அண்ணா பெயரில் சித்த மருத்துவ பல்கலைக்கழகம் அமைப்பது தொடர்பாக கடந்த 2022ஆம் ஆண்டு சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டு ஆளுநருக்கு மசோதா அனுப்பப்பட்டது. இதனை ஆளுநர் ஆர்.என். ரவி திருப்பி அனுப்பியுள்ளதாக தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மா சுப்பிரமணியன் தெரிவித்திருக்கிறார். இது தொடர்பாக அவர் செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில், “ மருத்துவர்கள் சிவராமன், கண்ணன் போன்றவர்கள் வைத்த கோரிக்கையை ஏற்று சித்த மருத்துவத்திற்கு என்று ஒரு பல்கலைக்கழகம் வேண்டும் என்கின்ற கோரிக்கை முன் வைக்கப்பட்டது.
தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமையிலான இந்த (திமுக) அரசு பொறுப்பேற்ற உடனே அதை அறிவித்து சட்ட முன்வடிவு நிறைவேற்றி ஆளுநருக்கு அனுப்பி வைத்தார். ஆளுநருக்கு அனுப்பப்பட்டு நான்கு ஐந்து முறை திரும்பத் திரும்ப வந்தது. அப்போதெல்லாம் அவர் கேட்ட திருத்தங்களை எல்லாம் மீண்டும் மீண்டும் திருத்தம் செய்து அனுப்பபட்டது. இருப்பினும் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னால் 21.08.2025 என்று மீண்டும் ஒரு நான்கு திருத்தங்களோடு திருப்பி அனுப்பி இருக்கிறார். அதன்படி திருப்பி அனுப்பப்பட்ட அந்த கடிதம் இன்றைக்கு துறையின் செயலாளர்களால் சட்டத்துறைக்கு அனுப்பப்பட்டுள்ளது.
அந்த திருத்தங்களை சரி செய்து சட்டமன்றத்தில் வைத்துக் கொள்ளலாம் என்று தெரிவித்திருக்கிறார்கள். அந்த திருத்தங்கள் சரி செய்யும் பணி இந்த வாரத்தில் முடிவுக்கு வரும். எனவே எதிர்வரும் காலங்களில் எப்போது சட்டமன்றம் நடைபெற்றாலும் அந்த சட்டமன்றத்தில் இந்த சட்ட முன்வடிவு நிறைவேற்றுவதற்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் ஒப்புதலைப் பெற்று நிறைவேற்றுவோம் என்பதையும் தெரிவித்து கொள்கிறேன்” எனத் தெரிவித்தார்.