கடலூர் மாவட்டம் சிதம்பரம் அம்பலத்தாடி மட தெரு நியாய விலைக் கடையில் பொதுமக்களுக்குப் பொங்கல் தொகுப்பு வழக்கு நிகழ்ச்சி நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் சிபி ஆதித்யா செந்தில்குமார் தலைமை தாங்கினார். சிதம்பரம் நகர் மன்ற செந்தில்குமார், சிந்தனைச் செல்வன் எம்.எல்.ஏ., கூட்டுறவுத்துறை இணை பதிவாளர் இளஞ்செல்வி ஆகியோர் முன்னிலை வகித்தனர். தமிழ்நாடு அரசு நியாய விலை கடை பணியாளர் சங்க மாநில தலைவர் ஜெயச்சந்திரன் ராஜா வரவேற்றார்.

Advertisment

இதில் வேளாண் மற்றும் உழவர் நலத்துறை  எம்ஆர்கே. பன்னீர் செல்வம் சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்று பொதுமக்களுக்குப் பொங்கல் தொகுப்பு வழங்கி பேசினார். நகராட்சி ஆணையர் மல்லிகா, பொறியாளர் சுரேஷ், கவுன்சிலர்கள் ஜேம்ஸ் விஜயராகவன், அப்பு சந்திரசேகரன், தாரணி, புகழேந்தி மற்றும் திமுக நிர்வாகிகள் பாலசுப்பிரமணியம் இளங்கோவன் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர். இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர், “அதிமுகவில் சின்ன மாம்பழத்தைக் கூட்டணியில் சேர்த்துக் கொண்டார்கள், மாம்பழம் உண்டா இல்லையா என்பது மக்கள் கையில்தான் இருக்கிறது. அவர்கள் கூட்டணி சேர்க்கவில்லை, நபர்களின் எண்ணிக்கையைத் தான் சேர்த்துக் கொண்டு இருக்கிறார்கள். பாட்டாளி மக்கள் கட்சியை ராமதாஸ் ஆரம்பித்தார், இவற்றை மக்கள் புரிந்து கொள்வார்கள். 

Advertisment

அதிமுக ஆட்சியில் 20 ஆண்டு காலமாக ஓய்வு ஊழியர்களுக்கு வழங்கப்படாமல் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சலுகைகள், தற்போது திமுக ஆட்சியில் வழங்கப்பட்டு வருவது அவர்களுக்கு எரிச்சலாகத் தான் இருக்கும். எடப்பாடி பழனிசாமியைப் பற்றி மக்களுக்குத் தெரியும். ஏதாவது பொய் சொல்வதே இவர்கள் வேலை. தமிழக முதலமைச்சரின் மீது மக்களுக்கு நம்பிக்கை இருக்கிறது. அதைப் போல் அரசு ஊழியர்களும் நம்பிக்கையுடன் இருக்கிறார்கள். திமுகவுடன் இருக்கும் கூட்டணிக் கட்சிகள் கடந்த 15 ஆண்டுகளாகத் தொடர்ந்து இருக்கிறோம். எங்களுக்குள் எந்த பிரிவு வராது, பணத்துக்காகக் கூடும் கூட்டணி அவர்கள், எங்கள் கூட்டணி கொள்கை கூட்டணி” என்றார். பின்னர் அவர் வல்லம்படுகை, குமராட்சி, குறிஞ்சிப்பாடியில் பொதுமக்களுக்குப் பொங்கல் தொகுப்பினை வழங்கினார்.