கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே சி.முட்லூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் ரூ 14.33 கோடி மதிப்பீட்டில் புதிய பள்ளி கட்டிடம் கட்டுவதற்கான பணிகளுக்கு அடிக்கல் நாட்டவும், ரூ 221.48 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டுள்ள பள்ளிகளின் கூடுதல் வகுப்பறை கட்டிடங்களை திறந்து வைக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு கடலூர் மாவட்ட ஆட்சியர் சிபி ஆதித்யா செந்தில்குமார் தலைமை தாங்கினார். இதில் சிறப்பு அழைப்பாளராக தமிழக வேளாண் மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் கலந்து கொண்டு புதிய பணிகளுக்கு அடிக்கல் நாட்டியும், பணிகள் முடிந்த பள்ளி கட்டிடங்களையும் திறந்து வைத்தார். இதனைத் தொடர்ந்து கொடிபள்ளம் கிராமத்தில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் ரூ. 124.96 லட்சம் மதிப்பீட்டில் 4 கூடுதல் வகுப்பறை கட்டிடம் மற்றும் சுற்றுச்சுவர் கட்டுமான பணியினை அடிக்கல் எடுத்துவைத்து பணிகளை தொடங்கி வைத்தார்.

Advertisment

இதனைத் தொடர்ந்து தமிழக வேளாண் மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம் ஆர் கே பன்னீர்செல்வம் செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில், “கடலூர் மாவட்டத்தில் உள்ள கொடிப்பள்ளம், திருமுட்டம், ஸ்ரீநெடுஞ்சேரி, காட்டுமன்னார்கோயில், சி.முட்லூர், எடையார், மழவராயநல்லூர், குமராட்சி மற்றும் மேல்புவனகிரி ஆகிய பகுதிகளில் ரூ.14.33 கோடி மதிப்பீட்டில் புதியதாக கட்டப்படவுள்ள 47 கூடுதல் வகுப்பறை கட்டடங்கள், 3 மேல்நிலைப்பள்ளி ஆய்வகங்கள், 1 ஆண்கள் கழிவறை, 2 பெண்கள் கழிவறை மற்றும் 400மீட்டர் சுற்றுச்சுவர் ஆகிய பணிகளுக்கு அடிக்கல் நாட்டப்பட்டது. மேலும் கடலூர் அருகே  தூக்கணாம்பாக்கம் அரசு மேல்நிலைப்பள்ளியில் ரூ.221.48 இலட்சம் மதிப்பீட்டில் புதியதாக கட்டப்பட்டுள்ள கூடுதல் வகுப்பறை கட்டடங்கள் திறந்துவைக்கப்பட்டுள்ளது.

பள்ளிகளில் கல்வி குறித்து மாவட்ட ஆட்சியர் உள்ளிட்ட ஆசிரியர்களின் வழிகாட்டுதல், விழிப்புணர்வு நிகழ்ச்சி மூலம் தேர்வு விழுக்காட்டில் 23 வது இடத்தில் இருந்த கடலூர் மாவட்டம் தற்போது முன்னேறி வந்துள்ளது. இதற்கு முதல்வருக்கு மாவட்டத்தின் மக்களின் சார்பாக நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். அப்பா, மகன் சண்டையில் கட்சியை யார் கைப்பற்றுவது குறித்து அன்புமணி டிராமா போட்டு வருகிறார். உரிமையை மீட்க போகிறேன் என தவறான செய்தியை பரப்புவதற்காக தான் பேசி வருகிறார். அன்புமணி மத்திய அமைச்சராக பொறுப்பேற்ற பிறகு தான் வெளியுலகத்திற்கு வந்தார். எம்ஜிஆர் ஆட்சி காலத்தில் ராமதாஸ் இட ஒதுக்கீடு கேட்டு போராட்டத்தில் ஈடுபட்டார். அப்போது 18 ஆயிரம் பேர் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டது.  21 பேர் குண்டடிப்பட்டு உயிரிழந்தார்கள் அவர்களுக்கு எம்ஜிஆர் ஆட்சி காலத்தில் எந்த ஒதுக்கீடும் வழங்கவில்லை. அதன் பிறகு ஆட்சிக்கு வந்த கலைஞர் தான் மிகவும் பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு இட ஒதுக்கீடு வழங்கி அந்த அனைத்து வழக்குகளையும் ரத்து செய்தார்.

