தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின், சென்னையில் மாற்றுத்திறனாளிகள் மற்றும் மூத்த குடிமக்கள் ரேஷன் கடைக்கு வந்து பொருட்கள் வாங்க முடியாத சூழ்நிலையில் உள்ளதால், அவர்களின் குறைகளைப் போக்கும் வகையில், வீடு தேடி ரேஷன் பொருட்கள் வழங்கும் ‘தாயுமானவர் திட்டத்தை’ தொடங்கி வைத்தார்.
அதனைத் தொடர்ந்து, தமிழக வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம், சிதம்பரம் அருகே கடவாச்சேரியில் தாயுமானவர் திட்டத்தைத் தொடங்கி வைத்து, நடக்க முடியாத நிலையில் உள்ள 85 வயது முதிய தம்பதியருக்கு வீடு தேடி ரேஷன் பொருட்களை வழங்கினார். பின்னர், செய்தியாளர்களிடம் பேசிய அவர், தாயுமானவர் திட்டம் திமுக தேர்தல் அறிக்கையில் இடம்பெறாத அறிவிப்பு என்றும், இதனை முதல்வர் தாயுள்ளத்தோடு நிறைவேற்றியுள்ளார் என்றும் கூறினார். கடலூர் மாவட்டத்தில் 65,000 மாற்றுத்திறனாளிகள் மற்றும் முதியோர்கள் கண்டறியப்பட்டு, அவர்களுக்கு வீடு தேடி ரேஷன் பொருட்கள் வழங்குவதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
ரேஷன் கடைகள் தொலைவில் உள்ள பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள், குறிப்பாக மாற்றுத்திறனாளிகள், சிரமமின்றி பொருட்கள் பெறுவதற்கு வசதியாக, அவர்களுக்கு ரேஷன் பொருட்களை வீடு தேடி வழங்குவது குறித்து அதிகாரிகளுடன் ஆலோசித்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் உறுதியளித்தார்.
இதனைத் தொடர்ந்து, உசுப்பூர் ஊராட்சிக்குட்பட்ட தெற்கு தில்லைநாயகபுரத்தில், தேசிய நெடுஞ்சாலையோரம் மரத்தடியில் குடிசை அமைத்து வாழ்ந்து வரும் செல்லக்கண்ணு-மல்லிகா தம்பதியருக்கு ரேஷன் பொருட்களை வழங்கினார். அப்போது, அவர்கள் குழந்தைகள் இல்லாதவர்கள் என்றும், முன்பு கூலித்தொழில் செய்து வந்ததாகவும், தற்போது வேலைவாய்ப்பின்றி ரேஷன் அரிசி மற்றும் 100 நாள் வேலைத்திட்டத்தை நம்பி வாழ்ந்து வருவதாகவும் கண்ணீர் மல்கக் கூறினர். இதையடுத்து, அமைச்சர் மாவட்ட வருவாய் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சியரை அழைத்து, இவர்களுக்கு உடனடியாக வீட்டுமனை வழங்க ஏற்பாடு செய்ய உத்தரவிட்டார். அதன்படி, பெரியபட்டு கிராமத்தில் வீட்டுமனைப் பட்டா வழங்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. இதற்காக முதிய தம்பதியர் அமைச்சருக்கு கண்ணீர் மல்க நன்றி தெரிவித்தனர்.