பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என தமிழக அரசை வலியுறுத்தி, தமிழ்நாடு முழுவதும் தொகுப்பு ஊதியத்தில் பணிபுரியும் 1,500க்கும் மேற்பட்ட ஒப்பந்த செவிலியர்கள் நேற்று (18-12-25) சென்னை சிவானந்தம் சாலையில் ஆர்ப்பாட்டம் செய்தனர். காலை தொடங்கிய இப்போராட்டம், மாலை 6 மணிக்கு மேலாக நீடித்தது.
அதனை தொடர்ந்து காவல்துறையினர், போராட்டம் நடத்திய செவிலியர்களை கைது செய்து பேருந்துகள் மூலமாக அவர்களை அழைத்துச் சென்று கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் இறக்கிவிட்டனர். ஆனால், செவிலியர்கள் அங்கு அமர்ந்து போராட்டம் நடத்தியதால், அவர்களை மீண்டும் கைது அருகில் உள்ள தனியார் மண்டபத்தில் அடைத்து வைத்தனர். இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், இது குறித்து எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றன.
இந்த நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் இன்று (19-12-25) செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது அவர், “காலிப் பணியிடங்கள் இருந்தால் அவர்களை பணியில் சேர்க்கலாம். ஆனால், காலிப் பணியிடங்கள் இல்லை என்பது தான் உண்மை. இந்த அரசு பொறுப்பேற்றதற்குப் பிறகு, ஒரே நேரத்தில் 1,200 புதிய பணியிடங்கள் உருவாக்கப்பட்டு வேலை வழங்கப்பட்டது. செவிலியர்களை புறக்கணிக்க வேண்டும் என்ற நோக்கம் இந்த அரசுக்கு இல்லை. போராட்டம் செய்யும் ஒப்பந்த செவிலியர்கள் இந்த அரசு வந்ததற்கு பிறகு வேலைக்கு வந்தவர்கள் இல்லை, அவர்கள் ஏறத்தாழ 9 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார்கள். வேலைக்கு வரும் போதே 2 வருடத்தில் பணி நிரந்தரம் வேண்டும் என்று உரிமை கொண்டாட முடியாது என்று அவர்கள் கையெழுத்திட்டு தான் வருகிறார்கள்.
எனவே, காலிப்பணியிடங்கள் உருவாவதைப் பொறுத்து இவர்களை சேர்க்கவில்லை. இந்த அரசு பொறுப்பேற்றப் பிறகு, 2021இல் உருவான 251 காலிப்பணியிடங்களில் அவர்களை நிரந்தரப்படுத்தியுள்ளோம். அதே போல் 2022இல் 678 பேர், 2023இல் 489 பேர், 2024இல் 1,694 செவிலியர்களுக்கு பணி நிரந்தப்படுத்தியுள்ளோம். 2025இல் சமீபத்தில் 502 பேரை பணி நிரந்தப்படுத்தியுள்ளோம். இப்போது கூட, 169 காலிப் பணியிடங்கள் உருவானது. அந்த 169 பேருக்கும் நேர்முகத் தேர்வு நடத்தப்பட்டு இன்னும் 2, 3 நாட்களில் பணி நிரந்தர ஆணைகளை வழங்க இருக்கிறோம். இந்த அரசு, இதுவரை 3,783 பேரை பணி நிரந்தரப்படுத்தியுள்ளது. இன்னும் 8,322 பேருக்கு பணி நிரந்தப்படுத்த இருக்கிறோம். ஒப்பந்த செவிலியர்களுக்கு சீனியாரிட்டி அடிப்படையில் தான் ஒவ்வொரு ஆண்டும் பணி நிரந்தரம் செய்யப்படுகிறது. இப்படிப்பட்ட சூழ்நிலையில் போராட்டம் நடத்துவது என்பது ஜனநாயக உரிமை. ஆனால், துறையில் அவர்கள் நியமனம் ஆகும்போது வாங்கின உத்தரவுகளையும், விதிமுறைகளை தெரிந்துகொண்டு போராட்டம் நடத்துவது நல்லது” என்று கூறினார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/media_files/2025/12/19/masub-2025-12-19-14-37-53.jpg)