திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் திமுக ஒன்றியச் செயலாளர் வீரா சாமிநாதனின் மகன் ஸ்ரீகாந்த் - வீரவர்ஷினி ஆகியோரின் திருமண விழாவில் தமிழக துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டார். அப்போது அவர் பேசுகையில், “இன்றைக்கு இந்த அரங்கத்திற்கு என்னுடைய வாகனத்திலிருந்து இறங்கி வரும்போது கூட உங்களுடைய எழுச்சியும் உங்களுடைய அன்பையெல்லாம் பார்த்துவிட்டுத் தான் வந்திருக்கின்றோம். முழுதாக மேடைக்கு வந்து சேருவேன் என்ற நம்பிக்கை எனக்குக் கொஞ்சம் குறைவாகத்தான் இருந்தது.
என்னுடைய கைகளோடு நான் வருவேனா?. முழுதாக வருவேனா?. அப்படியென்று சந்தேகம் வருகிறது. ஆனால் என்றைக்குமே கை நம்மை விட்டுப் போகாது. நான் என்னுடைய கையை சொன்னேன்” எனப் பேசினார். இந்நிலையில் ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் ஐ. பெரியசாமி, ‘பணக்காரர் வீட்டு நிகழ்ச்சிக்கே காங்கிரஸ் தலைவர்கள் வருவார்கள்’ என்று காங்கிரஸ் கட்சியின் எம்.பி. ஜோதிமணி முன்னிலையில் பேசியுள்ளார். இது தொடர்பாக அமைச்சர் ஐ. பெரியசாமி பேசுகையில், “ஜோதிமணி கூட இங்கே இருக்கிறார்கள். ஏனென்றால் காங்கிரஸ் கட்சியின் பெரிய தலைவர்கள் பணக்காரர்கள் வீட்டு நிகழ்ச்சிக்குத் தான் வருவார்கள்.
நான் அவரை குறைத்துச் சொல்லவில்லை. ஆனால் நம்முடைய இயக்கத்தை (திமுக) பொறுத்தவரையில் சாமானியர்களைச் சாதாரணமானவர்களை உயர்த்திப் பிடித்து அவர்களுக்கு மதிப்பளிக்கக்கூடிய இயக்கம் நம்முடைய இயக்கம் (திமுக). பணத்தால், செல்வத்தால் நாம் உயரவில்லை. இந்த இயக்கத்தால் தான் இன்றைக்கு அமைச்சர்களாக இந்த மேடையிலே வீற்றிருக்கிறோம் என்றால் அதற்கு இந்த இயக்கம் தான் காரணம்” எனப் பேசியுள்ளார். அமைச்சர் ஐ. பெரியசாமியின் இந்தப் பேச்சு தமிழக அரசியல் வட்டாரத்திலும், காங்கிரஸ் கட்சியினர் மத்தியிலும் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.