சென்னையில் நீலாங்கரை மற்றும் அடையாறு பகுதிகளில் கடந்த ஜனவரி மாதம் இறுதியில் ஏராளமான காகங்கள் கொத்துக் கொத்தாக இறந்து கிடந்தன. இந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. அதோடு ஆங்காங்கே காகங்கள் இறக்கும் சம்பவம் தொடர்ந்தன. அதே சமயம் , பறவைக் காய்ச்சல் காரணமாக இவ்வாறு காகங்கள் இறந்து வருகிறதோ என்ற சந்தேகம் மக்களிடையே இருந்து வந்தது. இதையடுத்து, இறந்த காகங்களின் மாதிரிகள் சேகரிக்கப்பட்டு, பரிசோதனைக்காகத் தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டது. 

Advertisment

இந்த சோதனையில் வெளியான முடிவுகள் அதிர்ச்சியை ஏற்படுத்தின. அதாவது, இறந்த காகங்கள் எச்5என்1 வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு, பறவைக் காய்ச்சல் ஏற்பட்டதன் காரணமாக காகங்கள் உயிரிழந்ததாகத் தெரிவிக்கப்பட்டது. இந்த தொற்று மனிதர்களுக்கும் பரவி விடக்கூடாது என்பதற்காக முன் எச்சரிக்கை நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருவதாகக் கூறப்படுகிறது. இதன் நீட்சியாக, பறவைக் காய்ச்சலால் இறந்த காகங்களை யாரும் தொட வேண்டாம் என எச்சரிக்கப்பட்டது. இந்நிலையில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் இன்று (10.02.02026) செய்தியாளர்களைச் சந்தித்தார். 

Advertisment

அப்போது அவரிடம் செய்தியாளர் ஒருவர், “கடந்த சில நாட்களுக்கு முன்பு அடையாற்றில் காகங்களுக்கு ஏற்பட்ட பறவைக் காய்ச்சல் மனிதர்களுக்குத் தொடர்ச்சியாகப் பரவல் இல்லை என்று சுகாதாரத்துறை கூறியது.  தற்போது சூழ்நிலை எப்படி உள்ளது. கண்காணிப்பு  பணிகள் எப்படி உள்ளது?” எனக் கேள்வி எழுப்பினார். அதற்கு அமைச்சர் மா. சுப்பிரமணியன், “பறவை காய்ச்சல் தொடர்பாக ஒன்றிய அரசு கூட எல்லா மாநில அரசுகளுக்கும்,  உலக சுகாதார நிறுவனத்தின் மக்கள் நல்வாழ்வுத்துறையில்  இருந்து நோட்டீஸ் அனுப்பி இருந்தார்கள்.  இது எல்லா மாநிலத்திலும் இருக்கின்ற மாதிரிதான் சொல்லி இருக்கிறார்கள். ஆனாலும் அந்த தகவல் வந்த உடனே பொதுச் சுகாதாரத் துறை, அந்த காகங்களோ அல்லது கோழி போன்ற பறவை இனங்களோ திடீரென்று இறந்தது என்றால், அதாவது காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டு இறந்து போனால் அவைகளைக் கண்டவர்கள்,  அதனை உடனடியாக அதை ஆழத் தோண்டி புதைக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டிருக்கிறார்கள். 

masu-press-meet-1
கோப்புப்படம்

அதில் கோழி ஏதாவது இறந்துவிட்டால், இறந்த கோழியை யாரும் சாப்பிட வேண்டாம் என்ற அறிவுறுத்தலும் விடுக்கப்பட்டுள்ளது. அதோடு கோழி இறைச்சியை உண்பவர்கள் நன்றாக சமைத்த உணவையே  உண்ண வேண்டும். ஆப் பாயில் எடுத்துக்க கூடாது என அறிவுறுத்தப்பட்டிருக்கிறது. தமிழ்நாட்டில் இந்த அறிவுறுத்தல், விழிப்புணர்வு மாவட்ட அளவிலான சுகாதார அலுவலர்கள் மிகச் சிறப்பாக செய்து கொண்டிருக்கிறார்கள். இந்த நிலையில் நேற்றைக்கு தலைமை செயலாளர்கள் கூட அனைத்து அலுவல்களுடனான ஒரு கூட்டத்தை நடத்தி இதில் ஏற்பட்டிருக்கிற முன்னேற்றம் குறித்து ஆய்வு செய்திருக்கிறார். 

Advertisment

அந்த வகையில் தமிழ்நாட்டை பொறுத்தவரை இந்த பறவை காய்ச்சலினால் ஏற்படுகிற பாதிப்புகள் மனிதர்களுக்கு தொற்றாது. அது தொற்றுநோய் அல்ல என்பது போன்ற விவரங்கள் தெரிவிக்கப்பட்டுள்ளது. இருந்தாலும் மக்கள் விழிப்புணர்வோடு இருக்க வேண்டும் என்கின்ற நிலையில் தான் தொடர்ந்து இந்த செய்திகள் சொல்லப்பட்டு வருகிறது” எனத் தெரிவித்தார்.