விஜய்யின் கடைசிப் படமான ‘ஜன நாயகன்’ படம் பொங்கல் தினத்தை முன்னிட்டு நாளை (09-01-26) திரைக்கு வருவதாக இருந்தது. ஆனால் படத்துக்கு தணிக்கை சான்றிதழ் வழங்காததால், ஜனநாயகன் படத்தை ஒத்திவைப்பதாகவும் புதிய வெளியீட்டு தேதி விரைவில் அறிவிக்கப்படும் எனவும் தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.
ஜனநாயகன் படத்துக்கு தணிக்கை சான்றிதழ் வழங்காததால், திரைத்துறையில் இருந்து விஜய்க்கு ஆதரவு குரல்கள் எழுந்துள்ளது. அதுமட்டுமல்லாமல் ஜனநாயகன் படத்துக்கு தணிக்கை சான்றிதழ் வழங்காததற்கு மத்திய பா.ஜ.க அரசு தான் காரணம் என்று காங்கிரஸ் தலைவர்கள் குற்றம் சாட்டி விஜய்க்கு ஆதரவு கொடுத்துள்ளனர். அந்த வகையில், காங்கிரஸ் எம்.பிக்களான மாணிக்கம் தாகூர், ஜோதிமணி மற்றும் காங்கிரஸ் கட்சியின் தரவு மேலாண்மை மற்றும் வல்லுநர் குழுவின் தலைவரான பிரவீன் சக்கரவர்த்தி ஆகியோர் மத்திய அரசை கடுமையாக விமர்சித்து விஜய்க்கு ஆதரவாக கருத்து தெரிவித்துள்ளனர்.
இந்த நிலையில், இந்த விவகாரம் குறித்து தமிழக அமைச்சர் கே.என்.நேரு பதிலளித்துள்ளார். இன்று செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய அமைச்சர் கே.என்.நேருவிடம், ஜனநாயகன் பட விவகாரம் தொடர்பாக கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், “மத்திய அரசு தணிக்கை அமைப்பை வைத்திருக்கிறது. இதற்கும் எங்களுக்கும் என்ன சம்பந்தம்?. அவர்கள் கொடுக்க போகிறார்கள் இவர்கள் வாங்க போகிறார்கள். எங்களுக்கும் அதற்கும் என்ன சம்பந்தம் இருக்கிறது?. விஜய்க்கு காங்கிரஸ் ஏன் குரல் கொடுக்கிறார்கள் என்று எனக்கு தெரியவில்லை, புரியவில்லை” என்று கூறினார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/media_files/2026/01/08/kn-2026-01-08-15-44-22.jpg)