கள் பங்கேற்ற மாநாட்டில் விஜய்யின் பேச்சு தற்போது தமிழக அரசியலில் பேசுபொருளாக மாறியுள்ளது. குறிப்பாக திமுக, பா.ஜ.க ஆகிய இரண்டு கட்சிகளை கடுமையாக விமர்சித்து பேசியிருந்தது தற்போது தமிழக அரசியலில் விவாதப்பொருளாக மாறியுள்ளது.

Advertisment

இந்த மாநாட்டில் பேசிய தவெக தேர்தல் பிரசார மேலாண்மை பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனா, “அண்ணா அவர்களுடைய குறிக்கோளை கலைஞர் தன்னுடைய குடும்பத்திற்காகவும், தன்னுடைய ஊழலுக்கவும் திமுக கட்சியை மாற்றிய பொழுது எம்ஜிஆர் உருவானார். இன்றைக்கு தமிழகத்தை ஆண்டு கொண்டிருக்கின்ற மு.க.ஸ்டாலின் தன்னுடைய தந்தையிடம் இருந்து ஒரு பாடத்தை கற்றுக் கொண்டார். என்ன பாடம் என்றால். கலைஞர்  தன்னை சுற்றி இருக்கக்கூடிய 10 குடும்பங்களுக்கு ஒரு மிகப்பெரிய ஊழல் சாம்ராஜ்யம் உருவாக்கினார். ஆனால் இன்று தமிழக முதல்வர் அந்த 10 குடும்பத்தை ஒழித்து விட்டு தன்னுடைய தன்னுடைய மருமகன் தன்னுடைய மகன் என்கின்ற ஒரு குடும்பமாக ஊழலை உருவாக்கி உள்ளார்.

சமூக நீதியை மறந்து தமிழகத்தில் முதன் முதலில் ஒரு சமூக நீதிக்காக ஒரு சட்டம் கொண்டு வந்தார்கள். ஆனால் இங்கு சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த மாட்டார்கள். ஏனென்றால் அதுதான் பிஜேபியின் உறவு. அதன் பிறகு  முதல்வர் சமூகநீதியை மறந்தார். சாதி அரசியலை உருவாக்கினார். ஊழலை உருவாக்கினார். இன்று மதுரை மண்ணில் இருக்கக்கூடிய அமைச்சர் மூர்த்தி இந்த மாநாட்டிற்கு எத்தனை தடைகளை உருவாக்கினார் தெரியுமா? அத்தனை தடைகளையும் உடைத்து இங்கு இருக்க கூட்டம் தான் நமது தமிழக வெற்றிக் கழகத்தின் கூட்டம். மூர்த்தி என்ன சமூக நீதி காவலரா? என்றைக்கோ அண்ணாவின் குறிக்கோளிலிருந்து திமுக விலகி விட்டது” என்று பேசினார்.

தவெக மாநாட்டிற்கு இடையூறு கொடுத்ததாக ஆதவ் அர்ஜுனா குற்றம் சாட்டியிருந்த நிலையில் அதற்கு அமைச்சர் மூர்த்தி பதிலளித்துள்ளார். மதுரையில் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய அமைச்சர் மூர்த்தி, “தவெக மாநாட்டுக்கு எந்த இடையூறும் நாங்கள் செய்யவில்லை. நேற்று காலை 6 மணியில் இருந்து மாலை வரைக்கும் என்னுடைய தொகுதியைச் சார்ந்த ஆய்வுக் கூட்டம் நடந்துக் கொண்டிருக்கிறது. எதிரிக்குக் கூட நாங்களோ எங்கள் முதல்வரோ அந்த மாதிரி வேலைகளை எந்த காலத்திலும் செய்வதில்லை. இந்த சில்லித்தனமாக வேலைகளை எல்லாம் எந்த காலத்திலும் திமுக ஒரு போதும் செய்யாது. அவர் சொல்வது மாதிரி இடையூறுகளை எல்லாம் திமுக தொண்டன் கூட அந்த பணியை செய்ய மாட்டான். திமுக தொண்டர்கள் குறித்து அவர்கள் உண்மைக்கு மாறான செய்தியை சொல்லி இருக்கிறார்கள்” எனக் கூறினார்.