மத்தியப் பிரதேசம் மற்றும் ராஜஸ்தானில், தமிழகத்தில் தயாரிக்கப்பட்ட இருமல் மருந்தைக் குடித்த 20 குழந்தைகள் பரிதாபமாக உயிரிழந்தனர். இதன் எதிரொலியாகத் தமிழக மருந்து கட்டுப்பாட்டுத் துறைக்கு மத்தியப் பிரதேச சுகாதாரத்துறை தகவல் அனுப்பி இருந்தது. இதனையடுத்து காஞ்சிபுரம் மாவட்டம் சுங்குவார்சத்திரத்தில் உள்ள சம்பந்தப்பட்ட மருந்து உற்பத்தி நிறுவனத்தில் இது தொடர்பாக மருந்தாளர்கள் ஆய்வு மேற்கொண்டனர். இந்த சோதனையில் விதிகளை மீறி எத்திலீன் கிளைக்கால் என்ற நச்சுப் பொருள் இருமல் மருந்தில் கலப்படம் செய்யப்பட்டு இருப்பது உறுதி செய்யப்பட்டது. 

Advertisment

இதனைத் தொடர்ந்து மருந்து உற்பத்தி தொழிற்சாலைக்கு அதிகாரிகள் சீல் வைத்தனர். அதே சமயம் இந்த இருமல் மருந்தைப் பொதுமக்கள் யாரும் பயன்படுத்த வேண்டாம் என எச்சரிக்கையும் விடுக்கப்பட்டது. இத்தகைய சூழலில் தான் சம்பந்தப்பட்ட மருந்து தயாரிப்பு நிறுவனத்தின் உரிமையாளர் ரங்கநாதன் என்பவரை மத்தியப் பிரதேச போலீசார் கைது செய்தனர். சென்னை போலீசார் உதவியுடன் கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாகவும் தகவல் வெளியாகியிருந்தது. முன்னதாக கேரளா உள்ளிட்ட பல மாநிலங்களில் இந்த இருமல் மருந்து விற்பனைக்கு அம்மாநில அரசுகள் தடை விதித்திருந்தது குறிப்பிடத்தக்கது. 

Advertisment

cold-trip-ranaganathan

இந்நிலையில் இருமல் மருந்து விவகாரத்தில் 2 அதிகாரிகள் சஸ்பெண்ட் செய்யப்பட்டிருப்பதாக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் சென்னை ஈக்காட்டுதாங்கலில் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசுகையில், “இந்த மருந்தில் நச்சுத்தன்மை எந்த அளவுக்கான கலப்பு இருக்கிறது என்பதை உறுதி செய்துவிட்டு உடனடியாக 3ஆம் தேதியில் இருந்தே ஸ்டாப் ப்ரொடக்ஷன் ஆர்டர் (உற்பத்தியை நிறுத்த) கொடுத்துவிட்டோம். அதோடு அந்த கம்பெனியில் மருந்து தயாரிப்பதற்கு அனுமதி தரவில்லை. இது மட்டுமல்லாது குளோசர் ஆர்டரும் (ஆலையை மூடவும்) கொடுத்துவிட்டோம். 

இது குறித்து 10 நாள் கழித்து நடவடிக்கை எடுக்க வேண்டும். இதற்கு இடையில் நேற்றைக்கு முன்தினம் ஏழாம் தேதி ஒரு கிரிமினல் ஆக்ஷன் தொடர்பாக சம்பந்தப்பட்ட உரிமையாளருக்கு ஒரு நோட்டீஸ் கொடுக்க சென்றோம். ஆனால் நோட்டீசை அவர் வாங்குவதற்கு ஆட்கள் இல்லை. இந்நிலையில் நோட்டீசை சுவரில் ஓட்டிவிட்டார்கள். இந்நிலையில் இரவு அவர் கைது செய்யப்பட்டிருக்கிறார். அது மட்டுமல்லாமல் சம்பந்தப்பட்ட வட்டாட்சியர் அவரை கம்பெனிக்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்துவார்கள். இவ்வாறு விசாரணை நடத்தி இந்த நச்சுத்தன்மை உள்ள இந்த பொருள் கலப்புக்குக் காரணத்தைக் கேட்பார்கள். அதன்படி அவர்களுடைய அந்த பதிலுக்குப் பிறகு நிரந்தரமாக கம்பெனியை மூடுவதற்கு உரிய நடவடிக்கை எடுக்கப்படும்” எனத் தெரிவித்தார்.

Advertisment