டிசம்பர் மாத இறுதியில் தமிழ்நாடு முதலமைச்சர் கள்ளக்குறிச்சி, விழுப்புரம் மாவட்டங்களுக்கு வருகை தர உள்ளதை ஒட்டி, சம்பந்தப்பட்ட மாவட்டங்களில் நடைபெற்று வரும் சுகாதாரத்துறை பணிகளை தமிழ்நாடு சுகாதாரத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் ஆய்வு செய்து வருகிறார்.
அதன்படி, கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூரில் உள்ள அரசு மருத்துவமனையை மாவட்ட தலைமை மருத்துவமனையாக தரம் உயர்த்தி ரூ.54 கோடி மதிப்பீட்டில் புதிய 300 படுக்கைகள் கொண்ட கட்டடம் கட்டப்பட்டு வருகிறது. இப்பணிகளை இன்று நேரில் பார்வையிட்ட அமைச்சர், ஏற்கெனவே இருந்த பழைய கட்டடத்தை ஆய்வு செய்தபோது மருத்துவமனை வளாகம் முழுவதும் அசுத்தமாக இருந்ததைக் கண்டார். உடனடியாக அங்கிருந்த மருத்துவர்களை அழைத்து, “மருத்துவமனை வளாகம் ஏன் இவ்வளவு அசுத்தமாக உள்ளது?” எனக் கேள்வி எழுப்பி கடுமையாகக் கண்டித்தார். தற்போது தூய்மைப் பணிகள் நடைபெற்று வருவதால் உடனடியாக சரி செய்யப்படும் என மருத்துவர்கள் விளக்கம் அளித்தனர்.
மேலும், மருத்துவமனையில் கவன குறைவாக நடந்துகொண்ட சில மருத்துவர்கள் மற்றும் செவியர்களையும் அமைச்சர் கடிந்துகொண்டார். அதே சமயம்.. இதுதானே உங்கள் வேலை.. இதையெல்லாம் சரி வர கவணிக்க மாட்டீர்களா.. என்று லெப்ட் ரைட் வாங்கினார். அனைவரும் ஒழுங்காக வேலையை பாருங்கள்..இல்லை என்றால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரித்தார்.
அதன் பின்னர் புதிதாகக் கட்டப்பட்டு வரும் மாவட்ட தலைமை மருத்துவமனை கட்டடப் பணிகளை அமைச்சர் நேரில் பார்வையிட்டார். இந்த மாத இறுதிக்குள் அனைத்துப் பணிகளும் முடிவடைந்து தமிழ்நாடு முதலமைச்சரால் திறந்து வைக்கப்பட உள்ள நிலையில், அமைச்சர் மா. சுப்பிரமணியன் கட்டடத்தையும் ஆய்வு செய்தார். அமைச்சரின் திடீர் ஆய்வால் மருத்துவமனை வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.
Follow Us