தமிழக நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை அமைச்சராக கே.என்.நேரு பொறுப்பு வகித்து வருகிறார். இந்த துறையின் கீழ் டெண்டர் எடுப்பதில் மட்டும் ரூ.1,020 கோடி ஊழல் நடந்திருப்பதாக அமலாக்கத்துறை குற்றம்சாட்டியுள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்ய வேண்டும் என தமிழக தலைமைச் செயலாளர் மற்றும் டிஜிபிக்கு அமலாக்கத்துறை கடிதம் எழுதி அனுப்பியுள்ளது.
அதாவது இந்த துறையில் டெண்டர்கள் மற்றும் ஒப்பந்தங்கள் ஆகியவை யாருக்கு கொடுக்க வேண்டும் என்று முன்பே முடிவு செய்யப்பட்டு ஒவ்வொரு டெண்டர்களுக்கும் 7.5% முதல் 10% வரை லஞ்சம் வசூலிக்கப்பட்டதாகவும், இந்த ஊழல் ரூ.1,020 கோடி வரை நடந்திருக்கலாம் எனவும் அமலாக்கத்துறை குற்றம்சாட்டியுள்ளது. தமிழக நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையின் அமைச்சராகப் பொறுப்பு வகித்து வரும் கே.என்.நேரு மீது ஊழல் குற்றச்சாட்டு வந்திருப்பது தமிழகத்தில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக தமிழக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில் தன் மீதான குற்றச்சாட்டுக்கு அமைச்சர் கே.என்.நேரு பதிலளித்துள்ளார். இது குறித்து அவர் தனது எக்ஸ் பக்கத்தில், “எனது துறையின் சாதனைகளை மறைத்து அதிமுக- பா.ஜ.க கூட்டணி அமலாக்கத்துறையை ஏவி விட்டு நடத்தும் நாளொரு புகார், பொழுதொரு அவதூறுப் பிரச்சாரத்தை சட்டப்படி எதிர்கொள்வேன். ஒவ்வொரு துறையிலும் திராவிட மாடல் அரசின் சாதனைகளை பொறுத்துக் கொள்ள முடியாத எதிர்கட்சிகளின் வரிசையில் அமலாக்கத்துறையையும் சேர்ந்து கொண்டு, அதை ஒன்றிய பா.ஜ.க. அரசின் ஏவல் துறையாக்கி- நாளொரு புகாரும், பொழுதொரு பிரச்சாரமுமாக என்னைக் குறி வைத்து தொடர்ந்து அவதூறில் ஈடுபட்டு வருவது மிகுந்த கண்டனத்திற்குரியது. கடந்த ஐந்து வருடங்களில் எனது துறையின் கீழ் 24 ஆயிரத்து 752 கிலோ மீட்டர் சாலைகள் போடப்பட்டுள்ளன. கிராமப்புற மக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்யும் வகையில் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தின் மூலம் 1 கோடியே 22 லட்சத்திற்கும் மேற்பட்டோருக்கு பாதுகாக்கப்பட்ட குடிநீர் வழங்கும் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளன. இன்னும் 77 லட்சத்து 28 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்களுக்கு பாதுகாப்புத் திட்டங்கள் வடிவமைக்கப்பட்டு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
சென்னை என்றால் தொல்காப்பிய பூங்கா, கோவை என்றால் செம்மொழிப் பூங்கா என்பதோடு மக்கள் கண்டுகளிக்க தங்களது பொழுது போக்கிற்கா ஏற்ற பூங்காக்களை திராவிட மாடல் அரசு போல் தமிழ்நாட்டில் அதிமுக அரசும் செய்யவில்லை. மற்ற மாநிலங்களில் உள்ள பா.ஜ.க. ஆளும் அரசுகளும் செய்யவில்லை. அதனால்தான் எனது துறையின் திராவிட மாடல் வளர்ச்சி எதிர்கட்சிகளின் கண்ணை உறுத்துவதை விட அமலாக்கத்துறையின் கண்களையும் உறுத்துகிறது. பேருந்து நிலையங்கள் என்று எடுத்துக் கொண்டால் இதுவரை 158 பேருந்து நிலையங்கள் மாநிலம் முழுவதும் அமைக்கப்பட்டுள்ளது. மக்களின் அன்றாடப் பயணத்திற்கு மட்டுமல்ல, அத்தியாவசியப் போக்குவரத்து தேவைக்கான அடிப்படை வசதிகளை உருவாக்குவதில் எனது துறை வரலாற்று சிறப்பு மிக்க சாதனைகளைச் செய்திருக்கிறது. மாநிலத்தின் பல்வேறு பகுதிகளிலும் கடந்த ஐந்தாண்டுகளில் மாற்றும் அளவிற்கு வெள்ளத் தடுப்பு பணிகளை மேற்கொண்டிருக்கிறோம். சென்னையில் அதிமுக ஆட்சியில் சாலைகளும், சப்வேக்களும் ஒரு மழைக்கே வெள்ளக்காடாக காட்சியளித்ததை அனைவரும் அறிவர். ஆனால் இன்று சென்னையில் உள்ள சப்வேக்களில் தண்ணீர் தேங்காத நிலையை உருவாக்கியிருக்கிறோம். செம்பரம்பாக்கம் என்றாலே அதிமுக ஆட்சிதான் நினைவுக்கு வரும். அந்த நிலையை மாற்றி எத்தகையை மழை வெள்ளத்திலும் எத்தனை முறை செம்பரம்பாக்கத்தில் தண்ணீர் திறந்தாலும் மக்களின் பாதுகாப்பை உறுதி செய்து இன்னலின்றி மழை வெள்ளத் துயரங்களில் இருந்து சென்னை மக்களை காப்பாற்றியிருக்கிறோம்.
