Advertisment

“சமூகநீதியிலும், உயர்கல்வி மேம்பாட்டிலும் அரசு சமரசம் செய்து கொள்ளாது” - அமைச்சர் கோவி. செழியன்!

govi-chezhiyan

2025ஆம் ஆண்டு தமிழ்நாடு தனியார் பல்கலைக்கழகங்கள் (திருத்தச்) சட்டமுன்வடிவு மறு ஆய்வு செய்யப்படும் என உயர்கல்வித் துறை அமைச்சர்  கோவி. செழியன் தெரிவித்துள்ளார்.  இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழ்நாடு தனியார் பல்கலைக்கழகங்கள் (திருத்தச்) சட்டமுன்வடிவு குறித்து சமூக ஊடகங்களிலும், பொது வெளியிலும் பல்வேறு கருத்துகள் தெரிவிக்கப்பட்டு வரும் நிலையில் இப்பொருள் குறித்து சில விவரங்களைத் தெரிவித்துக்கொள்ள விரும்புகிறேன்.தற்போது தமிழ்நாட்டில் உயர்கல்வியில் சேரும் மாணவர்களின் சதவீதம் இந்தியாவிலேயே அதிகபட்சமாக உள்ள நிலையில், மேலும் அதிகமான எண்ணிக்கையில் உயர்கல்வி நிறுவனங்கள் தமிழ்நாட்டில் துவக்கப்படுவதற்கான தேவை உள்ளது என்பதை அனைவரும் அறிவோம். 

Advertisment

இந்தச் சூழ்நிலையில் தற்போது இயங்கிவரும் தனியார் கல்வி நிறுவனங்கள், மாநில தனியார் பல்கலைக்கழகங்களாக உயர விழையும்போதும், புதிதாக தனியார் பல்கலைக்கழகங்கள் தொடங்குவதற்கும் தற்போதுள்ள சில வழிமுறைகளை எளிமைப்படுத்தப்பட வேண்டும் என்ற நோக்கத்திற்காக இந்தச் சட்டமுன்வடிவு கொண்டுவரப்பட்டது. அதேசமயம் இச்சட்டத்திருத்தத்தில் இவ்வாறு தனியார் பல்கலைக்கழகங்கள் உருவாகும்போது அதனால் மாணவர்கள் நலனோ, பணியாற்றும் ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர் அல்லாத பணியாளர்கள் நலனோ, எந்த வகையிலும் பாதிக்கப்படாத வண்ணம் உரிய சட்ட பாதுகாப்புகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. 

Advertisment

tn-sec

உயர்கல்வியை பொறுத்தவரை இந்தியாவிலேயே முதன்மை மாநிலமாக திகழ்ந்துவரும் தமிழ்நாட்டில், தற்போதுள்ள தமிழ்நாடு தனியார் பல்கலைக்கழகங்கள் சட்டம் 2019, பிரிவு 4-இன்படி, தனியார் பல்கலைக்கழகங்களை நிறுவுவதற்கு குறைந்தபட்ச நில அளவு 100 ஏக்கர் தொடர்ச்சியான நிலம் தேவைப்படுகிறது. ஆனால் மாநகராட்சி, நகராட்சி மற்றும் பேரூராட்சிப் பகுதிகளில் அத்தகைய மிகப்பெரிய அளவிலான தொடர்ச்சியான நிலத்தை அடையாளம் காண்பது மிகவும் கடினமாக உள்ளது. எனவே, வேகமாக நகரமயமாகி வரும் தமிழ்நாட்டில் நிலங்களின் மதிப்பும் உயர்ந்து வருவதால் புதிய பல்கலைக்கழகங்களைத் தொடங்குவதற்கும், பெரிய கல்லூரிகள் பல்கலைக்கழகங்களாக தங்களை மாற்றிக்கொள்ள அல்லது தரம் உயர்த்திக்கொள்ள விழையும்போதும் மேற்படி குறைந்தபட்ச நில அளவின் தேவை ஒரு சவாலாக உள்ளது. தனியார் இந்தச் சூழ்நிலையில் பிற அண்டை மாநிலங்களின் பல்கலைக்கழகங்களின் சட்டங்களுக்கு இணங்க, நிலத்தின் அளவு குறைக்கப்பட்டால், பல்கலைக்கழகங்களாக மாற விரும்பும் தனியார் கல்வி நிறுவனங்கள் அதற்கான முயற்சிகளை மேற்கொள்ளும் வாய்ப்புகள் ஏற்படும் என்ற கருத்துகள் பெறப்பட்டன.

