கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் நகர திமுக சார்பில் ஓரணியில் தமிழ்நாடு தீர்மானம் ஏற்பு பொதுக்கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் நகர செயலாளர் கே.ஆர்.செந்தில்குமார் தலைமை வகித்தார். மாநில பொதுக்குழு உறுப்பினர் த.ஜேம்ஸ்விஜயராகவன் வரவேற்றார். மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் ஜி.கார்த்திகேயன், பொறியாளர் அணி அப்பு சந்திரசேகர், மாணவரணி அப்பு சந்தியநாராயணன், நகர துணை செயலாளர்கள் பா.பாலசுப்பிரமணியன், ஆர்.இளங்கோ, விஜயா ரமேஷ் தொழில்நுட்ப அணி ஏ.ஜாபர் அலி உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில் மாவட்டச் செயலாளரும், வேளாண்மை மற்றும் உழவர்நலத்துறை அமைச்சருமான எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் பேசியது, “திமுக தொண்டர்கள், கொள்கை வீரர்களாக உள்ளனர். கரோனா காலத்தில் எதிர்கட்சியாக இருக்கும் போது 10 ஆண்டு காலம் திமுகவினர் கடுமையாக உழைத்தார்கள். நாடே முடங்கியிருந்த போது களத்தில் இறங்கி திமுகவினர் பொதுமக்களுக்கு காய்கறிகள் உள்ளிட்ட பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கினர். அதன் பிறகு மு.க.ஸ்டாலின் ஆட்சிக்கு வரவேண்டும். அவர் வந்தால்தான் நல்லது என மக்கள் முடிவெடுத்தார்கள். தற்போது படக் கம்பெணிகாரர்கள் வந்துள்ளார்கள். கரோனாவின் போது வெளியில் வராதவார்கள், மக்களை பார்க்காதவர்கள். தற்போது தேர்தல் வருவதால் சுந்தரா டிராவல்ஸ் போன்று பச்சை பேருந்தில் வருகிறார். மற்றொறுவர் காவி பேருந்தில் வருகிறார். முதல்வர் ஸ்டாலின் மக்களை பார்க்கிறார். மனுக்களை பெற்று உரிய நடவடிக்கை எடுத்து வருகிறார். திமுக ஆட்சி பொறுப்பேற்ற பிறகு 1 கோடியே 15 லட்சம் பெண்கள் ஆயிரம் ரூபாய் தொகையை மாதம் மாதம் பெறுகின்றனர்.
பாமக அன்புமணி பச்சை பொய் பேசுகிறார். அப்பாவிற்கு துரோகம் செய்தவர். அவர் மக்களுக்கு என்ன செய்தார்?. பதவிக்காக முகவரியையே மாற்றி கட்சியை கைப்பற்றியவர் திமுகவை பற்றி பேச என்ன தகுதி உள்ளது. திமுக கூட்டணியில் இருந்த போதுதான் அன்புமணி அமைச்சரானார். தலித் எழில்மலை, பொன்னுசாமி ஆகியோர் திமுக கூட்டணியின் போது மத்திய அமைச்சர்கள். மக்களுக்கு வாழ்வாதாரத்திற்கும், மின் தேவைக்குதான் என்.எல்.சி. சுரங்கத்திற்கு நிலம் கையகப்படுத்தப்பட்டது. நிலம் கொடுத்த விவசாயிகள், அதிக தொகை பெற்றுள்ளனர். அவர் அமைச்சராக இருந்தபோது இந்த என்.எல்.சி.யை பற்றி தெரியாதா? அரசியலுக்கு பொய்யை மட்டுமே பேசி வருகிறார்.
அரசு காலை சிற்றுண்டி திட்டத்தில் 20 லட்சம் மாணவர்கள் பயன்பெறுகின்றனர். புதுமை பெண் திட்டத்தின் மாணவியர்கள் பயன்பெறுகின்றனர். சிதம்பரம் நகரத்தில் ரூ.400 கோடிக்கு திட்டப்பணிகள் நடைபெற்றுள்ளது என அமைச்சர் எம்ஆர்கே.பன்னீர்செல்வம் தெரிவித்தார். கூட்டத்தில் திமுக மாநில மாணவரணி செயலாளர் ஆர். ராஜீவ்காந்தி சிறப்புரையாற்றினார். தேர்தல் பணிக்குழு செயலாளர் இள. புகழேந்தி, ஒன்றிய செயலாளர்கள் ஏ.முத்துசாமி, தங்க.ஆனந்தன், முத்து.பெருமாள், ஏ.எஸ்.மதியழகன், எம்.மனோகரன், ஆர்.கலையரசன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். கூட்டத்தில் கலந்துகொண்ட அனைவரும் ஒரணியில் தமிழ்நாடு தீர்மானம் தீர்மானம் வாசிக்கப்பட்டது. இதனை அனைவரும் திரும்ப வாசித்து உறுதிமொழியை ஏற்றுக்கொண்டனர்.