ஸ்ரீவில்லிபுத்தூரில் தமிழ்நாடு தலைகுனியாது எனும் திமுக பிரச்சார பொதுக்கூட்டத்தில் அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.இராமச்சந்திரன் பங்கேற்று பேசினார். அதில் அவர், “யார் யாரோ கட்சி ஆரம்பிக்கிறார்கள். ஆனால் இந்தக் கட்சிக்கு (திமுக) எழுபத்தைந்து ஆண்டு கால வரலாறு இருக்கிறது. இன்னும் சொல்லப்போனால், இதுவே ஒரு பெரிய உபகாரம்.​ ஒருமுறை ஒருவர் என்னிடம் ஒரு அமைப்பு பற்றி பேசினார். அப்போது நான் அவரிடம் சொன்னேன், ‘ஒரு ஊரில் பத்து வீடுகள் தான் இருக்கும். அந்த பத்து வீடுகளில் ஒரு வீட்டில் கூட, ஒரு திமுக தோழர் கருப்புக் கொடியை பிடித்துக் கொண்டு நின்றிருப்பார். வீடுகள் நூறு இருக்க வேண்டிய அவசியமே இல்லை. பத்து இருந்தாலே போதும். அந்த பத்து வீடுகளில் ஒருத்தன் திமுக கொடியை கருப்புக் கொடியாக உயர்த்தி நிற்பான். அதுதான் திமுக அமைப்பு’ என்று சொன்னேன்.
திமுக இல்லாத ஊரே கிடையாது. எந்த ஊருக்குப் போனாலும், ஒரு கிழிந்த வேட்டியை கட்டிக்கொண்டு, கருப்பு சிகப்பு கரை வேட்டியுடன் ஒரு திமுக தோழர் உட்கார்ந்திருப்பார். அதுதான் திமுக. இந்த திமுக இயக்கம். 75 ஆண்டுகள் ஆனாலும், இன்னும் அதே பலத்தோடு நிற்கிறது. இளைஞரணி சந்திப்பில் நாம் ஒரு லட்சம் பேரை கூட்டினோம். ஒரு லட்சம் பேர் திரண்ட கூட்டம். எவ்வளவு சிறப்பாக அந்த மாநாடு நடந்தது. கூட்டம் முடிந்த அரை மணி நேரத்திற்குள் முழு டிராபிக்கையும் கிளியர் செய்து விட்டோம். அரை மணி நேரம் தான் எடுத்தது. அதோடு நிறுத்தவில்லை, வந்த எல்லா வாகனங்களும் பாதுகாப்பாக ஊர் சேர்ந்ததா என்று தொடர்ந்து விசாரித்தோம். ராத்திரி மூன்று மணி வரை, கன்னியாகுமரி வரை மாவட்டச் செயலாளர்களிடம், ‘வண்டி சரியா போய்ச் சேர்ந்ததா?’ என்று கேட்டுக்கொண்டே இருந்தோம். இங்கே சிலர் 41 பேரை காலி பண்ணிட்டு நாங்களும் கட்சி நடத்துகிறோம் என்று சொல்கிறார்கள். ஒரு கூட்டம் நடத்தி 41 பேரு காலி.
வேடிக்கை பார்த்தவன், பக்கத்து வீட்டுக்காரன், அங்கே கூட்டம் நடத்துறவன் வீட்டுக்கு பக்கத்துல இருக்கிற வீட்டுக்காரன், குழந்தைகள் இவங்கள்லாம் காலி. இவங்கள்லாம் கட்சி நடத்தினா என்ன கதியாகும்? இதெல்லாம் ஒரு கட்சியா? இப்படிப்பட்ட கட்சிகளால் என்ன சாதிக்க முடியும்? நம்மிடம் ஒரு லட்சம் பேர் திரண்டு நின்றார்கள். அதோடு, கடுமையான கட்டுப்பாடு. தலைவர் நடந்து வரும்போது, நீங்கள் யூடியூபில் பார்த்திருப்பீர்கள் யாராவது துண்டு வீசி அடித்தார்களா? யாராவது கையைப் பிடித்தார்களா? காலைப் பிடித்தார்களா? இல்லை. தலைவர் என்றால் தலைவர் தான். ராஜாவைப் போல ஜம்மென்று நடந்து வர்றாரு. கீழே இருக்கிற நாங்கள் எல்லோரும் சோல்ஜர்களைப் போல ஒழுங்காக நின்றோம். நட என்றால் நடப்போம். அதுதான் கட்டுப்பாடு உள்ள இளைஞர்கள். இளைஞர்கள் எல்லா கட்சியிலும் இருக்கிறார்கள். ஆனால் எங்களிடம் இருக்கும் இளைஞர்கள் கட்டுப்பாடு உள்ள இளைஞர்கள்.
தலைவர் சொன்னால் விசில் அடித்து ஆரவாரம் செய்ய மாட்டார்கள். ஒழுங்காக பனியன் போட்டு, ஒழுங்காக வருவார்கள், ஒழுங்காக சாப்பிட்டு அமைதியாகப் போவார்கள். இந்த ஒழுங்கை திமுக ஒன்றால் மட்டுமே உருவாக்க முடியும். வேறு யாராலும் முடியாது. 21ஆம் தேதி மதுரையில் நமக்கு மாநாடு. ஒரு லட்சம் பேருக்குக் குறைவாக கூட்டம் இருக்குமா? நம்ம தலைவர், சின்னத் தலைவர் வந்தால், மினிமம் ஒரு லட்சம் பேர். எவ்வளவு பெரிய இயக்கம் இது. இந்த இயக்கத்தை எந்தக் கொம்பனாலும் ஆட்டி அசைக்க முடியாது. நீங்கள் இருக்கிறவரை திமுக இருக்கும். நீங்கள் இருக்கிறவரை தளபதி ஸ்டாலின் முதலமைச்சராக இருப்பார். இன்னும் சொல்லப்போனால், இந்த இயக்கம் பற்றி முன்பும் இப்படித்தான் சொன்னார்கள்.
அண்ணா மறைந்தபோது கட்சி முடிந்தது என்றார்கள். அண்ணாவுக்குப் பிறகு கலைஞர் வந்தார். கலைஞர் மறைந்தபோது கட்சிக்குள் குழப்பம் என்றார்கள். அதற்குப் பிறகு தளபதி வந்தார். தளபதிக்கு பின்னாலும் நாம் தயாராக வைத்திருக்கிறோம். ஒரு இளம் தலைவர் இருக்கிறார். இன்னும் 20, 25 ஆண்டுகள் தளபதி ஸ்டாலின் முதலமைச்சராக இருப்பார். அவருக்குப் பிறகும் அந்தக் கொடியை தாங்கிப் பிடிக்க இளைய தலைவர் தயாராக இருக்கிறார். இந்தக் கட்சியை யாராலும் எதுவும் செய்ய முடியாது. நாம் பெருமையோடு இந்தக் கட்சியில் இருப்போம். நான் திமுக காரன் என்று சொல்வதில் நாம் அனைவரும் பெருமைப்படுவோம்” என்று உணர்வுபூர்வமாகப் பேசினார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/media_files/2026/02/12/kkssrr-2026-02-12-23-24-09.jpg)