பொதுமக்களுக்கு அரசு வழங்கும் சேவைகள் எளிமையாகக் கிடைக்கும் வகையில், அவர்கள் வசிக்கும் பகுதிக்கே சென்று குறைகளை நிவர்த்தி செய்யும் ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்டத்தை, கடந்த மாதம் 15-ம் தேதி முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தொடங்கி வைத்தார். இத்திட்டத்தின் மூலம் தமிழகம் முழுவதும் 10,000 முகாம்களை நடத்த திட்டமிடப்பட்டு, முதற்கட்டமாக 3,561 முகாம்கள் நிறைவடைந்துள்ளன.
இந்த முகாம்கள் இரண்டாம் கட்டமாக இன்று தொடங்கி, அடுத்த மாதம் 14-ம் தேதி வரை தமிழகத்தில் 2,500-க்கும் மேற்பட்ட இடங்களிலும், பெருநகர சென்னை மாநகராட்சியில் 148 இடங்களிலும் நடைபெறுகின்றன. அந்த வகையில், சென்னை மாநகராட்சிக்குட்பட்ட சைதாப்பேட்டை 142-வது வார்டில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாமை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் தொடங்கி வைத்தார்.
இதையடுத்து செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் மா. சுப்பிரமணியன், “இந்தியாவே திரும்பிப் பார்க்கும் வகையில் தமிழ்நாட்டில் பல்வேறு மகத்தான திட்டங்களை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் நிறைவேற்றி வருகிறார். அந்த வகையில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்டத்தை கடந்த ஜூலை 15-ம் தேதி முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
ஜூலை 15-ம் தேதி தொடங்கி நவம்பர் மாதம் வரை தமிழகம் முழுவதும் மொத்தம் 10,000 சிறப்பு முகாம்களை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. கடந்த இரு நாட்களுக்கு முன்பு வரை முதல் கட்டம் முடிந்துள்ளது. தமிழ்நாடு முழுவதும் நடைபெற்ற முகாம்களின் எண்ணிக்கை 3,561, பெறப்பட்ட மனுக்கள் 30 லட்சம். சென்னையைப் பொருத்தவரை, முதற்கட்டமாக 109 முகாம்கள் நடைபெற்று, இரண்டாம் கட்டமாக இன்று 148 இடங்களில் அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் 2,500-க்கும் மேற்பட்ட இடங்களில் இரண்டாம் கட்டமாக இன்று தொடங்கப்பட்டுள்ளது. சென்னையில் மட்டும் 148 இடங்களில் இந்த முகாம்கள் இன்று நடைபெறுகின்றன. முகாமில் பங்கேற்பவர்களுக்கு குடிநீர், சிற்றுண்டி உள்ளிட்ட அனைத்து வசதிகளும் செய்யப்பட்டுள்ளன. பொதுமக்களுக்கு எவ்வித இடையூறும் இல்லாமல், இடைத்தரகர்களை நாடாமல் முகாம்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. ஏற்கனவே இந்த அரசு, வீடு தேடி மருத்துவம், கல்வி உள்ளிட்ட அனைத்து வகையான சேவைகளையும் வழங்கி வருகிறது.
எடப்பாடி பழனிசாமி, ‘எங்கு போனாலும் ஆம்புலன்ஸ் குறுக்கிடுகிறது’ எனக் கூறுகிறார். பிரதான சாலையில் எடப்பாடி பழனிசாமி செல்லும்போது, 1,330 ஆம்புலன்ஸ்கள் தமிழ்நாடு முழுவதும் உயிர்காக்கும் சேவையில் ஈடுபடுகின்றன. ஆம்புலன்ஸ்கள் விரைந்து சென்று உயிரைக் காக்க வேண்டும். ஆனால், இவர் ஆம்புலன்ஸ் வரும் வழியில் கூட்டம் போட்டு, ‘நான் வரும் வழியில் ஆம்புலன்ஸ் வருகிறது’ என்று கூறுகிறார்.
அரண்டவன் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேய்’ என்ற பழமொழியைப் போல, எடப்பாடி பழனிசாமிக்கு ஆம்புலன்ஸைப் பார்த்தால் ஏதோ ஒன்று தெரிகிறது போலும். மருத்துவத்துறையில் பணியாற்றுவோர் தொண்டு செய்து கொண்டிருக்கின்றனர். ஆனால், அவர் மிரட்டல் தொனியில் பேசி வருகிறார். அநாகரிகமான பேச்சை இதோடு எடப்பாடி பழனிசாமி நிறுத்திக்கொள்ள வேண்டும். ஒரு முன்னாள் முதலமைச்சர், ‘ஓட்டுநர் நோயாளியாகச் செல்வார்’ என்று கூறுவது நல்லதல்ல. இதுபோன்ற போக்கை அவர் நிறுத்திக்கொள்ள வேண்டும். 108 ஆம்புலன்ஸ் சேவை போன்ற சிறப்பான மருத்துவ சேவை இந்தியாவில் வேறெங்கும் இல்லை. இப்படிப்பட்ட தமிழக அரசின் மருத்துவ சேவையைக் குறை கூறுவது, எடப்பாடி பழனிசாமியின் தரத்தைக் குறைத்துக்கொள்ளும் செயலாகும்” என தெரிவித்திருக்கிறார்.