தமிழக சட்டப்பேரவையின் 3ஆம் நாள் கூட்ட நிகழ்வுகள் இன்று (16.10.2025 தொடங்கி நடைபெற்று வருகிறது. இதனையொட்டி அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் ‘கிட்னிகள் ஜாக்கிரதை’ என பேட்ச் அணிந்து சட்டப்பேரவைக்கு வந்திருந்தனர். அதனைத் தொடர்ந்து கிட்னி முறைகேடு தொடர்பாக சட்டப்பேரவையில் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானத்தைக் கொண்டு வந்தார்.
இந்த தீர்மானத்தின் மீதான விவாதத்தில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் பேசுகையில், “யாரும் அரசின் கவனத்தை ஈர்க்காமலேயே தமிழ்நாட்டின் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தொலைக்காட்சிகளில் இந்த செய்தியைப் பார்த்த உடனே எங்களை அழைத்து இது போன்ற ஒரு செய்தி பரவி வருகிறது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அறிவுறுத்தினார். அதன் அடிப்படையில் சிறுநீரக முறைகேடு நடப்பதாக வரப்பெற்ற புகார் குறித்து தமிழ்நாடு சுகாதார திட்ட இயக்குநர் மருத்துவர் எஸ். வினீத் விரிவான விசாரணை மேற்கொண்டு அறிக்கையினை அரசுக்குச் சமர்ப்பிக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்ளப்பட்டார்.
அதன்படி வினீத் தலைமையில் திட்ட இயக்குநர் தலைமையில் இணை இயக்குநர் சட்டம், மருத்துவம் மற்றும் நலப்பணிகள் இயக்ககம் பெரம்பலூர் மற்றும் அரியலூர் இணை இயக்குநர் மேற்பார்வையில் ஒரு குழு ஆய்வு மேற்கொண்டது. அதன்படி 17.07.2025 அன்று நாமக்கல் மாவட்டம் பள்ளிப்பாளையம் மற்றும் திருச்சி பகுதிகளில் கள ஆய்வை குழுவினர் மேற்கொண்டனர். முதற்கட்ட விசாரணையின் அடிப்படையில் திருச்சி மற்றும் பெரம்பலூரில் செயல்பட்டு வரும் மருத்துவமனைகளில் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்ய வழங்கப்பட்ட உரிமங்கள் மருத்துவ மற்றும் ஊரக நலப்பணிகள் இயக்குநரால் 23.07.2025ல் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டது.
மேலும் விசாரணை அலுவலர் இந்த இரு மருத்துவமனைகளில் தவறான முறையில் சான்றுகள் சமர்ப்பித்து மனித உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரியவருகிறது என்றும், மேலும் இவ்விசாரணையில் மனித உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை சட்ட நுணுக்கங்களை தவறாக பயன்படுத்தியதும் தெரிய வருவதாகவும் தெரிவித்துள்ளார். இந்த விசாரணையின் மூலம் அங்கீகார குழுவிற்கு பல்வேறு பரிந்துரைகள் திட்ட இயக்குநர் தமிழ்நாடு சுகாதாரத் திட்டம் வழங்கியுள்ளார். அதன்படி மனித உறுப்பு மாற்று சட்டம் 1994இன் படி சிறுநீரகம் மாற்றுதல் தொடர்பாக ஆவணங்களின் ஆய்வின் போது இரு மருத்துவமனைகளில் இருந்து பரிசீலனை செய்யப்பட்ட ஆவணங்களின் அடிப்படையில் இவ்விரு மருத்துவமனைகளுக்கும் வழங்கப்பட்ட சிறுநீரக உறுப்பு மாற்று உரிமைச் சான்றிதழை ரத்து செய்வதற்கு பரிந்துரை செய்யப்பட்டது.
சிறுநீரக முறைகேட்டில் ஈடுபட்டுள்ளதாக கண்டறியப்பட்ட இடைத்தரகர்களான ஸ்டான்லி மோகன் மற்றும் ஆனந்தன் ஆகிய இருவர் மீதும் பி.என்.எஸ். 2023ன் உரிய பிரிவுகளின் கீழ் எப்.ஐ.ஆர். பதிவு செய்ய பரிந்துரை செய்யப்பட்டது” எனத் தெரிவித்தார். முன்னதாக நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம், பள்ளிப்பாளையத்தில் உள்ள அன்னை சத்யா நகர் உள்ளிட்ட சுற்றுவட்டாரப் பகுதியில் வசிக்கும் ஏழை, எளிய விசைத்தறி தொழிலாளர்களைக் குறிவைத்து கிட்னி திருட்டு நடைபெறுவதாக பகீர் புகார் எழுந்தது குறிப்பிடத்தக்கது.