பின்னர்  உயிர் இழந்த 21 பேரை மொழிபோர் தியாகிகளாக அறிவித்து அப்போதே அவர்களின் குடும்பங்களுக்கு மாதம் ரூ 3 ஆயிரம் கிடைக்க உதவி செய்தார். இந்த வழக்கை ரத்து செய்யவில்லை என்றால் பல பேர் தண்டனை பெற்று இருப்பார்கள். அவர்கள் பொருளாதாரம் சீரழிந்து போயிருக்கும். குடும்பங்கள் நடுத்தெருவில் நின்றிருக்கும். இவர்களை பாதுகாத்தது திமுக அரசு தான். அதன் பிறகு அந்த 21 பேருக்கும் நினைவு மண்டபம் அமைத்து முதல்வரே திறந்து வைத்துள்ளார். அன்புமணியும், ராமதாசும் உயிர் இழந்தவர்களின் படத்திற்கு இடஒதுக்கீடு என்று ஒவ்வொரு ஆண்டும் மாலை மட்டும் போட்டுவிட்டு வந்து விடுவார்கள். அவர்களுக்கு மத்திய அமைச்சராக இருந்தபோது என்ன செய்தார்கள் என்பதை அன்புமணி கூறவேண்டும். 

Advertisment

anbumani-mic-pro

அதேநேரத்தில் வயதான அப்பாவை பாதுகாப்பது மகனின் கடமை அதனை செய்ய அன்புமணி தவறுகிறார். நான் எங்க அம்மாவை சாகும் வரை வீட்டில் வைத்து அவர்களுக்கு தேவையான அனைத்து வசதிகளை செய்து கொடுத்தேன். பெத்த கடமையை மகன் செய்ய வேண்டும். பெத்த கடமையை நிறைவேற்றாமல் அரசியலுக்காக தவறாக பேசி வருகிறார். இதற்கெல்லாம் பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை. தமிழக முதல்வர் மக்களோடு மக்களாக வாழ்ந்து வருகிறார். தற்போது உரிமையை மீட்க போகிறோம் என சினிமா சூட்டிங் போல் செய்து வருகிறார்கள் அவர்கள் உரிமையை மீட்க போகிறார்களா? சொத்தை மீட்க போகிறார்களா? என மக்களுக்கு தெரியும். எடப்பாடி பழனிச்சாமி செய்யாத திட்டத்தை தமிழக முதல்வர்  தாய்மார்களுக்கு மகளிர் உரிமை தொகை திட்டம், முதியோர்களுக்கு தாயுமானவர் திட்டம்,  மாணவர்களுக்கு நான் முதல்வன் உள்ளிட்ட பல்வேறு திட்டத்தை நிறைவேற்றி வருகிறார். இதனால் தமிழக மக்கள் முதல்வரை வாழ்த்தி வருகிறார்கள்.

கலைஞர் இறக்கும் வரை திமுக தலைவராக தான் இறந்தார். கட்சியின் செயல் தலைவராக இருந்து தான் முதல்வர் பணியாற்றினார். அதன் பிறகு தான் தலைவராக பொறுப்பேற்று பணியாற்றி வருகிறார். கலைஞர் உயிருடன் இருந்தவரை அந்த தலைவர் பதவிக்கு முதல்வர் ஆசைப்படவில்லை. இதுதான் திராவிட முன்னேற்ற கழகம்” என கூறினார். இந்நிகழ்ச்சியில் காட்டுமன்னார்கோவில் சட்டமன்ற உறுப்பினர் சிந்தனைச் செல்வன், திமுக ஒன்றிய செயலாளர்கள் மனோகரன், சங்கர், அண்ணாமலைநகர் பேரூராட்சி மன்ற தலைவர் பழனி வருவாய்த் துறையினர் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர்.