 இதன் மூலம். புதிய தனியார் பல்கலைக்கழகங்கள் தமிழ்நாட்டில் அமைவதையும், விதிமுறைகளின்படி தகுதியுள்ள தனியார் கல்லூரிகள் மாநில தனியார் பல்கலைக்கழகங்களாக மாற்றம் பெறுவதையும் ஊக்குவிக்க முடியும். எனவே, மாணவர் சமூகத்தின் நலனுக்காகவும், மாநிலத்தில் உயர்கல்வியை மேலும் மேம்படுத்தவும். தமிழ்நாட்டில் தனியார் பல்கலைக்கழகங்களை நிறுவுவதற்குத் தேவையான நிலங்கள் தொடர்பான விதிமுறைகளை எளிமைப்படுத்த இந்த சட்டமுன்வடிவு கொண்டுவரப்பட்டுள்ளது. இந்தப் புதிய சட்டமுன்வடிவின்படி குறைந்தபட்ச நில அளவாக மாநகராட்சி பகுதியில் 25 ஏக்கரும், நகராட்சி அல்லது பேரூராட்சி பகுதியில் 35 ஏக்கரும், பிற பகுதிகளில் 50 ஏக்கரும் என வரையறுக்கப்பட்டுள்ளது. சமூகநீதியிலும் உயர்கல்வி மேம்பாட்டிலும் ஆழ்ந்த அக்கறையும் ஈடுபாடும் கொண்ட திராவிட மாடல் அரசு, எந்த நிலையிலும் கொள்கையில் சமரசம் செய்து கொள்ளாது. 

mks-1

ஆசிரியர் நியமனம் மற்றும் மாணவர் சேர்க்கையில் இட ஒதுக்கீட்டை பின்பற்றுவது, கல்விக் கட்டணத்தை அரசே நிர்ணயிப்பது, பணியாளர் நலனை பாதுகாப்பது போன்ற அம்சங்களை உத்தரவாதப்படுத்தியும், தமிழ்நாட்டின் பாரம்பரிய கல்லூரிகள் அடுத்த உயர்நிலையை எட்டுவதை மனதில் கொண்டு இந்த சட்டத் திருத்தம் கொண்டு வரப்பட்டது. அதேசமயம் மாநில இடஒதுக்கீட்டு உரிமையை கருத்தில்கொள்ளாத நிகர்நிலைப் பல்கலைக்கழகங்களுக்கு இதுகாறும் நம் அரசு அனுமதி அளிக்கவில்லை என்பதையும் இந்தத் தருணத்தில் சுட்டிக்காட்ட விழைகிறேன். 

இருப்பினும், இப்பொருள் குறித்து சட்டமன்றப் பேரவையில் மரியாதைக்குரிய சட்டமன்ற உறுப்பினர்கள் சிலர் தெரிவித்த கருத்துக்களின் அடிப்படையிலும், சமூக ஊடகங்களிலும், பொது வெளியிலும் தெரிவிக்கப்பட்டுள்ள கருத்துகளின் அடிப்படையிலும் இந்தச் சட்ட முன்வடிவு குறித்து கல்வியாளர்கள், துறை சார்ந்த வல்லுநர்கள், கல்வித்துறை அலுவலர்கள் ஆகியோரின் கருத்துக்களைப் பெற்று, அதன் அடிப்படையில் உரிய மேல் நடவடிக்கை தொடரலாம் என்று  முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார். எனவே முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவுரையின்படி இந்தச் சட்டமுன்வடிவு திரும்பப் பெறப்பட்டு உரிய மறு ஆய்வு செய்யப்படும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

withdraw tn govt Govi. Chezhian bill University private
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe