தமிழக வேளாண் மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் கடலூரில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில், “செப்டம்பர் 15ஆம் தேதி அண்ணா பிறந்த நாளில் திமுக கடலூர் கிழக்கு மாவட்டத்தில் உள்ள 1284 வாக்குச்சாவடிகளிலும் திமுக சார்பில் தமிழகத்தை தலை நிமிர வைப்போம் என்ற உறுதிமொழி ஏற்கும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. இதில் கட்சியினர் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு உறுதிமொழி ஏற்க உள்ளார்கள். ஓர் அணியில் தமிழ்நாடு உறுப்பினர் சேர்க்கையில் திமுக கடலூர் கிழக்கு மாவட்டத்தில் 55 சதவீத உறுப்பினர் சேர்க்கை நடைபெற்றுள்ளது. மேலும் சேர்க்கை நடைபெறும்.
என்.எல்.சி. விவகாரத்தில் அன்புமணி ராமதாஸ் இரட்டை முகம் கொண்டு செயல்படுகிறார். என்எல்சியில் பாட்டாளி தொழிற்சங்கத்திற்கு அங்கீகாரம் கொடுங்கள் என கேட்கிறார். வெளியே என்எல்சியை மூட வேண்டும் என பேசுகிறார். அவர் வந்ததற்கு எதோ கில்லி போட்டுவிட்டு செல்கிறார். அவர் நடத்திய போராட்டத்தில் விவசாயிகள் யாரும் கலந்து கொள்ளவில்லை. என்எல்சி 3-வது சுரங்கம் என்ற பேச்சுக்கே இடமில்லை. கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பே முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது. அன்புமணி எந்த உரிமையை மீட்க வந்துள்ளார் என மக்களுக்கே தெரியும். எம்ஜிஆர் முதலமைச்சராக இருந்தபோது இட ஒதுக்கீடு போராட்டத்தில் பாமகவினர் மரத்தை வெட்டி போட்டு சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது 15 ஆயிரம் பேர் மீது வழக்கு பதியப்பட்டது. 21 பேர் குண்டடிப்பட்டு இறந்தனர். அதனைத் தொடர்ந்து ஆட்சிக்கு வந்த கலைஞர் தான் 15 ஆயிரம் பேரின் வழக்குகளை திரும்ப பெற்றும், உயிரிழந்த 21 பேரின் குடும்பங்களுக்கு மாத ஊதியமாக ரூ 3 ஆயிரம் வழங்கி அவர்களை மொழிப்போர் தியாகியாக மாற்றினார். மத்திய அமைச்சராக அன்புமணி ராமதாஸ் உள்ளிட்ட அவரது கட்சியினர் இருந்தபோது இட ஒதுக்கீடு போராட்டத்தில் உயிர் நீத்தவர்களுக்கும், வழக்கு வாங்கியவர்களுக்கும் இவர்கள் என்ன செய்தார்கள் என கூற வேண்டும். கடலூர் சிப்காட் விவகாரத்தில் கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. திமுக அரசு மக்களுடன் வாழ்ந்து வருகிறது.
விஜய்க்கு கூடிய கூட்டம் சினிமா செட்டப் தான். ஷூட்டிங் நடந்தாலும் இதுபோன்று கூட்டம் கூடும். கொரானா காலத்தில் 2 ஆண்டு காலம் விஜய் எங்கு சென்று ஒளிந்து கொண்டார். அப்போது அவர் வெளியே வரவில்லை. கொரோனாவையும் பொருட்படுத்தாமல் முதல்வர் உள்ளிட்ட திமுகவினர் தான் உயிரை பணயம் வைத்து மக்களுக்காக பணியாற்றினார்கள். இசைஞானி இளையராஜாவுக்கு நடைபெற்ற பாராட்டு விழாவில் மூத்த நடிகர்கள் கமலஹாசன் ரஜினிகாந்த் உள்ளிட்ட அனைவரும் தமிழக முதல்வரை பாராட்டுகின்றனர். ஏன் இளையராஜாவே பாராட்டுகிறார் என்றால் எந்த அளவிற்கு திமுக அரசு செயல்படுகிறது என்பது மக்களுக்கு தெரியும்.
சமூக நீதி பற்றி அன்புமணி பேசுவதற்கு தகுதியற்றவர். கடந்த 15 ஆண்டுகளாக இந்த கூட்டணியை வெற்றிகரமாக வைத்துள்ளோம். இதுவே சமூக நீதி தான். கலைஞர் காலத்தில் தொடங்கப்பட்ட கூட்டணி இன்றும் தொடர்கிறது. கடலூரில் மருத்துவக் கல்லூரி அமைக்க திமுக ஆட்சியில் மருத்துவ கல்லூரிக்கு கடலூர் அருகே எஸ் புதூரில் அடிக்கல் நாட்டப்பட்டது. அதன் பிறகு வந்த 10 ஆண்டுகால அதிமுக ஆட்சியில் இது திமுக கொண்டு வந்த திட்டம் என அதிமுக அமைச்சராக இருந்த சம்பத் சிதம்பரத்தில் நல்லா இயங்கிகொண்டிருந்த ராஜ முத்தையா மருத்துவக் கல்லூரியை கடலூர் மாவட்ட அரசு மருத்துக்கல்லூரி மருத்துவமனை ஆக மாற்ற நடவடிக்கை மேற்கொண்டார்கள்.
அதனை கேட்க முடியாத அன்புமணி. எய்ம்ஸ் மருத்துவமனைக்காக அடிக்கல் நாட்டியது குறித்து துணை முதலமைச்சர் உதயநிதி செங்கலை காட்டியது உலகத்தையே ஈர்த்தது. அது போல் தற்போது கடலூர் மாவட்ட மருத்துவக்கல்லூரிக்கு அடிகல் நாட்டியதை காட்டி புகழ் பெறலாம் என செங்கல்லை காட்டுகிறார்” எனப் பேசினார்.