அந்த வகையில் சென்னை மாநகாராட்சியில் மட்டும் 1519 கிலோ மீட்டர் தொலைவிற்கு மழைநீர் கால்வாய் பணிகளை செய்துள்ள அரசு இந்த திராவிட மாடல் அரசு மட்டும்தான். இந்த சாதனைகளை பொறுத்துக் கொள்ள முடியாத சட்டமன்றத் தேர்தலுக்கு புதிய அவதாரம் எடுத்துள்ள அதிமுக- பா.ஜ.க. கூட்டணி கட்சியினரின் தூக்கத்தை இந்த அரசின் சாதனைகள் கலைத்து விட்டன. குறிப்பாக பா.ஜ.க.வினரை இந்த சாதனைகள் ரொம்பவே மிரட்டுகிறது. ஒன்றிய நிதியை முடக்குகிறோம். ஆளுநரை வைத்து முட்டுக்கட்டை போடுகிறோம். ஏஜென்ஸிகளை விட்டு பிரச்சாரம் செய்கிறோம். ஆனாலும் சாதனைகள் செய்கிறார்களே என்ற எரிச்சல். எனவே எத தின்னால் பித்தம் தெளியும் என திண்டாடுகிறார்கள். ஆகவே அமலாக்கத்துறை போன்ற ஏஜென்ஸிகளை ஏவி விடுகிறார்கள். ஒன்றிய பா.ஜ.க. அரசு செய்ய வேண்டிய அரசியல் பிரச்சாரத்தை அமலாக்கத்துறையையே வைத்து செய்கிறார்கள். தன்னாட்சி மிக்க அமைப்பு என உருவாக்கப்பட்ட அமலாக்கத்துறை இன்று பா.ஜ.க.வின் துணை அமைப்பாக்கப்பட்டிருக்கிறது. என் சகோதரர் மீது 2013ல் வாங்கிய கடனை வைத்து போடப்பட்ட வழக்கை உயர்நீதிமன்றம் எந்த குற்றமும் நடக்கவில்லை என ரத்து செய்து விட்டது. அதன் அடிப்படையில் அமலாக்கத்துறை பதிவு செய்த முதல் தகவல் அறிக்கையை ஏற்கனவே உயர்நீதிமன்றத்தின் டிவிஷன் பெஞ்சும் ரத்து செய்து விட்டது. ஆனாலும் அமலாக்கத்துறையை மீண்டும் மீண்டும் பிரச்சாரத்தில் ஈடுபடச் சொல்லி ஒன்றிய பா.ஜ.க. அரசு நிர்பந்திக்கிறது என்றால் அவர்களுக்குப் பயம் நானல்ல, இந்த துறை செய்துள்ள சாதனைகள்.
எனது துறைக்குள் எங்கு நுழைந்து பார்த்தாலும் எங்கும் சாதனை- சாதனை- சாதனை என்றுதான் எதிரொலிக்கும். ஆனால் அதுவே ஒன்றிய பா.ஜ.க. அரசு தூண்டிவிடும் அமலாக்கத்துறையின் கண்களுக்கு ஆதாரமற்ற புகார்களாகத் தெரிகிறது. அப்பட்டமான அரசியல் செய்யத் தூண்டிவிடப்படுகிறது. மக்கள் போற்றும் எனது துறையின் சாதனைகளைப் பார்த்து வெதும்புவர்களுக்கு பதில் சொல்ல முடியாது. ஆனால் ஒன்று மட்டும் நான் தெளிவாகக் கூறிக் கொள்ள விரும்புகிறேன். எனது நகராட்சிகள் மற்றும் குடிநீர் வழங்குதல் நிர்வாகத்துறையைப் பொறுத்தமட்டில் பாதுகாக்கப்பட்ட குடிநீர் மக்களுக்கு வழங்குதல், மழை நீர் வடிகால் பணிகளை நிறைவேற்றுதல், தலை சிறந்த பூங்காக்களை அமைத்தல் ஆகியவையே முதன்மையான பணிகள், முழுமையான சாதனைகள். மற்றபடி என் மீது சொல்லப்படும் குற்றச்சாட்டுகளை சட்டப்படி எதிர்கொள்வேன் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன். மக்கள் பணியாற்ற வந்துள்ள நாங்கள் ஒன்றிய பா.ஜ.க. அரசின் தூண்டுதலில் அரசியல் பிரச்சாரத்தில் ஈடுபடும் அமலாக்கத்துறைக்கோ அல்லது அதிமுக- பா.ஜ.க கூட்டணியினர் பொய்யையும், புரட்டையும் மட்டுமே மூலதனமாக வைத்து ஈடுபடும் அவதூறுப் பிரச்சாரத்திற்கோ அஞ்சமாட்டோம்” என்று தெரிவித்துள்ளார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/media_files/2025/12/08/knnehru-2025-12-08-20-16-45.jpg)