முதற்கட்டமாக 1000 ஒப்பந்த செவிலியர்கள் பணி நிரந்தரம் செய்யப்படுவார்கள் எனவும் படிப்படியாக மீதமுள்ள ஒப்பந்த செவிலியர்களுக்கு பணி நிரந்தர ஆணைகள் வழங்கப்படும் எனவும் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். அதாவது  ஒப்பந்த செவிலியர்களின் போராட்டத்தை முடித்துவைத்து அரசு சார்பில் வெளியிட்டுள்ள அறிக்கையில், “மருத்துவ பணியாளர் தேர்வாணையம் மூலம் பணியமர்த்தப்பட்ட ஒப்பந்த செவிலியர்கள் பணிநிரந்தரம் செய்யக் கோரி தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

Advertisment

இந்த செவிலியர்களின் போராட்டத்தைத் தொடர்ந்து, மருத்துவம் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஒப்பந்த செவிலியர் சங்கங்களுடன் 19.12.2025 மற்றும் 22.12.2025 ஆகிய நாட்களில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலினின் அறிவுறுத்தல்களின்படி பேச்சுவார்த்தை நடத்தினார். இதனைத் தொடர்ந்து,  அமைச்சர் மா.சுப்பிரமணியன்  செவிலியர்களின் போராட்டம் குறித்து முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கவனத்திற்கு எடுத்துச் சென்று, அவரது ஆலோசனையின் பேரில் மீண்டும் இன்று (24.12.2025) ஒப்பந்த செவிலியர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். 

Advertisment

இந்த பேச்சுவார்த்தையின் அடிப்படையில் தற்போது ஒப்பந்த செவிலியர்களாக பணிபுரிந்து வரும் செவிலியர்களை நிரந்தர பணியிடத்தில் பணி நியமனம் செய்யும்பொருட்டு, நிலுவையிலுள்ள பதவி உயர்வுகள் மற்றும் புதிய பணியிடங்கள் தோற்றுவிக்கப்பட்டு, சுமார் 1000க்கும் மேற்பட்ட ஒப்பந்த செவிலியர்கள் விரைவில் நிரந்தர பணியிடங்களில் பணிநியமனம் செய்யப்படுவார்கள் என தெரிவித்தார். கடந்த கால ஆட்சியில் 2015ஆம் ஆண்டு பணிநியமனம் பெற்ற 6,395 ஒப்பந்த செவிலியர்களில், 1,871 செவிலியர்கள் மட்டுமே 2020-ஆம் ஆண்டு வரை பணிநிரந்தரம் செய்யப்பட்டுள்ளனர். ஆனால். தி.மு.க. ஆட்சி பதவியேற்ற 2021ஆம் ஆண்டு முதல் கடந்த 4 வருடங்களில் 4,825 ஒப்பந்த செவிலியர்கள் படிப்படியாக பணிநிரந்தரம் செய்யப்பட்டுள்ளனர். 

tn-sec

கடந்த ஆண்டு (2024) மட்டும் மொத்தம் 1,693 ஒப்பந்த செவிலியர்கள் பணி நிரந்தரம் செய்யப்பட்டுள்ளனர். ஒப்பந்த செவிலியர்கள் பணியில் சேரும்போதே அவர்கள் குறைந்தபட்சம் 2 வருடங்கள் பணிபுரிந்து, அதன் பின்னர் ஏற்படும் காலிப் பணியிடங்களுக்கேற்ப அவர்கள் பணியமர்த்தப்படுவார்கள் என்ற விவரம் தெரியப்படுத்தப்பட்டுள்ளது. ஆயினும், இவ்வரசு பதவியேற்றதிலிருந்து எடுக்கப்பட்ட நிரந்தரப் பணியிடங்களில் பல்வேறு நடவடிக்கைகளின் மூலம் அதாவது. காலிப்பணியிடங்கள் மட்டுமல்லாது. அவ்வப்போது புதிய பணியிடங்களும் தோற்றுவிக்கப்பட்டு, அதன் மூலம் 4,825 ஒப்பந்த செவிலியர்கள் நிரந்தரப் பணியிடத்தில் பணியமர்த்தப் பட்டுள்ளனர். 

Advertisment

இவைத் தவிர, கடந்த நான்கு ஆண்டுகளில் செவிலியர் பணியிடத்திலிருந்து செவிலியர் கண்காணிப்பாளர் நிலை -2 இடத்திற்கு 1,998 செவிலியர்களும், செவிலியர் கண்காணிப்பாளர் நிலை -2 பணியிடத்திலிருந்து செவிலியர் கண்காணிப்பாளர் நிலை -1 பணியிடத்திற்கு 465 நபர்களுக்கும், செவிலியர் பணியிடத்திலிருந்து செவிலியர் போதகர் நிலை - 2 பணியிடத்திற்கு 62 நபர்களுக்கும் பதவி உயர்வுகள் வழங்கப்பட்டுள்ளது. இன்று நடைபெற்ற பேச்சுவார்த்தையில், அரசு மேற்கொண்ட நடவடிக்கைளின் காரணமாக ஒப்பந்த செவிலியர்கள் அரசின் முதற்கட்டமாக 1000 நிரந்தர பணியிடங்களில் ஒப்பந்த செவிலியர்கள் பணிநிரந்தரம் செய்யப்படுவார்கள் என்ற அரசின் முடிவினை ஏற்று, தங்களது போராட்டத்தை முடித்துக் கொள்கிறார்கள் என்ற மகிழ்ச்சியான தகவலை அமைச்சர் மா. சுப்பிரமணியன் அறிக்கையின் வாயிலாக தெரிவித்தார்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.