Minister M. Subramanian instructs Do not use Coldrip cough syrup medicine
மத்தியப் பிரதேச மாநிலம் சிந்த்வாரா மாவட்டத்தில் 15 நாட்களுக்குள் 9 குழந்தைகள் சிறுநீரக் செயழிப்பு காரணமாக உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. மத்தியப் பிரதேசம் மட்டுமல்லாமல் அதற்கு அண்டை மாநிலமான ராஜஸ்தானிலும் இதே போன்ற 2 குழந்தைகள் மரணமடைந்தனர். ஆரம்பத்தில் சாதாரண காய்ச்சல் என்று கருதப்பட்டிருந்த நிலையில், அசுத்தமான இருமல் சிரப்களை உட்கொண்டதால் இந்த மரணங்கள் நிகழ்ந்திருக்கிறது என சுகாதாரத் துறை அதிகாரிகள் சந்தேகிக்கின்றனர். இந்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சியையும் அதிர்வலையையும் ஏற்படுத்தியுள்ளது.
குறிப்பாக மத்தியப் பிரதேசத்தில் இறந்த 9 குழந்தைகளில், 5 குழந்தைகள் கோல்ட்ரிப் என்ற சிரப்களை எடுத்துக் கொண்டதாகவும், 1 குழந்தைகள் நெக்ஸ்ட்ரோ சிரப்பை எடுத்துக் கொண்டதாகவும் கூறப்படுகிறது. இதனால், இருமல் சிரப்களை தீவிரமாக சோதனை செய்யப்பட்டு வருகிறது. இதனிடையே, தற்போது சளி, காய்ச்சல் போன்ற அறிகுறிகளுடன் பாதிக்கப்பட்ட 1,420 குழந்தைகள் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகின்றனர். இதனிடையே, காஞ்சிபுரத்தில் தயாரான இருமல் மருந்தை சாப்பிட்டு தான் ராஜஸ்தான் உள்ளிட்ட வடமாநிலங்களில் குழந்தைகள் உயிரிழந்ததாகப் புகார் எழுந்திருந்தது. இந்த விவகாரம் குறித்து விசாரணை நடைபெற்று வருகின்றது.
இந்த நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் இன்று (04-10-25) செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது அவர், “மருந்து கட்டுப்பாட்டு அலுவலர் தலைமையில் விசாரணை நடத்தப்படுகிறது. எந்த மாதிரியான மருந்து பயன்படுத்தினார்கள்? காலாவதியான மருந்துகளை அவர்களை பயன்படுத்தினார்களா என்பது குறித்து முழு விசாரணைக்கு உத்தரவிடப்பட்டிருக்கிறது. விசாரணையின் முடிந்த பின்னர் இது குறித்த விரிவான தகவல் தெரிவிக்கப்படும். விசாரணையின் முடிவில் எந்த மாதிரியான நடவடிக்கை எடுக்க முடியுமோ சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும். கோல்ட்ரிப் இருமல் மருந்தை குழந்தைகளுக்கு பயன்படுத்த வேண்டாம். அந்த சர்ச்சை தொடர்பான விசாரணை நடைபெற்று வருகிறது” என்று கூறினார்.
முன்னதாக, 2 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு இருமல் சிரப்களை வழங்கக்கூடாது என மத்திய அரசு உத்தரவிட்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.