தமிழக வெற்றிக் கழகத்தின் 2வது மாநில மாநாடு நேற்று (21.08.2025) மதுரை மாவட்டம் பாரபத்தி கிராமத்தில் பிரமாண்டமாக நடைபெற்றது. சுமார் 2.5 லட்சத்திற்கும் மேற்பட்ட தொண்டர்கள் பங்கேற்ற மாநாட்டில் விஜய்யின் பேச்சு தற்போது தமிழக அரசியலில் பேசுபொருளாக மாறியுள்ளது. குறிப்பாக திமுக, பா.ஜ.க ஆகிய இரண்டு கட்சிகளை கடுமையாக விமர்சித்து பேசியிருந்தது விவாதப்பொருளாக மாறியுள்ளது.
மாநாட்டில் விஜய் பேசியதாவது, “வெற்று விளம்பரம் மாடல் திமுக என்ன செய்கிறது என்று தெரியுமில்ல. பாஜகவுடன் உள்ளுக்குள் ஒரு உறவை வைத்துக் கொண்டு வெளியில் எதிர்ப்பதுபோல எதிர்ப்பது. எதிர்க்கட்சியாக இருக்கும் பொழுது ‘போங்க மோடி’ என பலூன் விடுவது, ஆளுங்கட்சியாக இருக்கும் பொழுது குடைபிடித்து கும்பிடு போடுவது. இது மட்டுமா ஒரு ரெய்டு என வந்துவிட்டால் போகாத ஒரு மீட்டிங்கை காரணம் காட்டி டெல்லிக்கு போவது. அங்க ஒரு சீக்ரெட் மீட்டிங் நடத்துவது. நல்ல நோட் பண்ணணும் மக்களே அந்த மீட்டிங்கிற்கு அப்புறம் அந்த இஷ்யூ அப்படியே காணாமல் போய் இருக்குமே. அதுதான் ஸ்டாலின் அங்கிள் இட்ஸ் வெரி ராங் அங்கிள்.
ஒரு தவறு செய்தால் அதை தெரிந்து செய்தால் அது கபட நாடக மு.க ஸ்டாலின் அங்கிளாகவே இருந்தாலும்... அங்கிள், அங்கிள் உங்களுக்கு மனசாட்சி ஒன்று இருந்தால் நாங்கள் கேட்கும் கேள்விகளுக்கு பதில் சொல்லுங்கள். நீங்கள் நடத்துகிற இந்த ஆட்சியில் நேர்மை இருக்கிறதா?. நியாயம் இருக்கிறதா?. ஊழல் இல்லாமல் இருக்கிறதா? சட்ட ஒழுங்கு சரியா இருக்கிறதா? பெண்களுக்கு பாதுகாப்பு இருக்கிறதா? சொல்லுங்கள் மை டியர் அங்கிள், சொல்லுங்கள். பெண்களுக்கு ரூ.1000 கொடுத்திட்டா போதுமா அங்கிள்?. படிக்கிற இடத்தில் வேலைக்கு போற இடத்தில் என எல்லா இடத்திலும் பாதுகாப்பு இல்லையென பெண் பிள்ளைகள் கதறுகிறார்கள். அந்த கதறல் சத்தம் ஏதாவது உங்கள் காதில் கேட்கிறதா அங்கிள்?” என்று முதல்வர் மு.க.ஸ்டாலினை கடுமையான விமர்சித்து பேசியிருந்தார். இது குறித்து திமுக தலைவர்கள் பதிலடி கொடுத்து வருகின்றனர்.
அந்த வகையில் தமிழக நகராட்சி நிர்வாகம், நகர்ப்புற மற்றும் நீர் வழங்கல் துறை அமைச்சர் கே.என்.நேரு விஜய்க்கு பதிலடி கொடுத்துள்ளார். திருச்சியில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் கே.என்.நேருவிடம், முதல்வரை அங்கிள் என விஜய் கூறியிருக்கிறாரே என கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த கே.என்.நேரு, “அவருடைய தராதரம் அவ்வளவு தான். ஒரு மாநில முதல்வர், ஒரு பெரிய கட்சியினுடைய தலைவராகவும் 40 ஆண்டுகால அரசியலிலும் இருக்கிறார். நேற்று அரசியலுக்கு வந்துவிட்டு அவரை தரம் தாழ்ந்து விமர்சனம் செய்கிறார். அதற்கு மக்கள் நல்ல பதிலை கொடுப்பார்கள். நாங்களும் தேர்தலில் தக்க பதிலடி கொடுப்போம், அதில் எந்த மாற்றமும் இல்லை. ஒரு 10,50 பேர் கூடிவிட்டார்கள் என்றால் எது வேண்டுமென்றாலும் பேசலாமா?” என்று ஆவேசமாகப் பதிலளித்தார்.